மேலைத்தத்துவம் கற்க என்னென்ன தேவை?

வணக்கம்,

மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு பற்றிய செய்தியைமுழுமையறிவு வலைப்பக்கத்தில் பார்த்தேன். எனது முதன்மை ஆர்வம் இந்திய தத்துவம் மற்றும் வரலாற்றில் இருந்தாலும், மேற்கத்திய தத்துவம் குறித்த எனது அறியாமை இந்த வகுப்பில் சேர போதுமான தகுதி என்று நினைக்கிறேன். மேலும், மேற்கத்திய தத்துவம் நம்மைச் சுற்றியுள்ள நவீன வாழ்க்கை முறையை எவ்வாறு வடிவமைத்து வருகிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது. எனவே இந்த அமர்வில் நான் பயனடைய முடியும் என்று நம்புகிறேன்.

இந்த வகுப்பில் சேர மேலும் விவரங்களை அறிய விரும்புகிறேன்.

எனக்கு மேற்கத்திய தத்துவம் பற்றி சிறிதே அறிமுகம் உள்ளது என்றாலும், தேவைப்பட்டால் அமர்வுக்கு முன்பே தயார் செய்ய நான் முழு உற்சாகத்துடன் இருக்கிறேன். அத்தகைய அறிமுக வாசிப்பு ஏதேனும் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நான் அறிமுக இந்திய தத்துவ வகுப்பில் சேரக் காத்திருக்கிறேன் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் போலவே, பெரும்பாலான கலை மற்றும் வடிவமைப்புக் கல்வி மாணவர்கள் எங்கள் பாடத்திட்டத்தில் தத்துவம் மற்றும் அழகியலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமின்மையை உணர்கிறார்கள். குறிப்பாக சந்தை தேவை சக்திகளால் அதிகம் இயக்கப்படும் கட்டிடக்கலை மற்றும் தொழில்துறை வடிவமைப்பு (Industrial Design) போன்ற துறைகளின் மாணவர்கள், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்.

சொந்த வடிவமைப்பு சிந்தனை (Original designthinking) குறைந்து, நுகர்வோர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது என் பார்வை. தனிப்பட்ட தீர்வாக நான் தத்துவம் மற்றும் அழகியல் பற்றி மேலும் விரிவாக அறிய முடிவு செய்துள்ளேன். என்னைப் போல் பலர் நினைப்பார்கள் என்று நம்பி தங்கலை தத்துவம் மற்றும் அழகியல் பற்றிய அறிமுக வகுப்புகளை மேலும் மேலும் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அறிமுக வகுப்புகளை மீண்டும் மீண்டும் நடத்துவதால் தீவிர மாணவர்களை ஈர்ப்பதற்கு பதிலாக பொழுது போக்குபவர்களை ஈர்க்க கூடிய நிலைமையை அறிவேன்.

ஆனால் இந்தக் கல்வியின் பலனை மதிக்கும் தீவிர மாணவர்கள் போதுமான அளவில் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

தமிழில் கடிதம் எழுத மற்றொரு வாய்ப்புக்கு நன்றி

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

 

விவேக்

 

அன்புள்ள விவேக்

மேலைத்தத்துவ வகுப்புகள் மேலைத் தத்துவத்தை ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்பவை. கிரேக்க மரபு முதல் நாம் சாம்ஸ்கி வரை என்ன வகையான அறிவுத்தேடல்கள் நிகழ்ந்துள்ளன என கற்பிப்பவை.

இவற்றை நூல்கள் வழியாக கற்கலாம். ஆனால் நேர்வகுப்பு என்பது ஒரு 300 பக்க நூலுக்கு நிகர். முழுக்கவனத்துடன் மூன்றுநாட்களில் அதைக் கற்பது அளிக்கும் முழுமையான பார்வை நூல்வழியாக அமையாது. அதற்குக் காரணம் கற்பதற்கே உரிய இடம், அந்தச் சூழல், அதற்கென்றே வந்துள்ளோம் என்னும் உணர்வு, அவ்வுணர்வை தாங்களும் கொண்டுள்ள சுற்றம்,

தத்துவத்தை பாடமாக, தகவல்களாக கற்பது உண்மையில் கல்வியாளர் அன்றி எவருக்கும் பயனளிக்காது. வாழ்க்கைக்கேள்விகளாக – தேடல்களாக அறிவதே சிறந்த வழி. அது மிகச்சுவாரசியமானதும்கூட. நாம் ஒரு தத்துவ வகுப்பில் வாழ்க்கையையும் வரலாற்றையும் பற்றி யோசித்தோமென்றால் மெய்யாகவே தத்துவத்தை அறிய ஆரம்பிக்கிறோம் என்று பொருள். இந்த வகுப்புகளின் இயல்பு அதுதான். பங்கேற்றவர்கள் மிகுந்த பரவசத்துடன் குறிப்பிட்ட தனித்தன்மையும் இதுவே.

இந்த வகுப்புக்கு முன்னரே எதையும் வாசித்துவிட்டு வரவேண்டியதில்லை. முன்னரே ஒன்றும் தெரியாமலிருப்பதே மேலும் நல்லது என்பதே உண்மை. பிழையான புரிதல்களை களைவதென்பது எந்த தத்துவ வகுப்பிலும் பெரிய சிக்கலாக உள்ளது. அறிவதற்கான ஆர்வமும், அதன்பொருட்டு உள்ளத்தை அமைக்கும் மனநிலையும் இருந்தால்போதும். மேலைத்தத்துவம் எழுப்பும் வினாக்கள் எல்லாமே நாம் நம் அன்றாடவாழ்க்கையில் இன்று எதிர்கொள்பவை. அங்கிருந்து தொடங்கி மிக எளிதாக உள்ளே செல்லமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇன்றைய பதற்றங்கள்…
அடுத்த கட்டுரையோகம்- உளம் அடங்கல் பயிற்சி