இந்திய தத்துவம் நான்காம் நிலை.

இந்திய தத்துவம் நான்காம் நிலை

இந்திய தத்துவப் பயிற்சிகளின் நான்காம் நிலையில் இன்னும் சிலர் மட்டுமே எஞ்சியிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 19, 20 மற்றும் 21 அன்று நிகழும்.

நாள் ஜூன் 19 20 மற்றும் 21

தொடர்புக்கு [email protected]

அறிவிக்கப்பட்ட பயிற்சிகள். இடமிருப்பவை

 

இந்திய மரபிசை ரசனை அறிமுக வகுப்புகள்

ஜெயக்குமார் நடத்திவரும் இந்திய மரபிசை வகுப்புகள் பலருக்கு வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் அனுபவ உலகைத் திறந்துவிட்டவை. தொடர்ச்சியாக அவற்றில் பங்கேற்பாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்

திரைப்பாடல்கள் வழியாகவும் அறிந்த கீர்த்தனைகள் வழியாகவும் எளிமையான முறையில் இந்திய மரபிசையின் அடிப்படைகளை அறிமுகம் செய்பவை இந்த வகுப்புகள். இவை இந்திய மரபிசையின் எளிமையான தொடக்க இலக்கணத்தை அறிமுகமான பாடல்கள் வழியாகக் கற்பிக்கின்றன. இவை பாடுவதற்கான பயிற்சிகள் அல்ல , ரசிப்பதற்கான வகுப்புகளே

இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து இசையை கேட்க ஆரம்பிப்பவர்கள் தங்களுக்கு ஏற்கனவே மரபிசை ரசனை இருப்பதை, தாங்கள் ரசித்த பல மெட்டுகள் உண்மையில் மரபிசையின் ராகங்களே என்பதை உணர்வார்கள். அது அவர்களுக்கு நீண்ட பாதை ஒன்றின் முதல் திறப்பாக அமையும்.

நம் மரபின் பெரும்செல்வங்களில் ஒன்று மரபிசை. அதில் ஓர் அறிமுகம் என்பது பண்பாட்டுக்குள் நுழைவதுதான். மேலையிசையின் அடிப்படை அறியாத மேல்நாட்டினர் இல்லை. இந்திய இசையை அறிந்திருப்பதென்பது மிக அவசியமான ஒரு பண்பாட்டுப் பயிற்சி.

நாள் ஜூன் 5, 6 மற்றும் 7

தொடர்புக்கு [email protected]

 

விபாசனா பயிற்சி- ஐந்து நாட்கள்.

வி.அமலன் ஸ்டேன்லி அவர்களால் மூன்று முறை பௌத்த தியானம்- விபாசனை அறிமுகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த முதல் அமர்வில் கலந்துகொண்டவர்கள் மட்டும் அடுத்த நிலைக்கான விபாசனைப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இது ஐந்து நாட்கள் நீடிக்கும் பயிற்சி. ஜூன் 12 , 13, 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இது நிகழும்.

விபாசனா பயிற்சி என்ற வகையிலான பயிற்சிகள் இன்று பரவலாக நடத்தப்படுகின்றன. பலர் அவற்றில் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறார்கள். விபாசனா பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய சில உண்டு.

  • விபாசனா பயிற்சி முறையான ஆசிரியரின் நேரடி வழிநடத்தல் இன்றி இயற்றப்படக்கூடாது. நீங்கள் விபாசனை செய்யலாமா கூடாதா என்று ஆசிரியர் முடிவெடுக்கவேண்டும். நீங்கள் விபாசனையில் இருக்கையில் அவர் உங்களை கண்காணிக்கவேண்டும். உங்களுக்கு உருவாகும் சிக்கல்கள், குழப்பங்களை அவர் விளக்கவேண்டும்.
  • விபாசனை என்பது இந்திய மரபில் வேதாந்தம், பௌத்தம் என்னும் இரு மரபுகளுக்கு உரியது. இரண்டுமே இறைவழிபாடு சார்ந்தவை அல்ல. இறைவழிபாட்டை அதனுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.

விபாசனா பயிற்சியின் நோக்கம் என்ன? பயன் என்ன?

இயல்பான ஒரு வினாவாக அதை எழுப்பிக்கொள்ளலாம். நம்மால் ஏன் பத்து நிமிடம்கூட ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கமுடிவதில்லை? ஏன் அப்போது எதையாவது செல்பேசியில் பார்க்கிறோம்? இதழ்களை வாசித்தோ பக்கத்தில் இருப்பவரிடம் பேசியோ அல்லது எதையாவது செய்தோ அந்த நேரத்தை ஏன் போக்குகிறோம்? ஏனென்றால் நம்மால் நம் உள்ளத்தை நேருக்குநேர் பார்க்கமுடிவதில்லை. நம் உள்ளத்தை கையாள நம்மால் முடிவதில்லை. அது கட்டற்று பரவுகிறது. திரும்பத் திரும்ப பொருளின்றி சுழல்கிறது. ஆகவே நாம் அதை நம்மிடமிருந்து மறைக்க எதையாவது செய்கிறோம்.

ஒருவர் தன் உள்ளத்துடன் தனித்திருக்கும்போது , அதாவது ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது துயரமாகவோ பதற்றமாகவோ எரிச்சலுடனோ இருக்கிறாரா என்பது அடிப்படையான கேள்வி. அதைக்கொண்டே அவருடைய வாழ்க்கை சரியாக உள்ளதா இல்லையா என்று சொல்லமுடியும். தான் மட்டுமே இருக்கையில் மகிழ்வுடன் இருக்கும் ஒருவர் வாழ்க்கையை மெய்யாக வாழ்பவர். அவருடைய உள்ளத்தின் இயல்பான நிலை மகிழ்ச்சி. உயிரின் இயல்பான நிலை ஆனந்தம் என வேதாந்த நூல்கள் சொல்கின்றன. மகிழ்ச்சியாக இல்லை என்றால் அவர் திரிபடைந்த மனம் கொண்டிருக்கிறார் என்று பொருள்.

அந்த திரிபு என்ன என்று அறியவேண்டுமென்றால் மனதுடன் தனித்திருக்கவேண்டும். மனதை அறியவேண்டும். அதன்பின்னர் மனதைக் கையாள பயிலவேண்டும். அதுவே மெய்யான மகிழ்ச்சிக்கான வழியாக இருக்கமுடியும். உண்மையில் நாம் நம் மனதுடன் தனித்திருந்து, அதை கொஞ்சம் அவதானித்தால் நாம் அர்த்தமே இல்லாத எரிச்சல், பதற்றம், கவலை ஆகியவற்றால் அலைக்கழிகிறோம் என்பது நமக்கே தெரியும். அதை எப்படி கையாள்வதென நாமே கற்றுக்கொள்வோம்.

ஆனால் ஒருவர் தன் உள்ளத்துடன் தனித்திருப்பது எளிதல்ல. அதற்கு முறையான பயிற்சியும் ஆசிரிய வழிகாட்டலும் தேவை. அதையே முதல் வகுப்பில் அமலன் ஸ்டேன்லி அளித்தார். இது அப்பயிற்சியைப் பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சி. இதுவே மெய்யான விபாசனைக்குள் நுழைவது.

இதன் பயன் என்ன? பண்டைக்காலத்தில் பிக்ஷுக்கள் துறவு மனநிலையை அடைய இது உதவியது. இன்றைய வாழ்க்கையில் நம் உள்ளம் செயலில் குவியாமல் சிதறிக்கொண்டே இருப்பதை தடுத்து கூர்ந்து செயல்பட இது உதவுகிறது. அர்த்தமில்லாத அலைக்கழிப்புகளை உள்ளத்தில் இருந்து அகற்றி நிலையான தன்மையை அளிக்கிறது. அதன் விளைவான நிதானம் நம் உறவுகளை மேம்படுத்துகிறது.

ஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.

நாள்  ஜூன் 12 , 13, 14, 15 மற்றும் 16 (ஐந்து நாட்கள்)

தொடர்புக்கு [email protected]

தியானம், உளக்குவிப்பு, செயல்முனைப்பு- பயிற்சிகள்

தில்லை செந்தில் பிரபு நடத்திவரும் தியானம்- உளக்குவிப்பு- செயல்முனைப்புப் பயிற்சிகள் அவற்றின் எளிமை காரணமாகவும், நடைமுறைப் பயன் காரணமாகவும் புகழ்பெற்றவை. தொடர்ச்சியாக இப்பயிற்சியில் பலர் கலந்துகொண்டே இருக்கிறார்கள். இப்பயிற்சிகள் அடிப்படை தியானம், அடிப்படை யோகம், அடிப்படை மூச்சுப்பயிற்சிகள் ஆகியவை இணைந்தவை. இவற்றுடன் மனம் சார்ந்த அன்றாட நிகழ்வுகளை தொகுத்துக்கொள்ளும் பயிற்சியும்கூட.

இந்த வகையான பயிற்சிகள் இன்றைய நடைமுறைவாழ்க்கையில் மிக அவசியமானவை. அவற்றின் பயனை நாம் உண்மையில் இன்னும் உணரத்தொடங்கவில்லை. ஏனென்றால் நாம் எந்தச் சிக்கலில் இருக்கிறோம் என்பதையே நாம் உணர்ந்திருப்பதில்லை.

  • நாம் எந்தச் செயலையும் முழுமையாகச் செய்யாமல் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
  • ஒரு செயலில் கவனம் குவியாமல் அதற்குள்ளேயே சிறு சிறு கவனச்சிதறல்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
  • நமக்கு மிக முக்கியமானவையும் நாம் மிக விரும்புபவையுமான செயல்களைக்கூட நாம் தொடங்காமல் ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றால்,
  • காலை எழுந்ததுமே நமக்கு உகந்த, நமக்கு அவசியமான செயல்களத்திற்குள் நுழையாமல் இருக்கிறோம் என்றால்,
  • இரவுகளில் நம் மனம் இயல்பாக அடங்கி தானாகவே சரியான நேரத்துக்கு தூக்கத்திற்குள் செல்லவில்லை என்றால்,

நாம் உண்மையில் சிக்கலில் இருக்கிறோம். நம் உள்ளம் குவியவில்லை. நம் அக ஓட்டமும் புறச்செயலும் ஒத்திசையவில்லை. நம் அகம் ஓடை போல தொடர்ச்சியாக முன்னால் ஓடவில்லை, அது சிதறிச் சிதறிப் பரவிக்கொண்டிருக்கிறது.

அது ஒரு வகையான நோய்நிலை. எந்த நோய்க்கும் அதற்கான மருத்துவம் தேவை. இந்த வகையான அகப்பயிற்சிகள் அதற்கான மருத்துவங்கள்தான். இவை உடலை இலகுவாக ஆக்க, செயல்திறமைகொள்ளச் செய்ய உதவுகின்றன. மனதைக் குவிக்கவும் செயலுடன் இணைக்கவும் கற்பிக்கின்றன. முறையான ஆசிரியர் இவற்றைக் கற்பிக்கவேண்டியிருக்கிறது.

தில்லை செந்தில்பிரபு இந்த பயிற்சியில் முப்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். பல்லாயிரம்பேரை பயிற்றுவித்தவர். அவர்களால் ஆசிரியராக வணங்கப்படுபவர். ஓர் யோக- தியான ஆசிரியர் அதற்கு மட்டும் ஆசிரியர் அல்ல, முழு வாழ்க்கைக்கும் ஆசிரியர் அவர்.

புகழ்பெற்ற இப்பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இத்தகைய பயிற்சிகளை ஒரே முறை ஒரு நிகழ்வில் கற்றுக்கொண்டு தொடர்ச்சியாகச் செய்யலாம். சிலருக்கு அப்பயிற்சி அவர்களின் இயல்பால் விட்டுப்போக வாய்ப்புள்ளது. அவர்கள் திரும்பவும் அதே பயிற்சியை அதே வகுப்புக்கு வந்து மீண்டும் அடைவதன் வழியாக மீண்டும் தொடங்கமுடியும். அதற்கான மனநிலையை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

 

நாள் – 26, 27, 28.

தொடர்புக்கு [email protected]

 

முந்தைய கட்டுரைஓவியம், தன்னைக் கண்டடைதல்