சமணர்களின் மெய்யான வரலாறு

அருகர்களின் பாதை வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் எழுதிய அருகர்களின் பாதை என்ற நூலை வாசித்தேன். இந்த நூலில் சமணர்களின் பெரும் பண்பாட்டை பயணம் செய்து அறிவதாக கூறுகின்றீர்கள். சமணர்களின் தளங்கள் வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள். அந்த புத்தகத்தில் சமணம் இந்தியாவில் எப்படி கொடூரமாக அழிக்கப்பட்டது என்பது பற்றிய சித்திரமே இல்லை. சமணர்கள் கழுவேற்றப்பட்டும் தீயில்விடப்பட்டும்  அழிக்கப்பட்ட சித்திரத்தை எழுதி இருந்தால் நீங்கள் நேர்மையாக வரலாற்றை அணுகி இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். மாறாக சமணர்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தியை மட்டுமே நீங்கள் உங்கள் நூலில் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பார்வையால் தான் உங்களிடம் இருந்து நான் வேறுபடுகிறேன். நீங்கள் நடத்தும் வகுப்புகளில் சமணம் பற்றியும் கற்பிக்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜஸ்டின் ராஜ்

அன்புள்ள ஜஸ்டின் ,

எந்த ஒரு நூலிலும் உங்களுக்கான காழ்ப்பரசியலை மட்டுமே பார்க்க முடியும் என்ற உங்கள் நிலை வருந்தத் தக்கது. நூல்கள் மனிதர்களை மாற்றும் என்ற நம்பிக்கை அடிபடும் தருணங்கள் இவை. இது எத்தனை நூல் படித்தாலும் காந்தமுள் வடக்கு நோக்கி உள்ளது போல எளிய வம்பரசியலில் இருந்து கிடைக்கும் பார்வையிலே ஓர் சராசரி அறிவுள்ளவர் நிலைகொள்ள முடியும் என்பதை இப்படித்தான் பார்க்கிறேன்.

இந்தியாவில் பல ஆயிரம் சமண ஆலயங்களும், அந்த ஆலயங்களைப் பற்றிய நேரடி வரலாற்றுப் பதிவுகளும் சமணர்களாலே எழுதி வைக்கப்பட்டுள்ளன .எங்கும் சமண் ஆலயங்கள் ம்தக்காழ்ப்பால் இடிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது பற்றிய வ்ரலாறுக் குறிப்புகள் இல்லை. மாறாக வெவ்வேறு படையெடுப்புகளில் அவை இடிக்கப்பட்டன என்பது பற்றி மட்டுமே உள்ளன. ஓர் ஆலயத்தில் சமணர்கள் தங்களைப் பற்றி என்ன எழுதி வைத்திருக்கிறார்களோ அதைப்பற்றி மட்டுமே நான் சொல்லி இருக்கிறேன்.

சமணர்கள் தமிழகத்தில் கழுவேற்றப்பட்டார்கள் என்று சைவர்கள் சொல்லும் ஒரு தொன்மம் உள்ளது .அதை எந்த சமண நூலும் சொல்லவில்லை, எந்த சமண வரலாற்று ஆசிரியரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. சமணர்களின் தமிழக வரலாறு மிக விரிவாக அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த தகவல் இல்லை .அது ஒரு கற்பனை என்று இன்று வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக நிறுவிவிட்ட பின்னரும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு அதை சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு ஒரு நிகழ்வு இங்கே நிகழ்ந்திருந்தாலும் கூட அதுபோன்று இன்னொரு நிகழ்வு இந்தியாவில் நிகழ்ந்ததாக எந்த தரப்பில் இருந்தும் பதிவு செய்யப்படுவதில்லை.

சமணம் அதனுடைய கடுமையான நோன்பு காரணமாக படிப்படியாக மக்களால் கைவிடப்பட்டது. இந்தியாவில் உருவான பக்தி இயக்கம் திருவிழாக்கள் மற்றும் இசையிலக்கியம், க்லை போன்றவற்றின் வழியாக பெருவாரியான மக்களை தனக்குள் இழுத்து ஆலயவ்ழிபாட்டு அமைப்புக்குள் கொண்டு வந்தமையால் சமணம் படிப்படியாக இல்லாமல் ஆகியது. ஆனால் முழுமையாக இல்லாமலாகவுமில்லை. இந்தியாவெங்கும் சமணம் உள்ளது. பல இடங்களில் வழிபாடின்றி சமண ஆலயங்கள் அப்படியே இருக்கின்றன

இதுவே இன்று வரை கொஞ்ச நேரம் அடிப்படை வாசிப்பறிவு கொண்ட எந்த வரலாற்று ஆசிரியரும் சொல்வதாக உள்ளது. வரலாறு நீங்கள் எண்ணுவது  போல உங்களுடைய அடியாள் அல்ல. உங்கள் பக்கத்திலே கன்னத்தில் மறுவோடு நின்று கொண்டு நீங்கள் கை காட்டுபவர்களை எல்லாம் கழுத்தை வெட்டும் குண்டனும் அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைநவீன உள்ளத்திற்கு கீதை
அடுத்த கட்டுரைசாதி, தத்துவம்- ஒரு கேள்வி.