அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தத்துவ வகுப்பில் கலந்து கொண்ட பிறகு எழுதுகிறேன், என் மனத்தை முழுமையாக குவிக்க முடியுமா என்கிற ஐயம் காரணமாகவும் இடங்கள் உடனடியாக நிறைந்து விடுவதாலும் தள்ளி போய்க் கொண்டிருந்த நிகழ்வு மிக சரியாக ஆண்டின் துவக்கத்தில் நிகழ்ந்ததில் பெரும் நிறைவு.
2008 விஷ்ணுபுரம் வாசித்து விட்டு உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன் உங்களின் பதில் ஆச்சர்யமூட்டும் வகையில் ஆங்கிலத்தில் வந்திருந்தது இப்போது அதை உங்களிடம் காட்டலாம் என தேடினால் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறது இந்த வகுப்பும் ஆங்கிலத்திலேயே நிகழ்ந்ததில் மகிழ்ச்சி.
பதினெட்டு வயது முதல் வேதாந்த கல்வி சார்ந்த தேடல் உண்டு, ஸ்வாமி சித்பவானந்தரின் கீதையை (அவருடைய முன்னுரை கீதை ஒரு கொலை நூலா என துவங்கி பிரஸ்தானத்ரயம் என்றால் என்ன அதில் கீதையின் இடம் என்ன, ஸ்ருதிவாதம், அனுமானம், பிரத்தியக்ஷவாதம் குறித்து ஒரு சிறு அறிமுகத்தை அளித்திருப்பார் நீங்கள் அந்த விதைக்கு பெரும் உயிரோட்டத்தை இந்த மூன்று நாட்களில் அளித்தீர்கள்) முட்டி மோதி பல்வேறு கேள்விகளுக்கு இடையில் புரிந்து கொள்வதும் திகைத்து நிற்பதுமாக இடையில் ராமகிருஷ்ணா மிஷன் பதிப்பித்த உபடநிடத நூல்களை வாசிப்பது ஆனால் அதை முழுமையாக உள்வாங்க முடியாத ஒரு பெரும் அலைச்சலுக்கு இடையில் தான் உங்களின் அறிமுகம்.
விஷ்ணுபுரம் ஒரு பெரும் திறப்பு, குறிப்பாக பவதத்தரின் ஞான சபை விவாதங்கள் வாசிக்கும் போது அடைந்த வாசிப்பின் சுவையை இன்றும் என்னால் நினைவில் மீட்டிக் கொள்ள முடிகிறது, அதன் பின்னர் இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் அது ஞானசபை விவாதங்களை இன்னும் துல்லியமாக புரிந்து கொள்ள உதவியது ,(தமிழினி பதிப்பக வெளியீடாக வந்த உங்களின் இந்திய ஞானம்(நான் கேட்ட கேள்வி கூட அதில் உண்டு) , தமிழினியின் எழுத்துருவில் திகழும் அழகை இன்றும் நினைத்துக் கொள்வதுண்டு .)
மறுபிறப்பு காலகட்டம் குறித்து நீங்கள் விளக்கிக் கொண்டிருந்த போது விவேகானந்தரை பற்றி நீங்கள் பேசும் போது உங்களின் சொற்கள் என் அன்றாடத்தில் திளைத்துக் கிடைக்கும் போத மனதை விடுதலை செய்தது, குறிப்பாக ஞாயிறு அதிகாலை ஸ்ருஷ்டி கீதத்தை நீங்கள் வாசிக்க நாங்கள் கேட்டது எனக்கு பெரும் நிறைவு.
வேதாந்தத்தை ஸ்வாமிஜி அவரின் ஞானதீபத்தில் எப்போதும் வேதாந்த இலக்கியம் என்கிற வார்த்தையில் தான் பயன்படுத்துகிறார், இந்த வகுப்பும் வேதாந்த இலக்கிய வகுப்பே
சற்றேறக்குறைய ஒரு பதினெட்டாண்டு காலம் நாம் எதை கற்க வேண்டும் என்று விரும்புகிறோமோ யாரை தொடர்ந்து நாள் தவறாமல் வாசித்து வருகிறோமோ அவருடன் இரண்டு நாட்களுக்கும் மேலாக உடனிருந்து கற்றது என்னளவில் பெரும் நிறைவு, நிதின் என்று ஒரு நண்பர் பஞ்சாபிலிருந்து வந்திருந்தார் அவருக்கு உங்கள் எழுத்துக்கள் உடனான அறிமுகம் குறைவு இல்லை என்றே சொல்லி விடலாம்,திரும்புகையில் ஈரோடு வரை விஷ்ணுபுரம் முதலாக வெண்முரசு/காவியம் வரை என்னால் முடிந்த அறிமுகத்தையும், இந்த பெரும் நாவல்கள் தொடர்ந்து தொட்டு செல்லும் அந்த என்றுமுள்ள வினா என்ன என்பதை பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன், இந்த வகுப்பில் நிகழ்ந்ததை யாரேனும் ஆங்கிலத்தில் தொகுத்தால் நன்றாக இருக்கும் என சொல்லி கொண்டிருந்தார்.
நான் சமீபத்தில் உளவியல் சார்ந்த ஒரு வகுப்பை முடித்திருக்கிறேன் அதன் ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் நாங்கள் கற்றவற்றை முழுமையாக எழுத்தில் தொகுத்து சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் அந்த வகுப்பை வெற்றிகரமாக கடந்தவர்களாக கருத்தப்படமாட்டோம் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே கற்றவற்றை முடிந்தவரை நிதின் கேட்ட மாதிரி ஆங்கிலத்த்தில் முயற்சிக்காமல் தமிழிலே முயன்றிருக்கிறேன்.
தத்துவம் கற்பதன் முன் உள்ள தடைகள்:-
தத்துவக் கற்றலில் முன் வைக்கும் சொற்களை அதை புரிந்து கொள்வதற்கான கருவியாக பயன்படுத்துவதை விட்டு அதை வெறும் சொல் சுழற்றலாக மாற்றிக் கொண்டு தத்துவம் அல்லாத பிற தளங்களில் அதன் பயன்பாட்டை குறித்து யோசித்துக் கொண்டிருப்பது, கற்றல் நேரத்தை வீணடிக்கும் தத்துவ கற்றலில் இது பெரும் தடையாக கருதப்படுவது.
அன்புடன்
சந்தோஷ்












