அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
ஆலயக்கலை வகுப்பில் பங்குபெற்றது என் நல்லூழ் என நினைக்கிறேன். என்னுடைய சில முக்கிய புரிதல்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1 . ஆலயத்தை எப்படி பார்க்கவேண்டும்?
அ. தூலமாக பார்க்க வேண்டும் – வாஸ்து சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம்.
ஆ. வரலாற்று பார்வை (Historicity) – கல்வெட்டுக்கள் இ. சூட்சமம் – ஆகமம்
2. வாஸ்து சாஸ்திரம்:
கோயிலை முதலில் ஒரு கலையாக ரசிக்க வேண்டும். பிறகு அதற்கான நுட்பங்களை, கோட்பாடுகளை எல்லாம் பின்னால் கற்றுக்கொள்ளலாம்.
கோயில்கள் என்பது வழிபாடு, கலை, வணிகம் என எல்லாமும் நிகழ்வதாக இருந்தது. அதனால் கோயில்கள் முக்கியமானதாக கருதப்பட்டது. அதற்கு நிலங்களும், கடவுளுக்கு நகைகளும் கொடுக்கப்பட்டது.
கோயில்களுக்கு என தத்துவம் இருக்கும். முடிந்தளவு அதனை தெரிந்துகொண்டு கோயிலுக்குள் சென்றால் இன்னும் அதன் அழம் அதிகமாக இருக்கும். உதாரணமாக தஞ்சை பெரிய கோவில் (ஜெ.கே என்னை மனிப்பாராக) விமானம்.
3. சிற்ப சாஸ்திரம்:
ஒரு வட்டத்தை மனதில் உருவகித்தால் அதன் தொடக்கப்புள்ளி என்பது ஆழ்மனதில் கடவுளைப் பற்றி உருவாகும் உருவம். இந்த ஆழ்மனம் என்பது எல்லா மனித இனத்தின் கூட்டுமனம். மற்றொரு புள்ளி என்பது கவிஞன் இதனை கவிதை வழியே வெளிப்படுத்துகிறான். அருவத்திற்கு உருவம் கொடுக்கிறான் சிற்பி – இது வட்டத்தின் மறுபக்கம் இருக்கும் புள்ளி. கடைசி புள்ளி என்பது பக்தர்கள் கடவுளை பார்த்து வணங்கிவிட்டு, ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுளை மனதில் நிறுத்த வேண்டும். கூட்டு மனதின் ஒருபகுதியாக ஆழ்மனதிற்குள் சென்றுவிடுகிறது. ஆழ்மனதிலிருந்து மறுபடியும் உருவமாகிறது
சிற்பத்தை ரசிக்க,
அ. முதலில் சிற்பங்களை அடையாளம் காண வேண்டும். அதற்க்கு புராணம் பற்றிய அறிதல் வேண்டும்.
ஆ. சிலைகளின் அழகியலை கண்டுகொள்ளுதல்
இ. சிற்பத்தின் தத்துவங்களை கண்டுகொள்ளுதல்
இந்த மூன்றையும் ரசிக்கும்போதுதான் முழுமையான ரசனை கைகூடும்.
உருவங்களின் வளர்ச்சி என்பதும் ஆர்வம் தருவதாக இருக்கிறது.
காளி * சரஸ்வதி
இசையின் கடவுளாக இருந்த காளி. நாளடைவில் இசை மற்றம் எல்லா கலையின் கடவுளாக சரஸ்வதி மாறினாள். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சரஸ்வதியின் சிலையில் வீணை இல்லை. மற்றொரு உதாரணம் வீரபத்திரர். நான்கு கைகளில் இருந்து பத்துக் கைகளுக்கு மாறியது.
4. ஆகமம்
சடங்குகள் * பிராத்தனை
சடங்குகள் என்பது தொன்றுதொட்டு வருவது. அதன் தொடர்ச்சி என்பது பழங்குடியிலிருந்து இன்றுவரை இருப்பது. அதன் ஒருபகுதி மாறாதது (சங்கிலியாக தொடர்வது), மறுபகுதி காலத்திற்க்கெற்ப்ப மாறுபடுவது.
பிராத்தனை என்பது தனக்கும் கடவுளுக்கு மட்டுமேயானது. அதில் வேண்டுதல்கள் இருக்கும். பொதுவாக மக்கள் பிராத்தனையையும் சடங்களையும் குழப்பிக்கொள்கிறார்கள்.
இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. ஆசானுக்கு எனது நன்றிகள்.
மகேந்திரன்