திரைப்பட ரசனை மற்றும் திரைப்பட உருவாக்கப் பயிற்சி.

சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில்  சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே

எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.

இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.

இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.

பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.

நாள்  நவம்பர் 21 22 மற்றும் 23

விண்ணப்பிக்க [email protected]

 

அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்

ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்

சுனீல்கிருஷ்ணன் தமிழ்விக்கி

ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.

இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?
இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?
உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?
இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.

ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.

சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.

அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

விண்ணப்பிக்க [email protected]

 

வரவிருக்கும் நிகழ்ச்சிகள்

 

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி

ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.

இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.

  • ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.
  • இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.

நாள்  நவம்பர் 28 29 மற்றும் 30

விண்ணப்பிக்க [email protected]

ஆலயக்கலை அறிமுகப் பயிற்சி

ஜெயக்குமார் பரத்வாஜ்- தமிழ்விக்கி

ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.

ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.

ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.

பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7

தொடர்புக்கு [email protected]

 

யோகப்பயிற்சி- முதல் நிலை

யோக அறிமுகப்பயிற்சி

சௌந்தர்ராஜன் தமிழ்விக்கி

எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.

சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.

யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.

நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14 

தொடர்புக்கு [email protected]

 

முந்தைய கட்டுரைஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைபக்தி இல்லாத வேதாந்தத்தைத் தேடி…