
தர்க்கபூர்வ சிந்தனை, சட்டம் செயல்படும் முறை- ஒரு வகுப்பு
ஈரோடு நண்பர் கிருஷ்ணன் வழக்கறிஞராக புகழ்பெற்றவர். முற்றிலும் சட்டம் சார்ந்தே வழக்குகளை நடத்துபவர், சட்ட அறிஞர் என அறியப்பட்டவர். இருபத்தைந்தாண்டுகாலமாக தர்க்கவியல், தத்துவம் ஆகியவற்றிலும் இலக்கியத்திலும் தீவிர ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். ஈரோட்டை மையமாக்கி அவர் நடத்திவரும் அறக்கல்வி இயக்கம் மாணவர்களிடையே தர்க்கபூர்வச் சிந்தனையை, அறிவியல்நோக்கை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பாற்றி வருகிறது.
கிருஷ்ணன் சென்ற நவம்பரில் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெங்களூரில் தர்க்கபூர்வ வாசிப்பு- சிந்தனை ஆகியவற்றை பயிற்றுவிப்பதற்காக ஒருநாள் வகுப்பை நடத்தினார். அது பங்கேற்றவர்கள் நடுவே மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. அவ்வகுப்பை விரிவாக அவர் நடத்தவேண்டும் என நண்பர்கள் விரும்பியதனால் அதுவே மூன்றுநாள் வகுப்பாக விரிவாக, புதிய தளங்களுடன் நடத்தப்படவுள்ளது.
இந்த வகுப்பில் தர்க்கபூர்வமாக சிந்தனைகளை தொகுத்துக்கொள்வது, தர்க்கபூர்வமாக விவாதிப்பது, நாம் வாசிக்கும் செய்திகளை அடிப்படை தர்க்கம் சார்ந்து புரிந்து நம்முள் அமைத்துக்கொள்வது ஆகியவை நவீன தத்துவம்- சட்டம் ஆகியவற்றுடன் இணைத்து செய்முறைப் பயிற்சிகளுடன் கற்பிக்கப்படும்.
இந்தியக் கல்விமுறையில் நமக்கு கற்பிக்கப்படாத ஒன்று தர்க்கபூர்வ சிந்தனை. அறிவியல் தர்க்கம், தத்துவத்தர்க்கம் என இரண்டு உண்டு. இவ்விரண்டுமே நாம் கற்கும் அனைத்தையும் புரிந்துகொண்டு, நமக்குள் தொகுத்துக்கொண்டு, நமது சிந்தனையாக ஆக்கிக்கொள்ள நமக்கு உதவுபவை. பல்வேறு தரவுகள் ஒரு சிந்தனைப்போக்காக ஆவது தர்க்கத்தாலேயே. தர்க்கம் இல்லையென்றால் அவை இணையாமல் உதிரிச்செய்திகளாகவே இருக்கும்.
நம் சூழலில் பெரும்பாலானவர்கள் வெறும் தகவல்களையே சொல்லிக்கொண்டிருப்பதும், தகவல்பிழைகளை சுட்டிக்காட்டுவதை மட்டுமே தர்க்கமாக முன்வைப்பதும் தர்க்கசிந்தனை இல்லாத காரணத்தால்தான். நம் கல்விமுறையே தகவல்களை அறிந்துகொள்ளுதல் என்னும் அளவிலேயே உள்ளது என்பதுதான் அடிப்படைக் காரணம். தர்க்கபூர்வமாக அடுக்கிக்க்கொண்டு சிந்தனையாக ஆக்கப்படாத தகவல்கள் அடிப்படையில் பயனற்றவை, விரைவில் மறந்துவிடக்கூடியவை.
தர்க்கபூர்வச் சிந்தனை என்பது நம் சிந்தனையை நாமே உருவாக்க, நாம் வாசிப்பவற்றை புரிந்துகொண்டு நினைவில்கொள்ள மிக அவசியமானது. இந்த வகுப்பு அதற்கான பயிற்சி.
நம் சூழலில் இன்று சட்டமே முழுக்கமுழுக்க தர்க்கம் சார்ந்த ஒன்றாக உள்ளது. பொதுவாக நாம் சட்டம் செயல்படும் முறையை அறிந்துகொள்வதில்லை. ஏனென்றால் நாம் நீதிமன்றம் செல்லவேண்டியதில்லையே என நினைக்கிறோம். ஆனால் நம் அன்றாட வாழ்வில், நம் அலுவலகச் செயல்பாடுகளில், நம் வணிகத்தில் சட்டரீதியான நடைமுறையையும் அது சார்ந்த சிக்கல்களையும் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.சட்டம் செயல்படும் தர்க்கமுறையையும், அதன் அடிப்படைகளை அறிந்துகொள்வது அபாரமான தெளிவை அளிக்கும் ஒரு கல்வி.
நிகழ்வுநாட்கள்
ஜனவரி 9, 10 மற்றும் 11 (வெள்ளி சனி ஞாயிறு)
For contact [email protected]