வெற்றி, கடிதம்

அன்புள்ள ஜெ

வெற்றிக்கு முதல் தேவை வெற்றியை விரும்புவது என்பது ஒரு முக்கியமான கருத்து என்று தோன்றுகிறது. நம்  சூழலில் பெரும்பாலான முதியவர்கள் நம்மிடம் திரும்பத் திரும்ப சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று இங்கே அதிகாரம், பணம் மட்டும் தான் வெல்லும். ஆளு இருந்தால்தான் ஜெயிக்க முடியும். யோகம் இருந்தால்தான் வாய்ப்புகள் வரும். எல்லாமே நமக்கு சோர்வையும் சலிப்பையும் ஊட்டும் விஷயங்கள்.

ஒவ்வொரு சூழலிலும்  தோற்றுப் போனவர்களையே கொண்டாடி முன்னிறுத்துகிறார்கள். தோற்றுப் போனவர்களை எல்லாம் தகுதி கொண்டவர்கள் என்றும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையிலே திரைப்படம் சார்ந்த ஒருவர் இறந்து போனார். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் நிறைய படம் பார்த்து தள்ளியவர். படங்களை பற்றி புள்ளி விவரங்களாக பேசுவார். எல்லா விஷயங்களுமே ஏற்கனவே விக்கிபீடியாவில் இருக்கும் விஷயங்கள்தான். அவரால் தகவல்களை மட்டும் தான் சொல்ல முடியும். ஒரு நல்ல காட்சியை தனியாக சொல்ல முடியாது. ஒரு கேள்வியை கேட்டு அவரிடம் பதில் வாங்க முடியாது.

சினிமா மேலும் மிகுந்த தீவிரமான பற்று கொண்ட ஆனால் கொஞ்சம் குழம்பிப்போன ஒரு தனிநபர் என்றுதான் நான் அவரைச் சொல்வேன். நாங்கள் நிறைய தடவை டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது நான் அவரிடம் நீங்கள் ஏதாவது ஒரு நல்ல திரைக்கதை எழுதி பார்க்கலாமே இவ்வளவு பேசுகிறீர்கள் என்று சொல்வேன். அவரால் எழுத முடியாது. அவரை நடிக்க வைக்க முடியாது. அவர் ஒரே மாதிரி தான் இருப்பார். அவரை திரைக்கதை விவாதங்களில் உட்கார வைக்க முடியாது. அவர் சம்பந்தமில்லாத படங்களை அள்ளி கொட்டி அந்த விவாதங்களை இல்லாமலாக்குவார்.ஆனால் சினிமாவில் இருந்து கொண்டே இருந்தார்.வறுமையில் இறந்து போனார். அவர் இறந்த உடனேயே அவர் தோற்றுப் போன மேதை, வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.

வெற்றிக்கு எதிரான இந்த மனநிலைதான் நம் நடுத்தர வர்க்கத்தினரை கீழே விழ்த்துகிறது என்று தோன்றுகிறது. வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் ஆக்குகிறது .தங்கள் தகுதியை பற்றி அவநம்பிக்கையை உருவாக்குகிறது. தோல்வியடைந்தாலே அது பெரிய விஷயம் என்று எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. ஆனால் உயர் குடியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்க்ள். தாங்கள் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். குறைவான தகுதி இருந்தாலும் இந்த தன்னம்பிக்கையால் அவர்கள ஜெயித்து விடுகிறார்கள்.

இந்த கட்டுரை அந்த வகையிலே மிக முக்கியமானது

சிவா அருண்குமார்

முந்தைய கட்டுரைஓஷோவை அறிதல்…