அன்புள்ள ஜெ
நான் தூரன் விழாவுக்கு வந்திருந்தேன். ஈரோட்டில் ஓர் இலக்கியக் கூட்டத்தில் இத்தனை திரளாக இளைஞர்களைப் பார்த்ததில்லை. எல்லா அரங்கிலும் இளைஞர்கள் நிறைந்திருந்தார்கள். இளைஞர்களுடன் இளம்பெண்களும் அவ்வளவு பேர் இருந்தது திகைப்பை அளித்தது. இலக்கியக்கூட்டத்திற்கு பெண்கள் வருவதென்பது மிக அரிது. இளம்பெண்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதே நிலை. ஏனென்றால் இலக்கியக்கூட்டம் என்றால் ஒன்று சலிப்பு. இல்லையெல்லாம் குடி. இங்கே முழுக்கமுழுக்க அறிவார்ந்த விவாதம் மட்டுமே நிகழ்வதைக் கண்டேன். ஒரு கணம்கூட தொய்வடையாமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றதையும் கவனித்தேன்.
என்னுடன் என் நண்பனும் வந்தான். அவன் ஓர் திமுக அனுதாபி. உங்கள் தளத்தில் வரும் கடிதங்களை எல்லாம் பார்த்துவிட்டு இந்த கடிதங்களை எழுதுபவர்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள், முகநூலில் இவர்களை தேடிப்பார்த்தால் கிடைப்பதில்லை என்பான். இத்தனை அறிவார்ந்தும், புத்தகங்களை வாசித்துவிட்டும் யார் எழுதப்போகிறார்கள் என்பான். இதெல்லாம் ஜெயமோகன் அவரே எழுதிக்கொள்பவை என்பான். ஆனால் விழாவில் திரண்டிருந்தவர்களைப் பார்த்து திகைத்துவிட்டான். ஒவ்வொரு கேள்வியும் அத்தனை ஆழமாக இருந்தன. ஓர் இளம்பெண் வசந்த் ஷிண்டேயிடம் சிந்து சரஸ்வதி நாகரீகம் பற்றி மிஹேல் தனினோ பற்றியெல்லாம் சொல்லி கேள்வி கேட்டபோது வியந்துவிட்டான். இத்தனை பேர் இங்கே இருக்கிறார்கள், இவர்களில் நூறுபேர் கூட ஜெயமோகனுக்கு எழுதுவதில்லை என்றுதான் சொன்னான்.
அபாரமான விழா. வாழ்த்துக்கள்
கிருஷ்ணராஜ்