வணக்கம் ஆசிரியருக்கு,
நலம். நீங்கள் நலமா? கடந்த வாரம் நடந்த தத்துவ முகாம் – முதல் நிலை வகுப்பில் உங்களை சந்தித்தேன்.வருவதற்கு முன்னர் எவ்வளவோ கேள்விகள், குழப்பங்கள், ஆனால் இப்போது அவை வெறும் கேள்வி மற்றும் குழப்பங்கள் தான் என்று தெளிந்து விட்டது.
நீங்கள் வந்து இறங்கிய வியாழன் மாலை அன்றே இன்னும் சில நண்பர்களுடன் வெள்ளிமலையில் இருந்தோம். உங்கள் வருகைக்காக மிக ஆவலாக காத்து இருந்தோம். நினைத்ததை போலவே நீங்கள் வந்த உடனே சிரிப்பும், உங்கள் பேச்சின் சுவாரஸ்யமும், உங்கள் பயண அனுபவம் மற்றும் உங்கள் சொந்த அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொண்ட விதமும் அந்த குளிர் நிறைந்த மாலையை மேலும் அழகு பெற செய்தது.
உங்கள் விறுவிறுப்பு நிறைந்த பேச்சில் மூழ்கிய எங்களுக்கு பசியும், தூக்கமும் மறந்து விட்டது.அடுத்த நாள் காலை வகுப்பு தொடங்கிய தருணம், நீங்கள் படி படியாக எங்களுக்கு இந்திய தத்துவ பார்வையை விவரிக்க ஆரம்பிதீர்கள்.மேற்கத்திய தத்துவ மேதைகளின் வழி இந்திய தத்துவத்தில் நுழையும் அனுபவம் கிடைத்தது.
நீங்கள் வகுப்பில் கூறிய/கடைபிடிக்க சொன்ன விதி முறைகள் அனைத்தையும் உணர்ந்து தெளிவு படுத்திக் கொண்டோம். தத்துவம் கற்க பொது வெளி தான் வேண்டும், அவற்றை நான்கு சுவர்களுக்குள் கற்றுக் கொள்ள இயலாது என்று நீங்கள் கூறியதன் அர்த்தம் அடுத்த நாள் காலை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் சமயத்தில் உங்களின் முன் மாணவராக இருந்த போது உணர்ந்தேன்.
வகுப்பு மட்டுமே நீங்கள் 18 மணி நேரம் எங்களிடம் பேசினீர்கள், மேலும் இடையிலும் எங்கள் கேள்விகளுக்கு பதில் கூறியும், காலை நடையின் உரையாடல் என அனைத்துமே எங்களுக்கு குருவுடன் இருக்கும் அனுபவத்தை முழுமையாக கொடுத்தது.
உங்களிடம் விஷ்ணுபுரம் ஐரோப்பாவில் தொடங்குவது குறித்து கேட்டு இருந்தேன், அது குறித்து நீங்கள் கடிதம் மூலம் தொடர்ந்து பேசலாம் என்று கூறினீர்கள்.
நானும் என் கணவர் ஶ்ரீராமும் தற்போது வியன்னா-வில் வசித்து வருகிறோம், ஆஸ்திரியா நாட்டில் கிராமங்களும், பக்கத்து நாடுகளான ஸ்லோவேனியா அல்லது ஹங்கேரி நாடுகளில் கிராமங்களில் இயற்கை அழகு நிறைந்த இடங்களும், மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் இடங்களும் உள்ளன. அங்கே மலைகள் சூழ இருப்பதுவே குரு நித்யா உங்களுக்கு கூறியது போல ‘பிரகிருதி யோகா’ என்று தோன்றுகிறது.
ஷர்மிளா