மகளிர் மட்டும்

oplus_2097184

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

லோகமாதேவி Mam உடன் தாவர நடை செல்லும்போது, கிணத்துக் குடிலிலிருந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. ‘இப்படி சத்தமாக  பெண்கள் சிரிப்பதை கேட்க  சந்தோஷமாக உள்ளதுஎன்றார்கள். இந்த வகுப்பைப் பற்றி யோசிக்கும்போது முதலில் நினைவுக்கு வருவது ஆனந்தமான மனநிலையுடன் கூடிய வெடிச்  சிரிப்புகள் தான்

 வகுப்பை தொடங்கும் போது, ‘இது ஒரு Male Chauvinist ன் பார்வைஎன்று Disclaimer போட்டீர்கள். முதல் அமர்வு, எழுத வரும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தது. மற்றவருக்கு நிரூபிக்க என்று எழுத ஆரம்பித்தால், அதற்கு எந்தவித பிரயோஜனமும் இருக்காது. ஏனெனில் அவர்களுக்கு எழுதுவதன் முக்கியத்துவம் எவ்வளவு கூறினாலும் புரியப்போவதில்லை. நீங்கள் பாகுலேயன் பிள்ளை அவர்களுக்கு  நிரூபிக்க எழுத ஆரம்பித்தீர்கள். அப்பா, கதை வெளிவந்திருக்கும் புத்தகத்தை திறந்து பார்த்திருக்கிறாரா என்பதை கண்டறிய, ஏதோ ஒரு கோணத்தில் அதன் மீது பேனா வைத்து துப்பறிந்திருக்கிறீர்கள்எல்லோரும் இருக்கும்போது, அனாதையாக உணர்ந்த சிறுவனின் கதையை எழுதி முடிக்கும் போது, ‘நிரூபிக்க வேண்டும்என்ற கட்டத்தை தாண்டி விட்டீர்கள். அப்பாவின் நண்பர், அவர் எவ்வாறு உங்கள் கதை வெளிவந்திருக்கும் 50 புத்தகங்களை வாங்கி ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அங்கு அதை மறந்து வைத்து விட்டு வருவது போல் வந்துவிடுவார்கள் என்று உங்களிடம் கூறினார். மிகவும் நெகிழ்ச்சியான  தருணம். அதே போல, வேலை இழந்த ஆசிரியர், படகையும் தவற விட்டு, ஒரு சிறு பெண்ணின் வீட்டில், அவள் கொடுத்த கிழங்கை உண்டு இரவைக் கழிப்பார். அவர் கண்களுக்கு அவள் அன்னை பகவதியாகவே தோன்றுவாள். ‘ கொச்சு கிரகஎன்ற அந்த கதையும் நெகிழ வைத்தது.

 கலையின் அவசியம், ஒருவரின் சுதர்மத்தை பற்றி இந்து மதம் கூறுவது, எல்லோரும் ஏன், எவ்வாறு  எழுத வேண்டும்?, சிறுகதை தொடங்கிய வரலாறு, அதன் கட்டுமானம், கட்டுரையின் மூன்று  வடிவங்கள், புதுக்கவிதையின் வரலாறு, கவிதையில் என்ன இருக்க வேண்டும் இருக்கக் கூடாது, சிற்றுரை ஆற்றுவது எப்படி என்று பல தலைப்புகளில் அமர்வுகள்  நடந்தன. மற்ற வகுப்புகளைப் போல் எந்த பாடத்திட்டமும் இல்லாமல் ஆரம்பித்தாலும், முடிக்கும்போது ஒரு கச்சிதமான வடிவில் திரண்டு வந்திருந்தது

 பௌர்ணமி இரவில் புளிய மரத்தின் அருகில்  நடந்த கேள்வி பதில் அமர்வு மறக்க முடியாதது. மேகத்தின் உள்ளிருந்து வெளியே வருமா வராதா என்ற எதிர்பார்ப்புடன் வெகு நேரம் கழிந்தது. இறுதியில், எங்கள்  பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்து, முழு நிலவு பிரம்மாண்டமாக வெளிவந்தது. அதன் பேரொளியில் வெள்ளி மலையே அழகாக காட்சி அளித்தது. எல்லோர் முகங்களையும் தெளிவாக பார்க்கக் கூடிய அளவு வெளிச்சம். தாமரைக்கரையில் இப்போது கூட பிரிட்டிஷ் அரசாங்கம் நிறுவிய வான ஆராய்ச்சி மையத்தின் கட்டிடம் உள்ளது என்று கூறினீர்கள். நிலவு குறித்த கவிதையோ பாடலோ பாடி கேள்வி கேட்கலாம். ஒரே அமர்வில், நிலவு குறித்த அத்தனை பாடல்கள்/ கவிதைகளைக் கேட்டது, அந்த இரவை இன்னும் இனிமையாக்கியது. அச்சு வருவதற்கு முன், நாமும் கேட்கும் சமூகமாகவே இருந்தோம் என்று  நீங்கள் கூறிய பதில் ஒரு புதிய பார்வையை கொடுத்தது. ஒரு ஊருக்கே ஒருவரிடம் தான் சுவடிகள் இருக்கும். மற்ற அனைவரும் கேட்பதன் மூலமே தெரிந்து கொள்வார்கள். சுவடியை பராமரிப்பது ஒரு பெரும் வேலை. Common Education வந்த பின் தான் அனைவரும் எழுதப்படிக்க ஆரம்பித்தனர். புத்தகங்களும் பரவலாக கிடைக்க ஆரம்பித்தன. லலிதா ராகவன் Mam முழுநிலவு கூடுகையை அழகிய ஓவியமாக வரைந்திருந்தார்

 புத்தர் வீற்றிருக்கும் ஈட்டி மரம் முழுவதும் மலர்களால் நிறைந்திருந்தது. காலை நேரத்தில் அதன் அருகில் தேனீக்களின் ரீங்காரம் கேட்டது. லோகமாதேவி  Mam அந்தப் பூவை தலையில் வைத்ததைப் பார்த்து, அடுத்த நாள் நாங்களும் வைத்துக் கொண்டோம். அப்போது தான் அதன் நறுமணத்தை உணர்ந்தேன். தாவரங்கள் குறித்த அறிவியல் தகவல்கள், அதிசயங்களை  பகிர்ந்து கொள்வது போன்றவை ஒரு புறம் இருக்க, அவற்றின் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பை புரிய வைத்து, எங்களையும் அவ்வாறு மாற்றுவதே அவர்களின் பெரிய சாதனை என்று கருதுகிறேன். ஏதோ ஒரு மரம் என்பதிலிருந்து என் மனதிற்கு நெருக்கமான மரமாகிவிட்டது அந்த முழுவதும் பூத்து நிற்கும் ஈட்டி மரம். வகுப்பில் நீங்கள் கூறிய வீரான் குட்டியின் கவிதை ஞாபகம் வருகிறது.

பூத்தபடி

=======

சமவெளியின்

பசுமைநடுவே

இலைகாய்ந்து

நிற்கும் மரமே

பூத்துநிற்கிறாயென்று

தூரத்தே நின்றஒருவன்

எண்ணி

நெஞ்சில் பிரதியெடுத்துக்

கொண்டுசென்றிருக்கிறான் உன்னை.

மரணம்வரை அவனிலிருப்பாய்

பூத்தபடியே நீ.

 மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும், கற்றல் இன்பத்தையும் கொடுத்த இந்த மூன்று நாட்களும், முழுவதும் பூத்து நின்ற தருணங்களாக என்றும் மனதில் இருக்கும். மிகவும் நன்றி ஜெ.

என்றும் அன்புடன்

S.ராஜேஷ்வரி

கோவை.

முந்தைய கட்டுரைமலர்பறித்துச் சூடிக்கொண்டோம்.