இந்து தத்துவம் ஐந்தாம் நிலை.

    இந்து தத்துவம் ஐந்தாம் நிலை

    ஜெயமோகன் நடத்தும் இந்து தத்துவ வகுப்புகளின் ஐந்தாவது நிலை தொடங்கவுள்ளது. இது நியாய வைசேஷிக அறிமுகம். முந்தைய நான்கு வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள் இதில் பங்கெடுக்கலாம். மீண்டும் பங்கெடுக்க விரும்புபவர்களும் பங்கெடுக்கலாம்.

    நாட்கள் செப்டெம்பர் 4,5 மற்றும் 6

    தொடர்புக்கு [email protected]

     

    அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இடமிருப்பவை

    சூஃபி மரபில் வந்த அறிஞரும், கவிஞரும், பாடகருuம், அலங்கார எழுத்துக்கலை நிபுணருமான   ஃபயாஸ் காதிரி நடத்தும் வகுப்புகள் மீண்டும் நடைபெற உள்ளன.

    இந்த வகுப்பில், இந்தியாவின் கலைமரபில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இஸ்லாமிய- சூஃபி கலை மரபு பற்றிய அறிமுகம் நிகழும். கசல் இசை அதன் ஒரு ஒளிமிக்க முகம். அலங்கார எழுத்து முறை இன்னொரு கலை வடிவம். சூஃபி கவிதை மரபு மூன்றாவதாக  முக்கியமானது.

    உருது இலக்கியக்-கலை மரபு என்று அதை ஒட்டுமொத்தமாகச் சொல்லலாம். பாரசீகக் கலை, அரபியப் பண்பாடு, மற்றும் தொன்மையான இந்திய பண்பாடு ஆகியவற்றின் கலவையாக  இந்தியாவிலே உருவாகி வந்த இந்த மரபுக்கு தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்த துணை மரபு உண்டு, என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

    நம் தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இஸ்லாமியக் கலை-இலக்கியம் பற்றி  இங்கு தமிழ் பண்பாடென்றும்  சமகால மரபென்றும் பேசிக் கொண்டிருப்பவர்கள் முழுமையான அறியாமையிலேயே இருக்கிறார்கள். அது  சிந்தனை அளவிலே நமக்கு மிகப்பெரிய குறைபாடுதான். அதன் பொருட்டுதான் இந்த வகுப்புகள்  ஒருங்கிணைக்கப்படுகின்றன.

    கசல் இசைப் பாடகர், உருது இலக்கிய அறிஞர், அரபு உருது எழுத்துக்களை நிபுணருமாகிய ஃபயாஸ் காதிரி  இந்த எல்லா கலை வடிவங்களையும்  மூன்று நாள்களின் எளிமையாக அறிமுகம் செய்கிறார். ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் மகிழ்ச்சியான கற்றலனுபவத்தை அளிக்கும் வகுப்புகளாக இவை முன்பு நிகழ்ந்தன. மீண்டும் நிகழவுள்ளன.

    அனைவரையும் வரவேற்கிறோம்.

    நாள் ஆகஸ்ட் 21, 22, 23

    தொடர்புக்கு [email protected]

    விஷ்ணுபுரம் நண்பர்கள், Living Tamil என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். சர்வதேச விருது ஒன்றையும் வழங்கவிருக்கிறோம். வரும் 2027 செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் லண்டனில் லிவிங் தமிழ் லிட்ஃபெஸ்ட் இரண்டாவது நிகழ்வை நடத்தவருக்கிறோம்.

    இதன் ஒரு பகுதியாக, SOUTH BOUND என்ற ஆங்கில இணைய வார இதழை தொடங்கவிருக்கிறோம். இந்த இதழின் ஆசிரியர்கள் முழுக்கவே இளைஞர்கள். தமிழ்நாட்டின் இளைய தலைமுறையின் குரலாக சவ்த்பவுண்ட், தேசிய அளவில் கவனம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

    இதில் எவகையிலேயும் பங்கெடுக்க விரும்பும் நண்பர்கள் அனைவரும், ஒரிடத்தில் சந்தித்து, இதழின் பொதுவான நோக்கங்கள், செயல்முறைகள், அதில் ஒவ்வொருவரும் எந்த வகையில் பங்கெடுக்க முடியும் என்பதைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணுகிறோம். அதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை.

    நாட்கள் செப்டெம்பர்  10 11 மற்றும் 12

    தொடர்புக்கு [email protected]

     

    மேலையிசை அறிமுகப்பயிற்சி

    அண்மையில் பிரித்தானியாவில் மேற்கத்திய செவ்வியல் இசை நிகழ்வுகளுக்குச் சென்றிருந்தபோதுதான், இன்றும் அத்தனை பேராதரவுடன் இசை நிகழ்வுகள் நடைபெறுவதைக் கண்டுகொண்டேன். ஒரு பெரிய அரங்குக்குள் ஏறத்தாழ மூவாயிரம் பேர் கூடி, ஒரு ‘வெஸ்டர்ன் கிளாஸிக்கல்’ இசை நிகழ்வைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (மாஹ்லரின் ஒரு சிம்பனி அது)

    மேற்கத்திய செவ்வியல் இசை என்பது இன்று நமது திரைப்பட இசை, விளம்பர இசை உட்பட ஏறத்தாழ எல்லாத் தளங்களிலும் ஊடுருவி இருக்கிறது. நாம் ஒரு நாளில் மேற்கத்திய இசையைக் கேட்காத தருணமே இருக்காது என்ற அளவுக்கு அது நம்மைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால், நாம் அதை அறிந்திருப்பதில்லை. முறையாக அறிமுகம் உடைய ஒருவருக்கு, மிகப்பெரிய ஓர் உலகத்தின் கதவைத் திறக்கக்கூடியதாக அது அமையும். அது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு பேரனுபவமாகவும் இருக்கும்.

    மேற்கத்திய செவ்வியல் இசையை அந்த இசையைக் கேட்பதன் மூலம் மட்டும் எவரும் அறிந்துவிட முடியாது. அந்த இசையின் வரலாறு, அதன் வகைமைகள், அதனுள் அடங்கியுள்ள தத்துவம், அதன் அடிப்படை இலக்கணம் ஆகியவற்றை அறிமுகம் செய்துகொண்ட பின்னர், தொடர்ந்து கேட்டு செவிப்பழக்கம் பெறுவதன் வழியாகவே அதற்குள் நுழைய முடியும். சிந்திப்பவர், நவீன வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள விரும்புபவர் என ஒவ்வொருவருக்கும் அது ஓர் அடிப்படைப் பாடம். இன்று ஒருவர் தன்னை நவீனமானவர் என்று சொல்லிக்கொள்வதற்கே அது தேவையாகிறது.

    நவீன மேலைநாட்டு இசை, மேற்கத்திய செவ்வியல் இசையின் ஒரு கலவை வடிவம்தான். மேற்கத்திய செவ்வியல் இசையுடன் ஆப்பிரிக்க, ஆசிய, அரேபிய மற்றும் பல்வேறு இசை மரபுகள் ஒன்றுகலந்துதான் அது உருவாகியுள்ளது. அதையும் ரசிப்பதற்கான அடிப்படையாக இருப்பது மேற்கத்திய செவ்வியல் இசைதான்.

    அஜிதன் நடத்தும் மேற்கத்திய செவ்வியல் இசை வகுப்புகள், இன்று தமிழகத்தில் மிகக் குறுகிய காலத்தில் இந்த இசை மரபுக்குள் நுழைவதற்கான ஓர் அடித்தளத்தை அளித்துள்ளன. அண்மையில், அஜிதனுடைய இவ்வகுப்புகள் மேல்நாட்டு அறிஞர்களிடையேயும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    தமிழில் நடைபெறும் முதன்மையான இசைப் பயிற்சிகளில் இது ஒன்று. இசை நிகழ்த்துவதற்கான பயிற்சி அல்ல; இசையைக் கேட்டு ரசிப்பதற்கான பயிற்சி, அல்லது இசைப் பண்பாடு சார்ந்த பயிற்சி இது.

    இந்த வகுப்புகள் ஏற்கனவே மூன்று முறை நிகழ்ந்து, நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளனர். மீண்டும் நடைபெறுகின்றன. ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்.

    செப்டெம்பர் 18 19 மற்றும் 20

    தொடர்புக்கு [email protected]

     

    நவீன தியானம் மற்றும் உளக்குவிப்பு 

    தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திவரும் நவீன தியானம் மற்றும் உளக்குவிப்புப் பயிற்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏராளமான பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதற்குக் காரணம், இப்பயிற்சியின் அடிப்படையான நவீனத்தன்மை.

    இன்றைய நவீன இளைஞர்களின் உண்மையான சிக்கல் என்பது, ஒரு தனிமனித உள்ளத்தின் மீது அளிக்கப்படும் மிகைச் செயல்சார்ந்த அழுத்தம். தொடர்ச்சியாகக் கற்பனை குறைவான, ஆனால் சவால்மிக்க மூளை உழைப்பைச் செய்வது—அது கல்வியானாலும், பணியானாலும். இதன் விளைவாக, ஒட்டுமொத்தமான மூளைப் பணி அதிகமாகி, ஒவ்வொரு பணியிலும் கவனம் குறைகிறது. ஏதோ ஒரு கட்டத்தில், உள்ளம் எதிர்வினையாற்றத் தொடங்கி, சலிப்பும் அயர்வும் ஏற்படுகின்றன. அதேபோன்று, தொடர்ந்து இருக்கும் பணிச்சுமை அழுத்தத்தினால் துயிலின்மை உருவாகிறது.

    துயிலின்மை உருவான பிறகுதான் ரீல்ஸ் பார்ப்பது போன்ற வீணான செயல்களை நோக்கி உள்ளம் செல்கிறது. அச்செயல்களால் துயிலின்மை உருவாவதில்லை, துயிலின்மைதான் நம்மை அச்செயல்களை நோக்கித் தள்ளுகிறது.

    உண்மையில், இப்பயிற்சியில் பங்கேற்ற பலர், அவர்களுடைய உள்ளம் இணையத்தில் சென்று சிக்கிக்கொள்வதற்கும், பல்வேறு வகையான போதைகளுக்கும், இந்த உளக்குவிப்புப் பயிற்சி ஒரு பெரிய மாற்றாகவும் தீர்வாகவும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

    நமது உள்ளத்தில் என்ன நிகழ்கிறது என்பதைப் பார்ப்பதை நாம் தொடர்ந்து ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால், அதைக் கையாள்வதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை. இந்தத் தியானமுறை, அதைக் கையாள்வதற்கான ஒரு வழியைக் கற்றுக்கொடுக்கிறது. அதன்பின், நம் உள்ளத்தை நாமே பார்க்கச் செய்கிறது. நாம் பார்க்கத் தொடங்கும்போதே, நமது பிரச்சினைகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன.

    அவற்றை நாம் எப்படியோ, நம்மறியாமலே அடக்கி வைத்துக்கொள்கிறோம். நம்மை நாம் மென்மைப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சி, நமது செயலையும் நமது உள்ளத்தையும் ஒத்திசைவுசெய்வதற்கான பயிற்சி, நம்மைக் கோர்த்துக்கொள்வதற்கான பயிற்சி என்று இதைச் சொல்லலாம்.

    சென்ற முறை பயிற்சியில் பங்கேற்ற ஒருவர் ஓர் உண்மையைச் சொன்னார். பென்சிலைத் தொடர்ந்து சீவிச் சீவி கூர்மைப்படுத்திக்கொள்வது போலத்தான்…

    நாட்கள்  செப்டெம்பர் 25 26 மற்றும் 27

    தொடர்புக்கு [email protected]

     

    பறவை பார்த்தல் வகுப்புகள்

    விஷ்ணுபுரம் பறவைபார்த்தல் குழுமம் இன்று ஒரு பெரிய அமைப்பாகத் திரண்டு அனேகமாக ஆண்டு முழுக்க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பறவைபார்த்தல் வகுப்புகள் அதன் பகுதியாக தொடர்ந்து நிகழ்கின்றன. மீண்டும் வரும் அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நிகழவுள்ளன. (அக்டோபர் 2 விடுமுறை என்பதனால் மாணவர்களை கருத்தில்கொண்டு இந்த வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன)

    பறவை பார்த்தல் என்பது இன்று உலகளவில் ஊக்குவிக்கப்படும் ஒரு செயல்பாடு. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு, தொடக்க நிலையிலிருந்தே அது பரிந்துரைக்கப்படுகிறது. மொழி சார்ந்த, மனப்பாடக் கல்வி சார்ந்த, கணிப்பொறி போன்ற நுண்செயல்பாடுகளால் உருவாகும் மூளைச் சோர்விலிருந்து வெளியே கொண்டு செல்லும் ஒரு வழியாக அது கருதப்படுகிறது.

    பறவை பார்த்தல் இயற்கையுடனான ஓர் ஆழ்ந்த உறவை உருவாக்குகிறது. இன்று இயற்கையை ரசிப்பது பற்றி பேசப்படுகிறது. ஆனால் எவராலும் இயற்கையுடன் சும்மா அமர்ந்திருக்க முடியாது. அதிகபட்சம் சில நிமிடங்களுக்குப் பிறகு இயற்கையைக் கூட சலிப்புடன் பார்க்கத் தொடங்குவார்கள். பெரும்பாலானோர் இயற்கை அழகுள்ள இடங்களுக்குச் சென்று, அங்கு உடனடியாக செல்ஃபோனை எடுத்து, வலைத்தளங்களைப் பார்க்க ஆரம்பிப்பதை நீங்கள் காணலாம்.பறவை பார்த்தல், இயற்கையை ஓவியமாக வரைவது, தாவரங்களை அவதானிப்பது போன்ற செயல்பாடுகளின் வழியாகத்தான் நாம் நம்மை இயற்கையுடன் இணைத்துக்கொள்ள முடியும்.

    நம்மை இயற்கையுடன் இணைத்துக்கொள்ளும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்மை அறியாமலேயே, நமது உள்ளம் எப்போதும் நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் மொழி ஓட்டத்திலிருந்து வெளியேறுகிறது. நாம் வெளியே நோக்கத் தொடங்குகிறோம். இயற்கையின் ஒரு பகுதியாக மெல்ல மெல்ல ஆகத் தொடங்குகிறோம்.

    இது நமது அக இறுக்கத்தைத் தளர்த்தி,  ஓய்வுக்குக் கொண்டு செல்கிறது. இந்த அக ஓய்வு அல்லது ஆன்மிக இளைப்பாறுதலுக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மிக அவசியமான ஒன்று. இதை ‘மூளைக்குளியல்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    குழந்தைப் பருவத்திலிருந்தே இதற்குப் பயிற்சி அளிப்பது மிக முக்கியமானது. குறிப்பாக, கடுமையான மூளை உழைப்பினால் உருவாகும் சோர்வை வெல்வதற் குழந்தைகள் கணிப்பொறி விளையாட்டிலோ அல்லது அதுபோன்ற சூதாட்ட விளையாட்டுகளிலோ செல்கிறார்கள். அது அவர்களுக்கு மேலும் இறுக்கத்தையும் சோர்வையுமே அளிக்கிறது. மூளை உழைப்பிலிருந்து காணொளிகளுக்குச் செல்வதென்பது  வாணலியில் இருந்து அடுப்புக்குள் விழுவது போன்றதுதான்.

    அதற்காகவே இயற்கையுடன் தொடர்புடைய பறவை பார்த்தல் போன்ற செயல்பாடுகள் உலகெங்கும் ஊக்குவிக்கப்படுகின்றன. தொடர்ந்து விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுவரும் பறவை பார்த்தல் நிகழ்வுகளில் இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்போது, பெற்றோருக்கும் இயற்கையுடனான ஓர் உரையாடல் திறக்கிறது.

    பறவை பார்த்தல் என்பது மூன்று நாட்களில் முடிவதில்லை. அது ஒரு தொடக்கம். அது எல்லா ஓய்வு நேரங்களையும் எடுத்துக்கொள்ளும் ஒரு செயல்பாடு. ஒரு நகரத்திலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்து சென்றால்கூட, பறவை பார்த்தலை அறிந்த ஒருவரால் இயற்கையை உணரவும், அதில் லயிக்கவும் முடியும்.

    ஆர்வம் உடையவர்கள் கலந்துகொள்ளலாம்.

    நாட்கள் அக்டோபர் 2, 3 மற்றும் 4

    தொடர்புக்கு [email protected]

     

    யோக வகுப்புகள்

    குருஜி சௌந்தர் சத்தியானந்த யோக மரபைச் சார்ந்தவர். முறையான யோகப் பயிற்சிகளை வழங்கும் உலகப் புகழ்பெற்ற அமைப்பில், ‘முதுநிலை குரு’ எனும் பட்டம் பெற்றவர் சௌந்தர்.

    இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்படும் யோகப் பயிற்சி என்பது வெறுமே யோகாசனங்களைச் செய்வது அல்ல. நூறாண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட யோகப் பயிற்சி என்பது, உள்ளத்தைக் குவித்தல் மற்றும் அதற்கேற்ப உடலைப் பயிற்சி அடையச் செய்தல் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தது. இன்று, அதற்கு இணையாகவே உள்ளத்தை அமைதிப்படுத்துதல், உடலின் தசைகளைச் சீரமைத்தல், அதன் பிறகு உள்ளத்தைக் குவித்தல், உடலைப் பயிற்றுவித்தல் ஆகிய அம்சங்களையும் கொண்டதாக யோகப் பயிற்சிகள் அமைகின்றன.

    இந்த மாற்றத்துடன் கற்பிக்கப்படும் சௌந்தரின் யோகப் பயிற்சி மிகப்பெரிய பயனை அளிப்பதாக ஏராளமான நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். ஏறத்தாழ ஆயிரம் பேர் இந்தப் பயிற்சிகளின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.

    இந்தப் பயிற்சிகள் முறையான ஆசிரியர் கண்காணிப்புடன் நடைபெறுகின்றன. தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள் ஆசிரியருடன் தொடர்ச்சியான தொடர்பிலும் இருக்க முடியும். முறையான ஆசிரியரின் கண்காணிப்புடன் தொடர்ந்து செய்யப்படும் பயிற்சிகள், தனியாகச் செய்யப்படும் பயிற்சிகளைவிடப் பெரிய அளவிலான நம்பகத்தன்மையை அளிப்பவை.

    யோகப் பயிற்சிகளின் மூலம் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களை வெல்ல முடியும். உளப் பதற்றம் மற்றும் சலிப்பு ஆகியவற்றைக் கடந்து செல்லவும் முடியும். இன்று பலருக்கு இருக்கும் சோரியாசிஸ் போன்ற தோல் நோய்கள்கூட, கடுமையான மன அழுத்தத்தின் விளைவாக உருவாகலாம். அவற்றுக்கெல்லாம் தீர்வாக உலகெங்கும் யோகப் பயிற்சிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    சொல்லப்போனால், உலகிலேயே சதவீத அளவில் மிகவும் குறைவானவர்கள் யோகப் பயிற்சிகளைச் செய்யும் நாடு இந்தியாதான் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் பயிற்சிகள், நவீன வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிப்பதற்கும், அவற்றை வென்று செல்வதற்கும் மிகவும் அவசியமானவை.

    அக்டோபர் 9 10 மற்றும் 11

    தொடர்புக்கு [email protected]

     

    அடிப்படை ஓவியப் பயிற்சி வகுப்புகள்

    நவீன ஓவியக் கலை என்பது, ஏதோ ஒரு கலைஞர் வரைய, பிறர் பார்த்து ரசிக்கும் ஒன்று மட்டும் அல்ல. ஓவியக் கலையின் உச்ச சிகரங்கள், வாழ்நாள் தவம் செய்த கலைஞர்களால் அடையப்பட வேண்டியவை. ஆனால், ஓவியம் என்பது, அனேகமாக ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவும், இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காகவும், ஒரு வகையில் மனஅழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகவும், கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அன்றாடச் செயல்பாடாகவே இன்று உலகமெங்கும் கருதப்படுகிறது.

    மேலைநாடுகளில், இயற்கைக் காட்சியைக் கூர்ந்து பார்ப்பதற்காகவே, அதை ஓவியமாகப் பல மணி நேரம் எடுத்துக்கொண்டு வரைவோர் உண்டு. அது அவர்களுக்கு இயற்கையோடு இணையும் பேரனுபவத்தையும், அன்றாட வாழ்க்கையின் பல்வேறு வகையான மன அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறும் வழியையும் அளிக்கிறது. அத்தகைய ஓவியப் பயிற்சி மாணவர்கள், குடும்பத் தலைவிகள், பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் அவசியமான ஒன்று. கூடுதலாக, பல்வேறு அறிவியல் துறைகளைக் கற்றுக்கொள்பவர்களுக்கு அடிப்படை ஓவியப் பயிற்சி மிகவும் முக்கியமானது.

    பழைய பிரிட்டிஷ் கல்வியில், ஓவியப் பயிற்சி என்பது ஓர் அடிப்படைத் தகுதியாக இருந்தது. அன்றைய இராணுவ அதிகாரிகள் கூட ஒரு காட்சியைத் துல்லியமாக வரைந்திருப்பதைப் பார்க்க முடியும். ஓவியம் வரைவது அவர்களின் அலுவலின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றைய மேலைநாட்டுக் கல்வியும், ஏதோ ஒரு வகையில் ஓவியத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறது.

    தமிழகத்தின் கல்வியில் ஓவியம் ஒரு பகுதியாக இல்லை. அதுவும், நமது கற்றல் திறனை அது மிகவும் குறைத்திருக்கிறது என்பதும் உண்மை. ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஆனால், அது செல்பேசியில் தான் இருக்குமேயொழிய, மூளைக்குள் இருக்காது. ஒரு நுணுக்கமான காட்சியை, அல்லது ஒரு பொருளை, அல்லது ஒரு கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைப்பதற்கு, நாமே அதைக் கையால் வரைவதுதான் சிறந்த வழியாகும்.

    அண்மையில், ரோம் சென்றிருந்தபோது, கணிசமான மேலைநாட்டினர் அவர்கள் பார்ப்பதை உடனடியாக எளிய கோட்டோவியங்களாக வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது அவர்களின் நினைவில் அந்தக் காட்சியை வாழ்நாள் முழுவதற்கும் பதிய வைத்துக்கொள்ளும் முயற்சிதான்.

    அத்தகைய ஓவியப் பயிற்சியை இந்தியாவில் அளிக்க முடியுமா என்று கேட்டபோது, ஓவியக் கலை நிபுணர் லலிதா ராகவன் அதற்கு ஒப்புக்கொண்டார். மூன்று நாட்களிலேயே, ஓவியம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவருக்கு, அடிப்படையில் காட்சிகளை வரைவதற்கான பயிற்சியை அளிக்க முடியும். அதன்பிறகு அவர் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்துக்கொள்ள முடியும்.

    பழைய பாணி ஓவியப் பயிற்சியால் இதை அளிக்க முடியாது. இது ஒரு நவீனப் பயிற்சி. முன்பு நடைபெற்ற இந்த ஓவியப் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருமே, தங்களால் கண்களால் பார்த்தவற்றை வரைய முடிவதை எண்ணிப் பெரும் மகிழ்ச்சி அடைந்ததைப் பார்த்தேன். மேலும், காட்டிய காணொளியில் உள்ள ஓவியங்கள், அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக வரைந்த ஓவியங்களாகும்.

    மீண்டும் இந்தப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. விடுமுறை நாட்களை ஒட்டி நிகழ்வதால், மாணவர்களும் இதில் கலந்துகொள்ள முடியும். அனைவரையும் அழைக்கிறோம்.

    (19 ஆம் தேதியும் 20 ஆம் தேதியும் பூஜை விடுமுறை. அதையொட்டி இந்த வகுப்பு சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஒருங்கிணைக்கப்படுகிறது)

    அக்டோபர் 17 (சனி) ,18(ஞாயிறு) 19 திங்கள்

    தொடர்புக்கு [email protected]

     

    முந்தைய கட்டுரைநம் தத்துவம் எதற்கு நமக்குத்தேவை?
    அடுத்த கட்டுரைகாணொலிகளை ஒழுங்குசெய்தல்.