ரவி மோகனின் பிரோ கோட். ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

ரவி மோகன் நடிக்கும் ஒரு படத்தின் டீசர் காணொளியை அண்மையில் பார்த்தேன். என் வாழ்க்கையின் சித்திரம் போலவே இருந்தது. திருமணம் என நான் ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கிக்கொண்டேன். நான் ஒரு மனிதன். 29 வயது வரை சுதந்திரமாக வாழ்ந்தவன். எனக்கான சிந்தனை, உணர்வு எல்லாம் உண்டு என்றே என்னுடைய மனைவியால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் வாழ்க்கை முழுதுமாகவே அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று அவள் நினைக்கிறாள். அதற்காகத்தான் திருமணம் என்று நம்புகிறாள். நான் சொந்தமாக எதையுமே செய்யக்கூடாது, யோசிக்கக்கூடாது, அது அவளுக்குச் செய்யும் துரோகம் என்று நினைக்கிறாள். அவள் செய்வதை எல்லாம் மிகமிக விரிவாக என்னிடம் சொல்வாள். அதை முழுக்க நான் கேட்டு ஞாபகம் வைத்துக்கொள்ளவும் வேண்டும் என நினைக்கிறாள். ஏனென்றால் நானும் அவளும் ஒன்றாகிவிட்டோமாம்.
எனக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நான் வாசிக்கக்கூடாது. நான் ஆங்கிலப்படங்கள் பார்ப்பேன். அதைப் பார்க்கக்கூடாது. நான் ஆங்கில பாப் இசை கேட்பேன். அது காதிலேயே விழக்கூடாது. ஏனென்றால் அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவளும் நானும் சேர்ந்து ரசிக்கும் விஷயங்கள் மட்டும்தான் எனக்கும். அவளுக்கு நாலாந்தர சீரியல்கள், யூடியூபின் சமையல் வீடியோக்கள், சில்லறை நகைச்சுவைகள் மட்டும்தான் பிடிக்கும். அதை மட்டும்தான் பார்க்கவேண்டும். என் ஆன்மாவையே அடிமையாக வைத்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். இப்போது இரண்டு ஆண்டுதான் ஆகிறது. ஆனால் இதற்குள் நான் கொஞ்சம் மந்தமாக மாறிவிட்டேன். இப்படியே கல் மண் போல ஆகிவிடுவேனா என்ற பயம் வந்துவிட்டது. உங்களுடைய வீடியோ பார்த்தேன். ஆகவே இதை எழுதுகிறேன்
அன்புள்ள அ
நான் என்ன சொல்லமுடியும்? திகைப்பாகவே இருக்கிறது. நான் பெண்களின் வாழ்க்கையில்தான் இந்த அடிமைத்தனம் பெரிய சிக்கல் என நினைத்துக்கொண்டிருப்பவன். ஆண்கள் இப்படி இருக்கவேண்டியிருக்கிறது என்பது திகைப்பூட்டுகிறது.
ஒன்றுமட்டுமே சொல்வேன். மனிதனின் வாழ்க்கைக்கு ஒரே அர்த்தம்தான். ஆன்மிகமாக, அறிவார்ந்து தொடர்ச்சியாக முன்னால் சென்றுகொண்டே இருத்தல். அதற்கான சுதந்திரமே உயிர்வாழ்வதற்கான அடிப்படை. அந்த முன்னகர்வு இல்லாத வாழ்க்கை அழுகாத சவமாக நீடித்தல் மட்டுமே.
ஜெ
முந்தைய கட்டுரைஉளச்சோர்வை வெல்ல ஒரே வழி