
ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை வகுப்புகள் ஓர் இயக்கமாகவே ஆகிவிட்டிருக்கின்றன. இதற்குள் பலநூறுபேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். கலைக்கோயில்களைத் தேடி இந்தியாவெங்கும் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். நூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வகுப்புகளின் தீவிரம் மற்றும் பயன் பற்றி கடிதங்கள் எழுதியுள்ளனர்.
ஆலயக்கலை வகுப்பில் இந்திய ஆலயங்களின் கட்டுமான அமைப்பும் இந்தியச் சிற்பக்கலையும் அறிமுகம் செய்யப்படுகிறது. மூன்றுநாட்களுக்குள் நாம் அதுவரை அறியாத ஒரு புதிய உலகம் திறந்துகொள்வதை உணரமுடியும். நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டே இருக்கும் ஆலயங்களின் பொருள் விளங்கத்தொடங்கும். ஒருவர் எழுத்தறிவு அடைந்து, தன் முன்னோர் எழுதிவைத்த உயிலை படிப்பதுபோன்றது அது. சட்டென்று அவர் பெருஞ்செல்வத்துக்கு உரிமையாளர் ஆகிறார். (ஜெயக்குமார் தமிழ் விக்கி)
ஆலயங்களை அறிவதென்பது மதக்கல்வி அல்ல. ஆன்மிகப் பயிற்சியும் அல்ல. அது இந்தியக் கலை மரபை அறிவது. இந்தியாவின் ஓவியம்,நடனம், இசை என அனைத்துக்குமே ஒரு தொடக்கம் அது. இந்திய வரலாற்றை, இந்தியப் பண்பாட்டை நாம் அறியத் தொடங்குகிறோம். கூடவே நம் அகம் விழிப்படைகிறது. அக்கோயில்கள் ஒவ்வொன்றும் நுண்ணிய ஆன்மிகஞானத்தின் பதிவுகள் என்பதை உணரத்தொடங்குகிறோம்.
நாள் மார்ச் 27 28 மற்றும் 29
For contact [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்- இடமிருப்பவை

மேலைத் தத்துவம்- ஜெர்மானிய தத்துவம் அறிமுகம்
அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள் புகழ்பெற்றவை. இன்றைய நவீன வாழ்க்கையை, இன்றைய தொழில்நுட்பக் கொள்கைகளை, இன்றைய வணிகக்கொள்கைகளை, இன்றைய அரசியலை புரிந்துகொள்ள உதவும் அடிப்படைகள் கொண்டது நவீன ஐரோப்பியத் தத்துவம்.
சாக்ரடீஸ் காலத்தில் தொடங்கும் எளிய அறிமுகத்துக்குப் பின் ஷோப்பனோவர், இமானுவேல் காண்ட், ஹெகல், நீட்சே வழியாக இன்றைய சிந்தனையாளர்கள் வரை அறிமுகம் செய்யும் அஜிதனின் இந்த வகுப்புகள் போல இத்தனை விரிவான நவீன அறிமுகம் இன்று வேறெங்கும் அளிக்கப்படுவதில்லை.
உண்மையில் நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதை அறியவே நவீன மேலைத்தத்துவ அறிமுகம் தேவை. அண்மையில் லண்டனில் நிகழ்ந்த உலக அளவில் தொடர்ந்து நிகழவுள்ளது.
ஓர் இந்திய இளைஞனுக்கு ஐரோப்பிய சிந்தனை, ஐரோப்பிய வாழ்க்கை ஆகியவற்றை பற்றிய மெய்யான அறிமுகத்தை உருவாக்கிக்கொள்ள மிகச்சிறந்த வழி இந்த வகுப்புகள்.
நாட்கள் மார்ச் 20 21 மற்றும் 22
விண்ணப்பிக்க For contact [email protected]

இந்து தத்துவம் மூன்றாம் வகுப்பு
இந்து தத்துவத்தின் மூன்றாம் வகுப்பு மார்ச் முதல்வாரம் 6,7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நிகழும். இந்து தத்துவம் இரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்
For contact [email protected]
இந்து தத்துவம் ஏழாவது வகுப்பு
ஆறு தரிசனங்களின் ஒட்டுமொத்தப் பார்வையும், அடிப்படையான சூத்திரங்களும்.
நாள் மார்ச் 13, 14 ம்ற்றும் 15
வரவிருக்கும் வகுப்புகள்

தமிழ் மரபிலக்கிய ரசனை அறிமுகம்
ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாஞ்சில்நாடனின் அழைப்பின் பேரில் குற்றாலத்திற்கு ஒரு மூன்று நாள் தங்குவதற்காக சென்றிருந்தேன். அப்போது கோவையில் இருந்து அவருடன் மரபின் மைந்தன் முத்தையா, சுதேசமித்திரன், ரவீந்திரன் ஆகிய நண்பர்கள் வந்திருந்தார்கள். குற்றாலத்தில் அப்போது சீசன் முடியும் நிலையில் இளஞ்சாரல் இருந்தது. ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை அவருடைய குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறார்கள். தெகாலையில் குற்றாலத்தில் டி.கெ.சி நினைவிடத்தில் அஞ்சலி நிகழும். அதன் பொருட்டுத்தான் அந்த பயணம்.
குற்றாலத்தில் இனிய சூழலில் நாங்கள் தங்கி இருந்த மூன்று நாட்களும் தொடர்ச்சியாக மரபின் மைந்தன் முத்தையா தமிழ் மரபிலக்கியத்தின் செய்யுட்களை சொல்லிக்கொண்டே இருந்தார். அச்சூழலுடன் அந்த மரபுசார்ந்த கவிதைகளையே இணைக்க முடிந்தது. ஆகவேபாரதி சொன்னது போல ‘பாடுக புலவ!” என்று தொடர்ச்சியாக அவரிடம் மாறி மாறி வெவ்வேறு தமிழ் மரபு இலக்கிய காலகட்டங்களை சேர்ந்த கவிதைகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.
மரபிலக்கியம் சார்ந்து இவர் வகுப்புகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் அப்போது எழுந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு முழுமை அறிவு அமைப்பு உருவான பிறகு அது இயலதாயியிற்று.
மரபிலக்கியத்தை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஏனெனில் மரபிலக்கியம் வழியாகவே நமது மரபையும் மதத்தையும் அறிந்து கொள்ள முடியும் .மரபிலக்கியச் சுவை என்பது ஒரு வகையில் நமது பண்பாட்டின் சுவையேதான். தமிழ் பெருமிதம் என்பது நம் அனைவரிடம் உண்டு, ஆனால் தமிழ் தெரிந்தவர்கள் மிகக்குறைவு. காரணம், தமிழை பள்ளி வழியாக தெரிந்து கொள்வது இன்று கடினம். அங்கு அவை பாடமாக மாற்றப்பட்டுள்ளன. ரசனைக்கு அங்கு இடமில்லை. மேலும் இப்போது தமிழ்ப் பாடமே பெரும்பாலும் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.தமிழ் மரபுக்குள் நுழைவதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தான் உண்மை.
தமிழ் மரபை அறிவதற்கு நூல்கள் ஓரளவுக்குத்தான் உதவும். ஏனெனில் நூல்கள் வழியாக நாம் மரபிலக்கியத்தின் சந்தத்தை அறிவதில்லை, உச்சரிப்பை உணர்வதில்லை. சந்தத்துடன் அசைப்பிரித்துச் சொல்லும்போது மட்டும்தான் மரபிலக்கியப் பாடல்கள் அழகு பெறுகின்றன. அதன் பிறகு அவற்றில் எதை ரசிக்க வேண்டும், மரபில் ஒன்று எவ்வாறு அமைந்துள்ளது என்பது ஒரு நல்ல்ஆசிரியர் கற்பிக்கும் போதே தெளிவாகிறது. ஆகவே தான் நேரடியாக ஆசிரியர்கள் அமர்ந்து மரவள்ளிக்கத்தை கற்கும் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம்.
எங்கள் நோக்கம் என்பது மிகத்தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கும் மரபிலக்கியம் சார்ந்த ஒரு திறப்பை உருவாக்குவது. வரலாற்று ரீதியாக சங்க இலக்கியத்தில் இருந்து சமகால இலக்கியம் நோக்கி மரபை கொண்டு வர வேண்டும். ஆனால் அவ்வாறு கற்க முடியாது. கண்ணதாசன் போன்ற சமகால மரபுக்கவிஞர்கள் வழியாக அந்த சுவையை அறிமுகம் செய்து அதிலிருந்து மெல்ல மெல்ல பின்னகர்த்தி கொண்டு சென்று சங்க காலத்திற்கு செல்ல வேண்டும். அது ஒரு இனிய தொடக்கமாக அமையும். அவ்வாறு ஒரு வகுப்புதான் மரபின் மைந்தந் நடத்துவது.
மரபின் மைந்தன் வரும் ஏப்ரல் மாதம் அந்த வகுப்பை நான்காவது முறையாக மீண்டும் நடத்துகிறார்
நாள் ஏப்ரல் 3 4 மற்றும் 5 (வெள்ளி சனி ஞாயிறு)
For contact [email protected]

பௌத்த தியானம்- விபாசனா பயிற்சி
மனிதன் இரண்டு நிலைகளில் இருந்தாகவேண்டியிருக்கிறது. ஏனென்றால் அடிப்படையில் மனிதனும் ஒரு விலங்கே.எல்லா விலங்குகளும் மனதையும் உடலையும் முழுமையான ஓய்வுடன் வைத்துக்கொள்வதை நாம் பார்க்கலாம். தேவையானபோது அவை முழு ஆற்றலுடன் செயல்பட அந்த ஓய்வு உதவுகிறது. மனிதன் என்னும் விலங்கு நாகரீகத்தை அடையும்தோறும் அது இழப்பது அந்த உண்மையான ஓய்வைத்தான்.
நாம் பலமணி நேரம் வெறுமே படுத்திருக்க முடியும். எதையுமே செய்யாமல் நாள் முழுக்க தொலைக்காட்சியிலோ இணையத்திலோ எளிய கேளிக்கைகளில் மூழ்கிக்கிடக்க முடியும். நாம் அதை ஓய்வு என நினைக்கிறோம். அது ஓய்வல்ல. நம் அகத்துள் நாம் விரைந்துகொண்டே இருக்கிறோம். ஒரு கடிகாரம் அசையாமல் ஓர் இடத்தில் இருக்கலாம், ஆனால் அது உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஏனென்றால் மனிதனுக்கு மட்டும்தான் உள்ளம் என ஒன்று உள்ளது. அது நமக்குள் ஒரு கணமும் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. தூங்கும்போதுகூட அது ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, நாம் அதை அறிவதில்லை அவ்வளவுதான். தூங்கும் ஒருவரை கூர்ந்து பாருங்கள், அவர் முகத்தின் உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அவர் உடலில் பலவகையான திடுக்கிடல்கள் உருவாவதைக் காணலாம். அவருக்குள் உள்ளம் ஓடிக்கொண்டிருப்பதன் வெளிப்பாடுகள் இவை.
அந்த உள்ளம் ஓடுவதும் உழைப்பே. அந்த உள்ளம் அலைகொள்வதும் கொந்தளிப்பதும் பெரிய உழைப்பு. உள்ளம் ஓடிக்கொண்டும் கொந்தளித்துக்கொண்டும் இருக்கும்போது உடல் அசைவற்று இருந்தாலும் அது ஓய்வெடுப்பதில்லை. அதன் தசைகள் இறுகியிருக்கின்றன. அதன் தசைகள் அசைந்துகொண்டிருக்கின்றன.
இன்றைய வாழ்க்கை நம் உள்ளத்தை ஓய்வற்றதாக ஆக்கியுள்ளது. போட்டி நிறைந்த நவீன உழைப்புச்சூழல் ஒரு காரணம். தொடர்ச்சியாக எதிர்காலம் பற்றிய பதற்றத்திலேயே நம்மை வைத்திருக்கும் இன்றைய பொருளியல் சூழல் இன்னொரு காரணம். ஒரு தனிமனிதனிடம் குடும்பமும், சூழலும் ஏராளமான கடமைகளை எதிர்பார்ப்பது மூன்றாவது காரணம்.
இந்த ஓய்வற்ற நிலையே இன்று நம்மை சட்டென்று சலிப்புக்கும் உள்ளச்சோர்வுக்கும் கொண்டுசெல்கிறது. டிப்ரஷன் என நாம் அதற்குச் செல்லப்பெயரிட்டிருக்கிறோம். தொடர்ச்சியான இறுக்கநிலை ஓர் எல்லையை அடைந்தபின் வரும் தளர்வு அது.
அந்த இறுக்கமும் சரி, அதன்பின் வரும் தளர்வும் சரி நம் தூக்கத்தை சீர்குலைக்கின்றன. தூக்கம் இல்லாமையால் நம்மால் எதையும் கூர்ந்து செய்ய முடிவதில்லை. செயல்களை முறையாகச் செய்யமுடியாமை அளிக்கும் அழுத்தத்தால் மேலும் பதற்றமும், மேலும் இறுக்கமும், மேலும் சோர்வும் உருவாகிறது. இது ஓர் விஷச்சுழற்சி. அறிவாந்த உழைப்பைச் செலுத்தும் துறைகளில் செயல்படுபவர்கள் பலர் இந்த சுழற்சியில் சிக்குண்டவர்கள்தான்.
இந்திய யோகமுறை இந்திய தத்துவசிந்தனை சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து வளர்ந்தது. வேதாந்தம், பௌத்தம், சமணம் போன்ற தத்துவமுறைமைகள் தீவிரமான தத்துவப்பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தன. அவற்றின் விளைவாக உருவாகும் மிதமிஞ்சிய உளஅழுத்தத்தை கையாளும் திறமையை அவர்கள் அடையும்பொருட்டு யோகமுறைகளை இணைத்துக்கொண்டன. தங்களுக்கான யோகமுறைகளை வளர்த்தெடுத்தன.
யோகம் தனக்கான பிரபஞ்சப்பார்வை கொண்டது. பிரபஞ்சத்துடன் பிறிதற்ற நிலையை மீட்பு என அது முன்வைக்கிறது. அந்த மீட்பு அதன் உச்சநிலைக் கொடை. ஆனால் சாதாரணநிலையில் ஒரு பயிற்சியாகவே அது உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வை அளிப்பது. அழுத்தங்களில் இருந்து விடுவிபது. அந்நிலையில்தான் நவீன வாழ்க்கைக்கான ஒரு தவிர்க்கமுடியாத பயிற்சியாக அது உருவ்செடுத்துள்ளது.
யோகப்பயிற்சிகளில் முக்கியமான ஒரு பிரிவு பௌத்தம் உருவாகுவது. பௌத்தத்தின் மையமான ஒரு பிரிவுக்கே யோகாசார பௌத்தம் என்றுதான் பெயர். அவர்கள் உருவாக்கிய முறை விபாசனா எனப்படுகிறது. அதில் பல தியானமுறைகள் உள்ளன. பல படிநிலைகள் உள்ளன.
பௌத்த யோக மரபை முறையாக, நீண்டகாலம் பயின்றவர் வி.அமலன் ஸ்டேன்லி. கவிஞர், நாவலாசிரியர், மெய்யியலாளர் என்னும் முகங்கள் கொண்டவர். பௌத்தத் துறவி பெர்னி க்ளாஸ்மேன் குறித்து ‘தெருவோர ஜென் குரு’ எனும் நூல் யானம் குறித்த ‘மனவிழிப்புநிலை’ போன்ற நூல்களை எழுதி இருக்கிறார். (வி.அமலன் ஸ்டேன்லி தமிழ் விக்கி)
திக் நாட் ஹஞ்ச் வியட்நாமில் அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்ததால் 1966-ல் தாய் நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டார். 2008-ல் தடை நீங்கி 400 மாணவர்களோடு வியட்நாம் திரும்பியபோது இந்தியாவில் இருந்து அவரோடு பயணித்தவர் அமலன் ஸ்டேன்லி. தவ தீட்சையும் “இருதய சுகமளிக்கும் விழிப்புணர்வு” (Healing Awareness of the Heart) எனும் தவப் பெயரும் அவரால் வழங்கப்பட்டவர்.
2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத் தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.
இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்
வி.அமலன் ஸ்டேன்லியின் பௌத்த தியான முறை அறிமுக வகுப்புகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. பலர் அவற்றால் அடைந்த பிரமிக்கத்தக்க விடுதலையை பதிவுசெய்துள்ளனர். மீண்டும் அவ்வகுப்புகள் நிகழவுள்ளன.
நாட்கள் ஏப்ரல் 10 11 மற்றும் 12 (வெள்ளி சனி ஞாயிறு)
For contact [email protected]










