அறியாமையிலிருந்து ஒளிக்கு

இனிய ஜெயம்

எப்போதும் இந்த வாழ்வு கிளர்த்தும் உணர்வுகளின் உணச்சிகளின் கொந்தளிப்பிலேயே இருப்பவன் நான். அறிவு சார்ந்து சற்றேனும் தெளிவு கொள்வதே  சமநிலை கொள்ள ஒரே வழி. என்றேனும் நான் அதை எய்தக் கூடும் எனில், குறைந்த பட்சம் அதற்கான அரிச்சுவடியேனும் என்னுள் இருக்கவேண்டும். அதன்பொருட்டே  நீங்கள் எடுக்கும் தத்துவ வகுப்புகள் எனக்கு தேவை.

அந்த வகையில் நமது தத்துவ வகுப்பின் துவக்கத்தில், ஒன்றை தத்துவார்த்தப்படுத்திக்கொண்டு சிந்திப்பது எப்படி? அதை தர்க்க முறைப்படி முன்வைப்பது எப்படிஎன்றெல்லாம் நிகழ்தப்பட்ட பயிற்சிகளை நான் தினமும் ஒரு முறையேனும் மனதுக்குள் செய்து பார்ப்பேன்.

உதாரணமாக நோம் சாம்ஸ்கி குற்றவாளியா? குற்றவாளி எனில் காரணம் என்ன? உதாரணம் என்ன? அந்த உதாரணத்துடன் இது எந்த வகையில் பொருந்தி வருகிறது என்றெல்லாம் சொல்லிப் பார்ப்பேன்.

நோம் சாம்ஸ்கி பிரச்னை என்று திட்டவட்டமாக எதை சொல்கிறோம். அறிவுக்கும் அதிகாரத்துக்குமான தொடர்பு என்ன? அந்த தொடர்பு எல்லா காலங்களிலும், உலகின் எல்லா பகுதிகளிலும் எவ்விதம் இருந்தது? இதே பிரச்சினையை கலாச்சார வேறுபாடுகள் எவ்விதம் எதிர்கொள்ளும்? இதில் சாராம்சமாக துலங்கி வரும் அறுதி உண்மை என்ன என ஒவ்வொன்றையும் எழுதிப் பார்ப்பேன். தெளிந்துவிட்டேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் தெளிவு நோக்கி நான் நகர்ந்துகொண்டு இருக்கிறேன் என்று நிச்சயமாகவே அறிய முடிகிறது.

மேற்சொன்ன அடிப்படைகளை கொண்டு நீங்கள் கற்பிக்கும் இந்து தத்துவ மரபு வகுப்பின் ஒரு பகுதியாக நிகழ்ந்த பிரம்ம சூத்ர அறிமுக வகுப்பு எனக்கு துவக்கம் முதலே பரவசமாக இருந்தது.

கிட்டதட்ட 3000 வருடம் முன்னர் வாழ்ந்த ஒரு ஞானிக்கு இன்று வாழும் என்னிடம் சொல்லகாலாதீதம் கொண்ட என்றும் உள்ள ஒன்று உள்ளது. அது என்ன எனும் பரவசம் முதலாவது. அடுத்தது சமஸ்க்ருத சூத்திரங்களை சொல்லும்போது அது கவிதை போலவே தொனித்த அழகு. ஒற்றை அல்லது இரண்டு லிபி மட்டுமே கொண்ட குழந்தை பேசும் துவக்க சொல் போலும் அமைந்த சில சொற்கள், கவிதை போலவே சில சூத்திரங்கள் கொண்ட மிஸ்டிக் அம்சம்

உண்மையில், அது அதிர்வுகளாக இருக்கிறது, ஒளியாக உணரப்படுகிறது என்ற சூத்திரம் முன் திகைத்து நின்று விட்டேன். காந்தம் என்பதை மனித குலம் பண்டைய காலம் முதலே அறிந்திருந்தாலும், 1600 களில்தான் பூமி ஒரு பெரிய காந்தம் என்று கண்டறியப்பட்டது. 1800 முதல் 1900 வரை நூறு ஆண்டுகள் வழியாகத்தான், மின் புலம், காந்த புலம், இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பகுதி ஆகி மின்காந்த புலம் இவையெல்லாம் கண்டறியப்பட்டது

உண்மையில் மின்புலம் காந்தப்புலம் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று சிக் சாக் ஆக துடித்து அது அதிர்வுகளாகத்தான் இருப்புக்குள் வருகிறது. அதில்தான் ஒளி திகழ்கிறது. அந்த அதிர்வுகளைதான் நாம் ஒளியாக அறிகிறோம்.

அதை 3000 வருடம் முன்னர் ஞானியர் உள்முக மெய்தேட்டம் வழியே உணர்ந்து, இத்தனை துல்லியமாக அதை வரையறை செய்து, புரவயமாக சூத்திரமாக அதை முன்வைக்க அவர்களால் முடிந்திருக்கிறது என்பதை நம்பவும் முடியவில்லை, அறிந்து வியக்காமலும் இருக்க முடியவில்லை.

வகுப்பில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சூத்திரமும் ஏதோ ஒரு வகையில் எனக்குள் ஆம் என்றே சொல்ல வைத்து. “அதுவானம் போன்றது என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதை, காலை நடையின்போது எனக்குள் சொல்லிப்பார்த்து ஒரு முறை அந்த சூத்திரங்கள் சொன்னபடி வானத்தை பூமியை பார்த்தேன்.

வானம். வடிவிலி, முடிவிலி, அலகிலி அதுவே ஆதாரம்.

அதிலிருந்து வந்ததே இந்த பூமி. (மனிதன் பூமிக்கு இணை. அவனுக்குள் இருக்கும் ஆன்மா வானுக்கு இணை) வானில் இருந்து வந்தாலும், பூமி வானம் அல்ல. இதற்கு வடிவம் உண்டு அலகு உண்டு முடிவு உண்டு. இந்த பூமிக்குள் வானம் இருந்தாலும் இந்த வானில் அந்த வானத்தின் கூறுகள் இருந்தாலும் பூமிக்குள் இருக்கும் இந்த வானம் அந்த வானம் அல்ல.

இதுவே பாதராயணர் சொல்வது

வானம். முடிவிலி, வடிவிலி, அலகிலி. அதன் வெளிப்பாடு பூமி. குட ஆகாசத்துடன் பிரியாது இருக்கும் மட ஆகாசம் போல, பூமிக்குள் இருக்கும் இந்த வானமும், அந்த வானமும் வேறு வேறு அல்ல. தோன்றி நிகழ்ந்து மறையும் பூமி ஒரு தோற்றம் மட்டுமே. இது மித்யை. வானமே ஆதாரம் அது மட்டுமே இருக்கிறது. பிரம்மம் சத் ஜகன் மித்யை. இது சங்கரர் சொன்னது.

எல்லாமே ஒரு வரிசைக்குள் வந்துவிட்டது இனி இந்த அரிச்சுவடி ஒருபோதும் என்னை விட்டு நீங்காது. இப்படி இன்னும் சொல்ல விஷயங்கள் உண்டு. நிற்க.

நாம் அருகர்களின் பாதை பயணம் சென்றபோது, அதிகாலையில் எழும் சூரியனை பார்த்தபடி சிறவனபெலகோலா குன்றின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே, அசத்தோமா சத் கமய ஸ்லோகத்தின் முதல் வரியை கீழ்கண்டவாறு இப்படி விளக்கினீர்கள்

அறியப்பட வேண்டிய உண்மை அது அறியப்படா நிலையில் இருக்கிறது அதுவே அசத்

சத்; இருப்பு அல்லது அறிவு

இன்மையில் இருந்து இருப்புக்கு.

அல்லது,

அறியாமையில் இருந்து அறிவுக்கு

அதுவே

அசத்தோமா சத் கமய

அந்த அறிவுக்கான பாதை இந்த வகுப்பு. அரிச்சுவடியை பழுதறக் கற்க வேண்டும்.

வகுப்புகளுக்கு நன்றி சார் 🙂

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகலைப்பட ரசனை, கடிதம்