
அன்புள்ள ஜெ,
தொடர்ச்சியான அலுவலக வேலைகள், காவியம் தொடர்பான கட்டுரைக்கான தயாரிப்பு, விவாதங்கள், துரியம் கடந்த சுடர் தொடர் கட்டுரைக்கான வாசிப்புகள், தேடல்கள், பன்னிரெண்டாம் வகுப்பு செல்லும் மைந்தனுக்கான உடனிருத்தல்கள் என நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. என் முன்னால் எழுத வேண்டிய இரண்டு பெரிய கட்டுரைகள் நின்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றையும் மிஞ்சி எதிர்வினை ஆற்றியே ஆக வேண்டும் என்ற ஒரு நிகழ்வு தமிழுக்கு நேர்ந்த அவமானம் என அறிவிக்கப்பட்ட இந்த ஞானபீட விருது.
இங்கே கீழடி பற்றி பேசாத வாய்கள் இல்லை. அனைத்தும் பேசிய ஒரே வரி தமிழை, தமிழ் பண்பாட்டை, தமிழ் தொன்மையை இருளடிக்கிறார்கள் என்பதே. அந்த கோணம் என்பதை மறுக்கப் போவதில்லை. ஆனால் கீழடி விவகாரத்தில் அது மட்டுமே கோணம் அன்று. ஆனால் இந்த விருது அறிவிப்பு எல்லா விதத்திலும் தமிழை இருளடிக்கும், இருளுக்குள் தள்ளும் முயற்சி தான். உண்மையில் கீழடிக்காக கூவிய வாய்கள் அனைத்தும் கூவ வேண்டியது இந்த விருதுக்கான தெரிவை எதிர்த்து தான். அது நடக்கப் போவ்
வாரணவதத்தில் பாண்டவர்களை சூழ்ச்சியால் வீழ்த்த ஒப்புதல் கொடுத்துவிட்டு தனக்கு பிரியமான ஏரிக்கரைக்கு செல்லும் துரியன் தன் தேரில் அமர்ந்திருக்கும் நேரமனைத்திலும் துப்பிக் கொண்டே வருவான். தன்னைப் பற்றி தானே கொண்ட அவமரியாதை, ஒவ்வாமை அனைத்தையும் காறி உமிழ்ந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று தான் அவன் அவ்வாறு செய்வான். விருது அறிவிப்பு அறிந்த நானும் அன்று முழுமையும் அப்படித் தான் இருந்தேன். சமீபத்தில் இத்தனை எரிச்சலோடு இருந்ததே இல்லை எனலாம். அலுவலகம், வீடு என கண்டு பொங்க வேண்டிய சிறுமைகளுக்கான சாத்தியங்கள் நிறைந்த சூழல்களில் எல்லாம் அனைத்தையும் எளிய புன்னகையோடு கடந்து செல்லும் என்னை நானே இவ்வாறு கண்டு ஆண்டு சில ஆகின்றன. விசாரித்த நண்பர்களிடமும், உறவுகளிடமும் காரணம் சொன்னால் கிடைத்த எதிர்வினை எரிகிற கொள்ளியில் விட்ட எண்ணெயென ஆனது. சரி எழுதிவிடுவோம் என நினைத்து எழுதிய கட்டுரை(உறையறிந்த வாளுக்கான பீடம்) முழுக்க முழுக்க பகடியாக இருந்தது. அந்த பகடி வழியாக மீண்டேன் எனலாம். ஆனால் அந்த பகடி என்னை வேறோர் கேள்விக்கு தள்ளியது. அதன் வழியாக நான் செய்தது என்ன? இந்த சிறுமையைக் கடத்தல், என்னளவில். அது எவ்வகையில் சரி? இக்கேள்வி என்னை சுழற்றிக் கொண்டு இருந்த போது தான் நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிட்ட மாபெரும் இலக்கிய விருதுக்கான அறிவிப்பு வந்தது.
ஆம். இது தான் சரியான வழி. சிறுமைக்கு பதில் என்பது அதைக் கடந்து செல்வதல்ல. அதை சிறியதாக்கி, அது ஒன்றுமேயில்லை என்ற அளவில் நாம் உயர்வதே சரியான வழி. இந்த வயதில் ஒரு குழந்தை செய்யும் சேட்டையால் நான் சிறுமை கொள்வேனா என்ன? அந்த வளர்ச்சி தான் ஒரு தமிழ் வாசகராக, தமிழ் உபாசகராக நாம் தமிழுக்கு செய்ய வேண்டியது. மிகச் சரியாக அதை செய்திருக்கிறீர்கள். அதையும் உலகின் தலைநகரம் என்று சொல்லத்தக்க நியூயார்க் மாநகரத்தில் வழங்கவிருக்கிறீர்கள். இந்த விருது தமிழின் தலைமை விருது. நம் இலக்கியவட்டம் வழங்கும் பிற விருதுகளுக்கு மூத்தோன் என நிலைகொள்ளத் தக்க விருது. நிகழட்டும். இது நிறுவட்டும் தமிழ் எதுவென.
உலகின் மூத்த மொழியென இன்றும் வாழும் தமிழ், அறிவின் கடவுளான ஆலமர்ந்த தென்முகத்தோனின் வாழும் வடிவு. அவன் எழட்டும். அவன் அறிவிக்கட்டும் அதன் தொன்மையை, பெருமையை, உயர்வை, சாதனையை. வாழும் தமிழ் வருடம் தோறும் நிகழட்டும், திக்கெட்டும் செல்லட்டும், கலைச் செல்வங்கள் யாவற்றையும் கொண்டு வந்து சேர்க்கட்டும். நம் செல்வங்களை உலகிற்கு வழங்கட்டும். வாழும் தமிழ் நிகழ்வு பெருவெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ.
என்றும் அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.









