ஆலயக்கலை, பயணம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கம்!

மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஆலயக்கலை அறிமுக வகுப்பு (முதல் நிலை) முடித்து  ஹைதராபாத் திரும்பிவிட்டேன்

ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் மகாபலிபுரம் போகலாம் என்று நினைத்திருந்தேன். ஜனவரியில் ஊருக்கு போனோம் ஆனால் மகாபலிபுரம் போக முடியவில்லை. பரவாயில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு முதலில் வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள நம்ம ஊர் கோவிலை போய் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்‌. எங்களுடைய ஊரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் தொண்டை நாட்டில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.  திருஞானசம்பந்தர்  சமணரை வென்று ஆண்பனை குலை ஈன்ற அற்புதம் நிகழ்த்திய தலம்

எட்டு வயதில் இருந்து இதே கோவிலுக்கு போய்க்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு மூர்த்தத்தின் முன் நின்று கண்கள் மூடி கும்பிட்டுவிட்டு கிளம்பி விடுவேன், கோவிலுக்குள் அதிகபட்சம் 20 நிமிடங்கள் அவ்வளவுதான். கடந்த சில வருடங்களாக இரவில் மட்டுமே கோவிலுக்கு போயிருக்கிறேன், அர்த்த ஜாம பூஜை நேரம், நேராக கருவறை அருகே போய் நின்றுவிடுவேன், சிறுவர்கள் இசைக்கும் கைலாய வாத்திய இசை மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனால் கோபுரத்தில் தொடங்கி ஒவ்வொரு மண்டபத்தையும் தூணையும் தூணில் அமைந்திருந்த  சிற்பங்களையும் சோபானங்களையும் கூட நெருக்கமாக உணர்ந்தது இதுவே முதல்முறை

இதற்கு முன் இதெல்லாம் கண்ணுக்கு தெரியவேயில்லை என்று சொல்லமாட்டேன். கண்ணுக்கு தெரிந்தது  ஆனால் ஆலயத்தோடு ஒன்றிப்போகும் அளவுக்கு பார்வையில்லை. இருட்டிலும் பார்க்க முடியும் ஆனால் காட்சி முழுமை பெற ஒளி வேண்டுமே. என்னுடைய கண்களுக்கு பார்வை கொடுத்தது முழுமையறிவு, பார்வைக்கு ஒளி ஊட்டியவர் ஆசிரியர் ஜெயக்குமார். இவருடைய ஆசிரியர் பட்டியலில் வரலாறு, கல்வெட்டியல், ஆலய கட்டிடக்கலை, சிற்பவியல்,இசை,தத்துவம், சைவசித்தாந்தம் என்று  ஆலயக்கலை சார்ந்த பல்வேறு துறைகளின்  ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்‌. எங்களுக்கு இவர் ஆசிரியராக வந்தது எங்கள் நல்வினை

மாலை நான்கு மணிக்கு எங்களுடைய திருவோத்தூர் அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீசுவரர் ஆலய கோபுரத்தின் முன்னால் நின்றேன்.சின்ன வயதில்  இருந்து கோபுரம் என்றாலே தலையை தூக்கி நேராக மேலே உள்ள 7 கலசங்களை எண்ணிப் பார்த்து ஒரு கும்பிடு போடுவது வழக்கம். இப்போது, முதன்முறையாக கோபுரத்தின் அடியை தேடி கீழே பார்த்தேன். உபபீடத்தை காணவில்லை. ஒவ்வொரு முறை ரோடு போடும்போது தரை உயரத்தை  4 இஞ்ச் கூட்டியதால் உபபீடம் உள்ளே போய்விட்டது.  நாலைந்து படிகள் இறங்கி உள்ளே நுழைந்து பிரகாரத்தில் இருந்து பார்த்தபோது கோபுரத்தின் முழு கட்டுமான அமைப்பும் அழகும் தெரிந்தது

வெளிப்பிரகாரத்தில் உள்ள சிறிய மண்டபத்தூணில் கருவறையில் இருந்து ராஜகோபுரம் வரை வரலாற்றின் எந்தெந்த  காலத்தில் கட்டப்பட்டது என்ற தகவல் பலகை வைப்பட்டிருந்தது. இதற்குமுன் பலமுறை இந்த பலகையை பார்த்திருந்தாலும் எந்தவித  சலனமும் இன்றி கடந்து சென்றிருக்கிறேன்.  

முதன்முறை கோவில் ஒரு வரலாற்றுச் சின்னமாக, கலை, பண்பாட்டுச் சின்னமாக கண்ணுக்குத் தெரிந்தது. அந்த தகவல் 

பலகையின் ஊடாக, ராஜகோபுரம் எழுப்பப்பட்ட 17ம் நூற்றாண்டில் இருந்து  கருவறை அமைக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டு வரை வரலாற்றில் பின்னோக்கிய காலப்பயணம் தொடங்கியது. ஒரே மாதிரியான தூண்களும் அவற்றில் விதவிதமான சிற்பங்களும் நிறைந்த மகா மண்டபத்தின் உள்ளே சென்றது ஞாபகம் இருக்கிறது. அதற்கு பிறகு என்னை சுற்றி உயிர்த்து எழுந்து விரிந்து பரந்து பெரிதாகிக் கொண்டிருந்த ஒரு இருப்பின் முன்னால் நான் மிகவும் சிறியதாகி கொஞ்சம் கொஞ்சமாக  கரைந்து ஒவ்வொன்றாக தொட்டுத்தொட்டு முன்னே சென்று கொண்டிருந்தேன்

அரைநாழி மண்டபம் கடந்து கருவறை அருகே வந்துவிட்டேன். கீழேயிருந்து ஒவ்வொரு அடுக்காக விமானத்தை பார்த்துக்கொண்டே மேலே  சென்றேன். ஆகாயத்தில் பறக்கும் இயந்திரத்துக்கு விமானம் என்று பெயர்கருவறையின் கூரைக்கும்விமானம்என்று ஒரே பெயர். ஏன்? “எப்படி  இயந்திர விமானம் மனிதனின் ஸ்தூல சரீரத்தை அவனுடைய  இலக்கு (destination) வரை கொண்டு சேர்க்கிறதோ அதைப்போல உயிர்களின் சூட்சும சரீரத்தை அதன் இலக்காகிய இறை ஆற்றலோடு இணைக்கும் கருவியே கருவறை விமானம்என்று  வை.கணபதி ஸ்தபதி ஐயா சொன்னது  நினைவுக்கு வந்தது.

செத்த பிறகு அல்ல சிவலோகம்வாழும் நாள்தோறும் ஆலயத்தினுள் வந்து நின்று ஒன்றியிருந்து நினைந்து கரைந்து நிற்கும் உயிர்க்கு அன்றன்றைக்கு இறை சக்தியோடு கூடும் வாய்ப்பை அருளும் அமைப்பு விமானம். இதைத்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார் போல

இதற்குள் மூன்று மணி நேரம் கடந்து விட்டிருந்தது. கருவறையை வலம் வந்து முடிப்பதற்குள் மக்கள் நடமாட்டம்  தொடங்கிவிட்டது. அன்று பிரதோஷம் என்பதால் பூஜை ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. சிவப்பு மஞ்சள் ஆடைகளில் வெளிமாநில பக்தர்களும் சேர்ந்துவிட  கூட்டம் களைகட்டியது. பூஜை தொடங்கி விட்டது.  சாம்பிராணி புகைக்கு நடுவே கருவறை விளக்கு மட்டும் தெரிந்தது, மூலவரை பார்க்க முடியவில்லை. கண்ணை திறந்து கும்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன்.  கருவறையில் மட்டும் அல்ல விமானம் தொடங்கி கோபுரம் வரை ஆலயம் முழுவதும் பரந்து விரிந்து நிறைந்து  இருப்பதுவும் இறையின் வடிவமே என்று ஆசிரியர் ஜெயக்குமார் சொன்னது நினைவில் எழ, அளவிட முடியாத அந்த பிரம்மாண்டத்துடன் என்னை ஒரு தூசியாய் இணைத்துக்கொண்டேன். அப்போதும் சரி இப்போது இந்த கடிதத்தை எழுதும் போதும் சரி

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்

 நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்

மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்

 மறைநான்கு மானாயா றங்க மானாய்

பொன்னானாய் மணியானாய் போக மானாய்

 பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை

என்னானாய் என்னானாய் என்னி னல்லால்

 ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே” 

என்று repeat mode-ல் மனம் பாடிக்கொண்டு இருக்கிறது

மிக்க நன்றி சார்!

இளமதி குறள்முரசு

ஹைதராபாத்

முந்தைய கட்டுரைஅறியாமையிலிருந்து ஒளிக்கு