கஸல் இனிமை

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

உருது இலக்கிய வகுப்பிற்கு கிளம்பும் முன் தினமே, உதடுகளில் கஸல் பாடல்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டன. உருதுவில் கஸல் தவிர வேறெதுவும் அதிகப் பரிச்சயமில்லை. கஸல் பாடல்களை கேட்கத் துவங்கியது திருமணத்திற்கு பின் தான், கணவர் அறிமுகப்படுத்தியதால். ஹிந்தி, பள்ளிக்காலங்களில் படித்து, தேர்வுகள் எழுதி கற்றுக்கொண்டது எனினும் பேசுவதில், ஹிந்திப்பாடல்கள் கேட்பதில் விருப்பம் அதிகம். ஹிந்தி பாடல்களில் ஒலிக்கும் உருது சொற்கள் சில தெரியும். இத்தகைய பாடல்களை கேட்கையில் ஏதோ பூர்வ ஜன்ம தொடர்பு அந்த மொழியுடன் இருப்பதாக எப்போதும் தோன்றுவதுண்டு. அந்த மொழியின் இனிமை, அதன் சுவை எப்போதும் நான் கேட்டுணர்வது!

இந்த வகுப்பிற்கு வந்த பின் உருது பற்றி ஆசிரியர் ஃபயஸ் காதிரி சொன்ன தகவல்கள் என் பார்வையை விரிய வைத்தன. உருது இந்தியாவில் தோன்றிய மொழி, மற்றும் அது இஸ்லாமியர்கள் மொழி அல்ல, உருது மொழி அராபிய, பாரசீக மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இருந்து உருவாகியது போன்ற அடிப்படை தகவல்கள் ஆச்சரியமாக, கண்ணை திறப்பதாக இருந்தன. உருது மொழியின் தோற்றம், பிற உலக மொழிகளின் நடுவே அதன் இடம், அது வளர்ந்த விதம் மற்றும் காலம், அதனை வளர்த்தவர்கள், அதன் வகைகள், உருது இந்தியாவில் பரவிய விதம், உருது இலக்கியத்துக்கு பங்களித்த ஆசிரியர்கள், மன்னர்கள் என உருதுவின் வரலாற்றை, அதன் இலக்கிய வரலாற்றை, வடிவத்தை ஆசிரியர் காதிரி அவர்கள் அருமையாக சுவாரசியமாக விவரித்தார். வகுப்பை வடிவமைத்திருந்த விதம் கச்சிதமாக  இருந்தது. தமிழ்நாட்டில் கூட உருது படைப்பாசிரியர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற செய்தி யோசித்துப்பார்க்காததாய் இருந்தது. மொத்தத்தில் எல்லாமே புதிய தகவல்கள் எனக்கு. உருதுவிலிருந்து பிற மொழியில், குறிப்பாக தமிழ் மொழியில் கலந்துள்ள சொற்கள் (சால்ஜாப்பு, கச்சேரி, வக்கீல், வாய்தா ஆகியவை. இவை தமிழ் இல்லையா!) ஆச்சரியம் அளிப்பவையாய் இருந்தன.

உருது வளர்ந்ததற்க்குக் காரணம் அது பிற எல்லா மொழிகளையும் ஏற்றுக் கொண்டது தான் என்று அதன் இறுக்கமில்லா தன்மையை அவர் விளக்கியது ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருந்தது.

கூடவே அவருடைய இனிமையான, ஆழமான குரலில் பாடிய இறை வணக்கப் பாடல் வெகு இனிமை.

கஸல் கவிதைகளின் மீட்டர்கள் (அளவை) பற்றிய அறிமுகத்துடன் சில கஸல் மற்றும் கவாலி பாடல்களை கேட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த இனிய அறிமுக வகுப்பிற்காக உங்களுக்கும், ஆசிரியர் ஃபயஸ் காதிரி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நன்றியுடன்

மீனாட்சி ரவீந்திரன்

சென்னை

முந்தைய கட்டுரைநம் கதாபாத்திரங்கள்