உங்களுடைய காணொலியைப் பார்த்தேன். மனச்சோர்வுக்கு தீவிரமான உடல் செயல்பாடு மிக முக்கியமான ஒரு தீர்வாக அமைய முடியும் என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
தனிப்பட்ட முறையில் இந்தக் கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் இதை நானே பல சந்தர்ப்பங்களில் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள், வேலைகளால் ஏற்படும் அழுத்தம், நீண்ட நேரம் அறிவுசார் செயல்பாட்டில் ஈடுபடுவதால் ஏற்படும் களைப்பு போன்றவை சில சமயங்களில் ஓய்வெடுப்பதன் மூலம் மட்டும் தீர்வதில்லை. மாறாக, உடலை முழுமையாக ஈடுபடுத்தும் ஒரு செயல்பாடு அந்தச் சோர்விலிருந்து முற்றிலும் வேறொரு நிலையில் நம்மைக் கொண்டு செல்கிறது.
உடல் கடுமையாக உழைக்கும்போது மனம் தன்னுடைய தொடர்ச்சியான சிந்தனைச் சுழற்சியிலிருந்து இயல்பாகவே வெளியே வருகிறது. அதன் பிறகு கிடைக்கும் களைப்பு கூட ஒரு வகையில் புத்துணர்ச்சியாக மாறுகிறது. உடல் சோர்ந்திருந்தாலும் மனம் தெளிவாகவும் அமைதியாகவும் இருப்பதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
நாம் நவீன வாழ்க்கையில் அறிவுசார் உழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் உடல் செயல்பாட்டை அதற்குரிய அளவுக்கு மதிப்பதில்லை. குறிப்பாக தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, உடலை தீவிரமாக இயக்குவது மனத்திற்கான ஒரு இயல்பான சமநிலையை உருவாக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
அந்த வகையில், உங்கள் காணொலியில் நீங்கள் கூறிய இந்தக் கருத்து எனக்கு மிகவும் முக்கியமானதாகவும் நடைமுறையில் பயனுள்ளதாகவும் தோன்றியது. அதை ஒரு பொதுவான அறிவுரையாக மட்டுமல்லாமல், என்னுடைய சொந்த அனுபவத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது. அதற்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கதிர்வேலன் கா











