அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளி ஒன்றில் உருவம் குறித்த தாழ்வுணர்ச்சி எஇன்று எப்படி ஓங்கி இருக்கிறது, அதை இன்றைய வணிகம் எப்படி போக்கி வளர்க்கிறது என்பதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இன்று தாழ்வுணர்ச்சியை வளர்த்துத்தான் வியாபாரத்தை செய்கிறார்கள். நீங்கள் கருப்பா இருக்கிறீர்களா, உங்களுக்கு தலையில் முடி இல்லையா, நீங்கள் உயரம் குறைவாக இருக்கிறீர்களா- இந்த பொருட்களை வாங்குங்க்ள் என்று திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள்.
இந்த தாழ்வுணர்ச்சியின் விளைவான மனநிலை எங்கும் காணப்படுகிறது. ஒவ்வொருவரும் மிக எளிதாக புண்படும் நிலையில் இருக்கிறார்கள். சாதாரணமாக ஒருவரின் உருவத்தை சொன்னாலே அது பாடி ஷேமிங் என்று சொல்லப்படுகிறது .சாதாரணமான பேச்சில் ஒருவரை அடையாளத்திற்குச் சொன்னால் கூட அதை புண்படுத்தலாக எடுத்துக் கொள்கிறார்கள்.ஒவ்வொருவருமே மிகுந்த சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களாக மாறி இருக்கிறார்கள்.
இதன் விளைவாக எல்லா நட்புகளிலுமே மிக மிக கவனமாக பேச வேண்டி இருக்கிறது. ஒரு பொது இடத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணிப் பேச வேண்டி இருக்கிறது. இது தனிமனித உறவுகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. ஒருவர் தன் தோற்றம் பற்றிய உணர்விலிருந்து விடுபட்டால் ஒழிய அவருக்கு அறிவார்ந்த வளர்ச்சி எதுவும் இல்லை இருக்காது என்பதுதான் என் எண்ணமும்கூட.
ஆ.ரத்தினம்












