அன்புள்ள ஜெயமோகன்,
இந்திய தத்துவம் குறித்து தாங்கள் நடத்திய வகுப்பில் கடந்த வாரம் நானும் பங்கேற்று இருந்தேன். மிகவும் புதுமையான அனுபவமாக அமைந்தது. இதுவரை முழுமை அறிவு நடத்திய வகுப்புகளில் நான் பங்கெடுத்தது இரண்டே வகுப்புகள் தான். ஒன்று ஆயுர்வேத அறிமுகம், இரண்டு இந்திய தத்துவ அறிமுகம். என்னுடைய இந்திய அறிவியக்கம் நோக்கிய பார்வையை இது ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. எந்த ஒரு நிகழ்விலும் இப்பொழுது என் கண்கள் தேடி அடைவது ரஜோ,தமோ, சத்துவ குணங்கள் எப்படி இதை நிகழ்த்தியது அல்லது எப்படி நிகழ்வுகளை நிகழ்த்தும் மனிதர்களின் வாத, பித்த, கபம் சார்ந்து நிகழ்வின் முடிவு அமைகிறது என்பதுவே. சுருக்கமாக சொன்னால் அடிப்படை கேள்விகளின் வழி தத்துவப்படுத்த முயல்கிறேன்.
இது மீண்டும் மீண்டும் என்னுள் இந்திய தத்துவத்தின் மீது உள்ள ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் நான் தேடிப் பார்த்தவரை சாங்கியம், யோகம், வைசேசிகம், நியாயம், பூர்வ மிமாம்சம், உத்தர மிமாம்சம் ஆகியவற்றின் மேலோட்டமான கருத்துகளும் தரவுகளும் மட்டுமே கிடைக்கின்றது. நீங்கள் வகுப்புகளில் ஒவ்வொரு முறையும் கேள்விகள் எழும்போது சொன்னது, இவை ஆறு தரிசனங்களையும் ஒவ்வொன்றாக மூன்று நாட்களுக்கு நாம் இனிவரும் வகுப்புகளில் பயில்வோம் என்று தான்.
நாளை சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு செல்ல இருக்கிறேன். இந்த வருடம் இந்திய தத்துவத்தின் ஆறு தரிசனங்களை ஆழமாக படிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையுடன் இருக்கிறேன். அதற்கான புத்தகங்கள் அங்கே கிடைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் இவற்றை படிக்க தமிழில் புத்தகங்கள் வெளிவந்துள்ளனவா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது என்று தோன்றுகிறது. நானாக புத்தகங்களை வாங்கி படிக்க தொடங்கினால் வழித் தவறி வேறு திசையில் செல்ல கூடும் என்றும், தரம் இல்லாத புத்தகங்களில் நேரத்தை செலவிட்டு விடுவோம் என்றும் தோன்றுகிறது. எனவே, உங்களுக்கு இந்திய தத்துவத்தை பயில உதவிய தமிழ், ஆங்கில புத்தகங்களின் பட்டியலை என்னுடன் பகிர்ந்து கொண்டால் அது மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு பேரன்புடன்,
ஹரி சரவணன்
அன்புள்ள ஹரி சரவணன்,
இப்போதைக்கு இரண்டு நூல்கள்தான்
இந்திய தத்துவ ஞானம்- கி.லட்சுமணன்
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்- ஜெயமோகன்.
ஜெ











