பயிற்சிகள் பற்றி அறிந்துகொள்ள…

எங்களைப் பற்றி

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கிவரும் இந்தப் பயிற்சிகள் 1992 ல் ஊட்டியில் குரு நித்ய சைதன்ய யதி வாழ்ந்தபோது அவருடைய ஆணைப்படி ஊட்டி குருகுலத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் தொடங்கப்பட்டவை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்பு வழியாக இப்பயிற்சிகள் பின்னர் முறைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றன. இதுவரை இருநூறு நிகழ்வுகளுக்குமேல் நடந்துள்ளன. விஷ்ணுபுரம் வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் இதைக் கொண்டுசெல்லும் பொருட்டு இந்த தளம் தொடங்கப்பட்டுள்ளது.

வகுப்புகளின் இயல்பு

  1. இந்த வகுப்புகள் நேரில் நிகழ்பவை. ஆன்லைன் வகுப்புகள் அல்ல. ஆன்லைன் கல்வியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த வகுப்புமுறையே ஆன்லைன் கல்விக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒன்று. கல்வியின் பொருட்டு நேரத்தை அளிக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே எங்களுக்குத் தேவை.
  2. ஆன்மிகம்,  இந்திய தத்துவம், மேலைத்தத்துவம், ஓவியம், இசை, நவீன இலக்கியம், நவீன மருத்துவம், ஆயுர்வேதம் என பல துறைகளில் அடிப்படையான அறிமுகத்தை அளிக்கும் பயிற்சிகள் இவை. எதுவும் தெரியாமல் தொடங்குபவர்களுக்கு உரியவை. ஆரம்ப அறிமுகம் கடந்தபின் விரிவான கல்விக்கு ஆர்வமிருப்பவர்களுக்கு அதற்கான வழி காட்டப்படும்
  3. ஒவ்வொரு துறையிலும் நீண்டகால அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இக்கல்வியை வழங்குகிறார்கள். அவர்கள் அனைவருமே இலவசமாகவே தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்களுக்கான பயணச்செலவு மட்டுமே அளிக்கப்படுகிறது
  4. இந்த அமைப்பு லாப நோக்கம் கொண்டது அல்ல. ஆகவே மிகக்குறைந்த பட்ச செலவில், செலவுகளைப் பகிர்வது என்னும் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே ஒரு குருகுலக் கல்விமுறைக்கான எளிய வசதிகளே அளிக்கப்படும். தனிவசதிகள், உயர்வசதிகள் அளிக்கப்படாது. அவை தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாகாது.
  5. இந்த வகுப்புகளின் நோக்கம் ஒரு நவீன மனிதன் அறிந்தாகவேண்டிய அறிவை அளிப்பது. கலைகளும் தத்துவமும் ஆன்மிகமும் ஒரே அறிவாகக் கற்பிக்கப்படவேண்டும் என்று நித்ய சைதன்ய யதி சொன்னார். முழுமையறிவு என அது கூறப்படுகிறது. அதற்கான முயற்சி இது. ஆகவே ஒருவர் இந்த எல்லா வகுப்புகளையும் கற்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்
  6. இது அடிப்படையில் எந்த மதம் சார்ந்த அமைப்பும் அல்ல. ஆகவே எந்த வகையான ஆசாரங்களும், வழிபாடுகளும் இல்லை. எல்லா மதத்தவர்களும் கலந்துகொள்ளலாம்.
  7. இது முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. ஆகவே  எந்த வகையான அரசியல் விவாதங்கள், அரசியல் உரையாடல்களுக்கும் இடமில்லை

 

வகுப்புகளின் நெறிகள்

  1. இவ்வகுப்புகளில் மது அருந்துவது எவ்வகையிலும் அனுமதிக்கப்படாது. வழக்கமாக மது அருந்துபவர்களுக்கும் அனுமதி இல்லை. அவர்கள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
  2. இவ்வகுப்புகள் ஆசிரியருடன் மாணவர்கள் உடன் தங்கிக் கற்றுக்கொள்ளுதல் என்னும் அடிப்படையில் அமைந்தவை. குருகுல முறை போன்றவை. தகுதிகொண்ட ஆசிரியர் மட்டுமே இங்கே கற்பிக்க அமைவார். அவர் சொற்களுக்குக் கட்டுப்பட்டு வகுப்புகள் நிகழும். அவர் முன் மாணவர்கள் உரிய பணிவுடன் இருந்தாக வேண்டும்.
  3. சைவ உணவு மட்டுமே வழங்கப்படும்
  4. பங்கேற்பாளர்கள் கூட்டாகத் தங்குவதற்கே வசதி செய்யப்படும். பெண்களுக்கு தனியாகத் தங்க வசதி செய்யப்படும்
  5. பயணத்தை பங்கேற்பவர்கள் தாங்களே ஏற்பாடு செய்யவேண்டும். பிறருடன் சேர்ந்து வருவதற்கு வாய்ப்பிருந்தால் ஏற்பாடு செய்யப்படும்.
  6. பணம் கட்ட வசதியில்லாதவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு புரவலர்கள் தேடித்தரப்படும். புரவலர் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பணம் கட்டியவர்கள் கட்டாதவர்கள் நடுவே எந்த வேறுபாடும் இருக்காது. புரவலர் வழியாக வந்த தகவல் எங்கும் பகிரவும்படாது.
  7.  பங்கேற்பவர்கள் விண்ணப்பிக்கையில் தங்களைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பகிர்ந்தாகவேண்டும்.

தொடர்புக்கு

 

[email protected]

 

Our English Website Unifiedwisdom.today 

Our YouTube Channel Unified Wisdom – முழுமையறிவு

Our Facebook Muzhumaiyarivu 

Our Insta  Muzhumaiarivu 

முந்தைய கட்டுரைதயக்கமெனும் நோய்
அடுத்த கட்டுரைநித்ய சைதன்ய யதி