தாவரங்களின் குழந்தைகள்

வணக்கம் ஜெ,

தாவரவியல் முகாமிற்காக அந்தியூரில் இருந்து முதல் பேருந்தில் நித்யவனம் வந்தடைந்தேன். அதிகாலையிலேயே பல சிறுவர்கள் இருகண் நோக்கிகளுடன் பறவைகளை ரசித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போதே இந்த முகாம் ஒரு கொண்டாட்டமாக இருக்கப்போகிறது என உணர்ந்தேன்.

முதல் அமர்வில் முனைவர் லோகமாதேவி வனத்தில் நிற்கும் ஓர் அழகிய மானின் படத்தைக் காட்டி என்ன தெரிகிறது எனக் கேட்டார். குழந்தைகள் மான் என கத்தினார். பெரியவர்கள் மானில் ஏன் புள்ளி இல்லை என சிந்தித்தனர். ஆசிரியர் கனிவுடன் பதில்களை மறுத்தார். மான் என்பது ஒரு உயிர் தான். ஆனால் பின்னணியில் நூற்றுக்கணக்கான தாவர உயிர்கள் உள்ளன. ஆனால் அவைகளை நாம் கவனிப்பதில்லை. இதுவே ‘Botincal Blindness’ என்றார். மூளையில் ஒரு பொறி தட்டியது.

சிறிய பாசிகள், லைக்கென்கள் தொடங்கி ஆபிரிக்க பாபாப்  மரங்கள் வரை பல வகைத் தாவரங்களை அறிமுகம் செய்தார் ஆசிரியர். சங்க இலக்கியத் தாவரக் குறிப்புகள் முதல் விண்வெளியில் வளர்க்கப்படும் தாவரங்கள் வரை ஒரு பெரிய சித்திரத்தை குறைந்த நேரத்தில் அளித்தார்.

இந்த வகுப்பின் சிறப்பம்சமே குழந்தைகளின் ஆர்வமும் ஈடுபாடும் தான். ஆசிரியர் மாணவர்களை குழுக்களாக பிரித்து தாவர வேட்டைக்கு அனுப்பினார்சில குழந்தைகள் குழுக்களும்சில பெரியவர்கள் குழுக்களும் அமைக்கப்பட்டன. நான் ஒரு குழந்தைகள் குழுவின் நடத்துனராகச் சென்றேன். குழந்தைகள் முட்ச்செடிக்குள் கால் வைக்காமல் தடுப்பது, அவர்கள் எதையும் வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது, என செடிகளைத் தேடுவதோடு குழந்தைகளை பராமரித்து ஒரு புது அனுபவமாக இருந்தது.

வகுப்பிற்கு வந்த குழந்தைகளை வயது சார்ந்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

  • 13+ வயதுடைய டீனேஜர்ஸ்: இவர்களின் கவனத்திறன் மகிழ்ச்சியூட்டியது. ஆசிரியர் நடத்திய வினாடி வினா போட்டியில் இவர்களே பட்டையைக் கிளப்பினார். ஆசிரியரின் கேள்விகளுக்கு துல்லியமான சொல் பிசகாத பதில்களைக் கூறினர். பெரியவர்கள் கூட கருத்தை உள்வாங்கினோம் ஆனால் அறிவியல் தொடர்பான பெயர்கள் நினைவில் இல்லை என்று மழுப்பினர். குரு நித்யா, கவனிப்பது என்றால் கேட்டதை அப்படியே முழுமையாக சொல்வது என்று குறிப்பிட்டதாக நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.
  • 6-12 வயதுடைய சிறார்கள்: இவர்களே பறவை பார்த்ததில் மிகுந்த ஆர்வம் காட்டினார்ஒரு சிறுவன் சமீபத்தில் பனிமனிதன் படித்ததாக சொன்னான். பாடம் நடத்தும் போது ஆசிரியர், உலகின் மிகப்பெரிய மலர் என கேட்டவுடன் ‘Rafflesia’ என்று கணீரென பதில் கொடுத்தாள் ஒரு சிறுமி. அவள் இன்னும் பென்சிலில் எழுதும் குழந்தை என கவனித்தேன்.

  • 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இவர்கள் பெரும்பாலும் தங்கள் அண்ணன் அக்காக்களுடன் வந்தவர்கள். மிகவும் சுட்டியாக இருந்தார்கள். ஒரு 3 வயதுக் குழந்தை கற்பூரவல்லி இலையை சரியாக இனம் கண்டுகொண்டது. இதைச் சாப்பிடலாமா எனக் கேட்டபோது கழுவி விட்டு சாப்பிடலாம் என்றது. பல குழந்தைகள் அழகிய சிறிய மலர்களைக் கொண்டுவந்து மலர் வளையல்கள் செய்ய உதவின.

சென்ற ஆண்டின் கடைசி நிகழ்வு இது. புதிய ஆண்டுக்கான உற்சாகத்தை அளித்துள்ளது.

புத்தாண்டு வாழ்த்துகள் ஜெ!

நன்றி,

ஹரீஷ்

முந்தைய கட்டுரைHindu Philosophy: First Level in English