ஏழாம் உலகின் கதை

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் காணொளியிலே நீங்கள் ஏழாம் உலகம்பட்டி பேசியிருந்ததை இப்போது கேட்டேன். என்னுடைய வாசிப்பில் உங்களுடைய படைப்பில் முதலானவதாக படித்தது ஏழாம் உலகம்தான். அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அப்போது கொடுத்தது. அந்த உலகம் உண்மையானதா வெறும் கற்பனையா என என் மனதுக்குள் அரற்றிக் கொண்டே இருந்தேன். ‘உண்மையானது என்றால் மானுடம் என்பதற்கு என்ன பொருள்? அரசியல் பண்பாடு கலை இலக்கியம் என்று நாம் சொல்வதற்கெல்லாம் என்ன பொருள்?’ என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் .ஆனால் பின்னர் அந்த தலைப்பு வழியாக்எனக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்தது. அது ஏழாம் உலகம். பாதாளம். அதன் மேல் தான் எல்லா உலகங்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து மேலே ஏது வருகிறதா என்று தெரியவில்லை .ஆனால் அனைத்தும் ஒரு பகுதி அங்கு சென்று கொண்டு இருக்கிறது .

அந்த நாவலை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன் .அதிலிருந்து தான் உங்களுடைய புனைவுலகுக்கு வந்து சேர்ந்தேன். உங்கள் படைப்புகளிலேயே மிக இருண்டது அதுதான். அந்த படைப்பு உருவாக்கும் ஆன்மீகமான கேள்விகளைத்தான் தொடர்ந்து படைப்புகளில் முன் வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த படைப்பில் இருந்த வாழ்க்கையில் இருக்கும் மனிதர் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஆன்மிகமான ஒரு உயரம் நிகழ்கிறது. குய்யன் உணவின் வழியாகவும், ராமப்பன் குருவியுடன் நான் கொண்ட உறவின் வழியாகவும், எருக்கு ஒரு தாலியின் வழியாகவும் அந்த உச்சத்தை உணர்கிறார்கள். அத்தனை பேருமே சேர்ந்து குயனுக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் போது அவர்கள் அனைவருமே ஒரு ஆன்மீகமான உயரத்தை அடைகிறார்கள். அவர்கள் சென்றடையும் அந்த உயரத்தில் ஒளி விளக்காக மாங்காண்டி சாமி இருந்து கொண்டிருக்கிறார்.

எந்த ஆழத்திலும் மனிதன் சென்று சேரும்மிக ஒளிமிக்க உச்சம் ஒன்று உண்டு என்று சொல்லும் ஒரு படைப்பு அது என்று நான் அதை மூன்றாவது வாசிப்பில் கண்டு கொண்டபோது என்னுடைய இலக்கிய ரசனை தெளிவடைந்து. உங்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் .உங்கள் படைப்புகளில் இன்னொரு மொழிக்கு போகக் கூடிய படைப்புதாநா என்று எனக்கு தெரியவில்லை .உங்களை எதிர்மறையான அழுத்தத்தை உருவாக்கியளிக்கும்எழுத்தாளர் என்று அவர்கள் நினைத்து விடக்கூடாது .ஆனால் ஏதோ ஒரு வகையில் அந்த படைப்பு உங்களை அடையாளப்படுத்து என்று நினைக்கிறேன்.

ஆ.மாரிச்செல்வம்

முந்தைய கட்டுரைகஸல் இனிமை