வெள்ளைப் பட்டாம்பூச்சி

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

இன்று அதிகாலையில் எனக்கு ஒரு கனவு. வகுப்பிற்காக நித்யவனத்திற்கு வந்திருக்கிறேன். உங்களைச் சுற்றி பல பேர் வந்து இணைகிறார்கள். அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள். அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அருகே நீண்ட வாலுடன் ஒரு வெண்ணிற பட்டாம்பூச்சி வந்த அமர்கிறது. ’இது என்ன பட்டாம்பூச்சி?’ என்று கேட்கிறீர்கள். நான் அதற்கு ஏதோ பெயர் சொல்லி, ’பறவை பார்க்கும்போது இதை பார்த்திருக்கிறேன், நான் அதை தேவதை பட்டாம்பூச்சி என்று கூப்பிடுவேன்என்று கூறுகிறேன். நண்பர்களுக்கு கிடைக்கும் அன்பு பரிசான, உள்ளத்தில் இருந்து வரும் புன்னகையை உங்களிடம் கண்டேன். நானும் மகிழ்ச்சியுடன் எழுந்து விட்டேன். எனக்கான பிறந்தநாள் பரிசாக அதை வைத்துக் கொண்டேன்.  

நன்றியை ஒரு வார்த்தையாக கூறவில்லை. எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்கிறீர்கள். மிகச் சிறந்த ஆசிரியர்கள், என் மேல் அக்கறை கொண்ட நண்பர்கள், கற்றல் அனுபவம், வாசிக்கும் இன்பம் என்று எனக்கு கிடைத்ததை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மிகவும் நன்றி ஜெ.

( உண்மையில் அப்படி ஒரு பட்டாம்பூச்சியை நான் பார்த்ததே இல்லை. கிட்டத்தட்ட  இப்படத்தில் உள்ளது  போல் இருந்தது. ஆனால் அந்து பூச்சி(moth) அல்ல; பட்டாம்பூச்சி. இறக்கையின் ஓரங்களில், இளஞ்சிவப்பு வண்ண கோடு இருந்தது)

என்றும் அன்புடன்

S.ராஜேஷ்வரி

கோவை.

அன்புள்ள ராஜேஸ்வரி,

வெள்ளைப் பட்டாம்பூச்சி ஆன்மிக விடுதலையை, ஆன்மிகமான ஓர் அலைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதைக் குறிக்கிறது.

உங்கள் உள்ளத்தில் நீங்கள் உணரும் ஒன்றாக இருக்கலாம்.

ஜெ

https://medium.com/signs-of-our-lives/white-butterfly-symbolism-and-spiritual-meaning-7feb616196f7

முந்தைய கட்டுரைமதமும் சிந்தனையும்