அன்புள்ள ஜெ ,
உங்கள் தளத்தை 2018 முதல் வாசித்து அதை நட்பு வட்டத்தோடு விவாதித்து வருகின்றோம். வீட்டில் உள்ள யாரும் காலை எழுந்தவுடன் செல்போனில் கண்விழிக்க கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டு, அவர்கள் யாரும் என்னை பார்ப்பதற்குள்ளாக அல்லது நான் பல் துலக்குவதற்கு முன்பே உங்கள் தளத்தை வாசித்து விடுவது வழக்கமாகிவிட்டது. இந்த பழக்கம் மரிஃபா வரை வளர்ந்திருக்கிறது.
மார்ச் 2024 தில்லை செந்தில் அவர்களின் தியான வகுப்பும் செப்டம்பர் 2024 மற்றும் அக்டோபர் 2025 நடந்த விபாசனா வகுப்பும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிற ரசவாதத்தையும் மாயாஜாலத்தையும் விளக்கி எழுதுவது சாத்தியமில்லை. அப்போது நவீன மருத்துவ அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது என்ற மனக்குறை அப்படியே தங்கிவிட்டது எனவே ஆகஸ்ட் 2026 அறிவிப்பு வந்தவுடன் என்னுடைய நட்பும் சுற்றமும் சூழ வருகை தந்து விடுவார்கள் என அவர்களிடம் பகிர்ந்து, புது சினிமாவின் சனிக்கிழமை மாலை காட்சிக்கு வரும் கூட்டம் போல அலைமோதும் என நினைத்து (நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை) அறிவிப்பு வந்தவுடன் பதிவு செய்து விட்டேன் நான் தகவல் பகிர்ந்து கொண்ட கூட்டம் எல்லாம் சேற்றில் இருந்து வர மறுக்கும் “தமோ” குண கூட்டம் என உங்கள் காணொளியில் புரிந்து கொண்டேன்.

மழை பேருந்தில் நம்மோடு வந்திறங்கி மிக சாதாரணமாக கற்க வந்தவரைப் போல் நித்தியவன வகுப்பறையில் நுழைந்தபோது அவர் ஆசிரியர் என உணரும் முன்பே– இல்லை பேராசிரியர் என எங்கள் ஊர் கிராமத்து பெண்கள் பேயாடும்போது விஸ்வரூபம் எடுப்பார்களே அதுபோல விஸ்வரூபம் எடுக்கிறார்.
தைத்திரிய உபநிடத ஓம் சாந்தி பாடலோடு தொடங்கிய வகுப்பில் முதன் முதலில் கடலுக்குள் உருவான ஒரு செல் உயிரின் உடலுக்குள் கடல் என்ற தத்துவத்தோடு உயிரின் அடிப்படை கார்பன் அதுவே உடற் செல்களை புரிந்து கொள்ள அதன் மூலக்கூறுகளை அறிந்து கொள்ள உதவுகிறது என்பதையும் அதிலிருந்து தொகுத்து தொகுத்து உறுப்பு மண்டலங்கள் உடற்செயலில் நுண்ணுயிரியல் நோயியல் மருந்தியல் நோயை சரியாக கண்டறிதல் மட்டுமின்றி சரியான மருத்துவரை கண்டறிதல் வரை ஒவ்வொன்றாக விளக்கிய போது கல்லூரி காலங்களில் துணைப்பாடமாக வேதியியல் வாத்தியார் வகுப்பிற்கு வந்தபோது வாத்தியார் என்னை ஈட்டியால் குத்துவது போலவும் நான் அவரை கல்லெடுத்து எரிந்தது போலவும் கனா கண்டிருக்கிறேன். ஆனால் மனித உடலெனும் மாபெரும் பேர அதிசயத்தில் நடக்கும் வேதிவினை மாற்றங்களை தேன் தடவி கொடுத்த போது இப்படி ஒரு வாத்தியார் வாய்திருந்தால் என்ற எண்ணத்தை தவிர்க்கவே முடியவில்லை. அறியாமை எனும் கேள்விகள் எங்களுக்குள் விழுந்திருந்த ஓட்டைகளை ஆசிரியர் தன் பதில்களால் அடைத்துக் கொண்டே இருந்தார் .அதில் ஒன்று இளநீரை மனித உடலுக்குள் நேரடியாக செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது என்ற நண்பரின் கேள்விக்கு அதை யார் எழுதியிருந்தாலும் அல்லது சொல்லியிருந்தாலும் என்று தன் நெற்றிக்கண்ணை காட்டி அறிவில் தாண்டி தடம் புரளாமல் புரிய வைக்கிறார்.
15 நிமிடம் இடையே ஓய்வு என கூறினாலும் அதில் 30 கேள்விகளால் அவரை சூழ்ந்து கொண்டோம் இடைவெளி நேரம் என்பது இடம் மாறிய வகுப்பறை தான். இவ்வளவு கேள்விகள் கேட்ட எங்களுக்கு ஒரு கேள்வியை கேட்க கற்றுக் கொடுத்தார் அது – இது அவசியம் தானா ?எனும் கேள்வி மனித உடல், மருத்துவம் பற்றிய என் நம்பிக்கைகள் எனும் வெங்காயம் ஒவ்வொன்றாய் உரிய தொடங்கிய மூன்றாம் நாளில் இல்லாமல் ஆகிவிட்டது என நினைத்தபோது….. தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதே அளவு இருக்கிறது என்று ஓங்கி மண்டையில் ஒரு கொட்டு வைத்து விட்டார்.
சிரிப்பும் கொண்டாட்டமும் ஆசிரியர் மாணவர் முழு ஈடுபாட்டோடும் ஒரு கற்றல் நிகழ்ந்த போது ஓம் சாந்தி மந்திரம் புரிந்தது.நித்தியவனம் அமைந்துள்ள இதே காடுகளில் காவல்துறை அதிரடிப்படையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தாலும் காடு நாவலை படிக்கும் வரையும் மேலும் இந்த வகுப்புகளில் பங்கேற்கும் வரையும் காடு எனக்குள் நுழையவே இல்லை.
50 ஆண்டுகளாக இதே உடலோடு வாழ்ந்திருந்த போதிலும் நவீன மருத்துவ அறிமுக வகுப்பிற்கு வரும் வரை இந்த உடலுக்குள் நான் எட்டிப் பார்க்கவே இல்லை.
யான் பெற்ற கற்றல் இன்பத்தை அறிவார்ந்த முன்னகர்வை பெறுக என எத்தனை பேரிடம் சொல்லியும் வராமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்து சொல்பவர்களுக்காக என்ன செய்ய முடியும் .முதலில் வருத்தப்பட்டு பிறகு Rotten apple போல கூடையில் வந்து சேரவில்லை என்ன சந்தோசப்படுகிறேன்.
ஏனெனில் அவர்கள் சொன்ன காரணங்களில் முதன்மையானது விடுப்பும் ,அவர்கள் வந்துவிட்டால் நடக்கும் உலகத்தின் உருக்குலைவும் தான். மூன்று நாள் பயிற்சி முடித்து அதே பதபதைப்போடு வந்து சேர்ந்தால் காக்கைக்கும் குருவிக்கும் உள்ளது போலவே என் காவல் நிலையமும் தன் (இயற்கை) விதிப்பிடியே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த உடலை உட்கார மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றவர்களுக்கு மத்தியில் மனித உடலெனும் பேரதிசயத்தை மகத்தான காரணங்களுக்காக பயன்படுத்த முடியும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வகுப்பை முடித்த போது அந்த மகத்தான பணியை யார் செய்து கொண்டிருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை எனில் எங்களுக்குள் கற்றல் நிகழவே இல்லை என்பதே பொருள்
நன்றி ஜெ.
அன்புடன் ராஜா
சென்னை











