
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
பட்டாம்பூச்சி பாடுமா? அது பாடாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அது பாடுவதற்கான ஒரு வாய்ப்பு உண்டு என்று தர்க்கபூர்வமாக நிரூபிக்க முடியும் என்பது மிகப்பெரிய திறப்பு. தர்க்கம் /Logic ஒரு மாபெரும் சக்தி என்பதை உணர்ந்த தருணம் அது. சாம்ராஜ்யங்களை கட்டி எழுப்பவும் இடித்து தரைமட்டமாக்கவும் முடியும். எனக்கு அதைக் கற்றுக்கொள்ள இந்தியாவில் முழுமையறிவை விட்டால் வேறு இடமில்லை. (திருமணமாகாத ஆண்கள் கத்தோலிக்க Bishop-ன் 8 ஆண்டு பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம் என்று கூறினீர்கள்.)
வைசேஷிக அணுக்கொள்கை எவ்வாறு விஞ்ஞானத்திற்கு மிக அருகில் இருக்கிறது, அதன் பதார்த்தங்கள், பிரசஸ்தபாதர் குறித்து, உண்மை என்றால் என்ன, நியாயத்தின் பதார்த்தங்கள் என்று வகுப்பு நடந்தது.வைசேஷிகத்தில் பொருட்களின் இயல்புகளைப் பற்றி கூறும் போது அபாவம் ஒரு இயல்பாக சொல்லப்பட்டது. இது வண்ணக் கடலில் துரோணரிடம் கர்ணன் சொல்வது போல் வருமே என்று ஞாபகம் வந்தது. மலையிலிருந்து கீழே இறங்கியவுடன் அந்த பகுதியை எடுத்து வாசித்து பார்த்தேன். செவ்விலக்கியமான வெண்முரசில் இல்லாத கருத்துக்களே இல்லை. அது ஒரு வாசிப்பில் புரிந்து கொள்ள கூடியதும் இல்லை.
(அத்தியாயம்:57
முற்றத்தில் அமர்ந்திருந்த கர்ணன் மெல்லியகுரலில் “அஃபாவம்” என்றான். துரோணர் புன்னகையுடன் தாடியை நீவியபடி “ம்ம்?” என்றார். “இன்மையும் ஒரு மனோகுணம். அதுவும் பருப்பொருளின் இயல்பாக வெளியே திகழும்.” துரோணர் தலையை அசைத்து “எப்படி அதை அறிந்தாய்?” என்றார். கர்ணன் “கங்கைக்கரையின் நாணல்காட்டில் பன்றி கிடந்த இடம் நாணலால் ஆன குகைபோல ஆகி தொலைவில் நிற்கையில் இருண்ட பன்றியாகவே தெரிவதைக் கண்டிருக்கிறேன்” என்றான்.)
முந்தைய நாள் விவாதம் உங்களுக்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால், அடுத்த நாள் நியாய குசுமாஞ்சலி வகுப்பிற்கு பதில், தனிநபர் விவாதம் போன்ற ஒரு பயிற்சியை கொடுத்தீர்கள். அதற்கென அனைத்து எண்களையும் ஒரு சீட்டில் எழுதி கொண்டு வந்திருந்தீர்கள். (ஒன்பதுக்கு ஆறுக்கும் குழப்பம் வரும் என்பதால் எண் 9-ன் கீழ் எழுத்தில் ஒன்பது என்று எழுதிய அளவு திட்டமிடல்.) வாதத்தை White board ல் எழுதி, குலுக்கல் முறையில் ஓர் எண்ணை எடுத்து, அவர்கள் பிரதிவாதியாக நின்று, சரியான இடத்தில் Logic உடைத்து, அதற்கான காரணத்தையும் கூற வேண்டும். அப்படி பல வாதங்களை பார்க்கும் போது, கொஞ்சம் புரியத் தொடங்கியது. முக்கியமாக, விவாதம் என்பது ஒரு மலை மேல் ஏறி செல்வது போல என்று நீங்கள் கூறிய படிமம். விவாதத்தை தொடங்கும் போது இருவரும் மலையின் கீழே நிற்பார்கள். அதனால் செல்வதற்கு பல பாதைகள் இருக்கும். ஆனால் மேலே செல்ல செல்ல பாதைகள் குறைந்து கொண்டே வரும். இறுதியில் ஊசி முனை அளவே இடம் இருக்கும். அதில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். மற்றவர் கீழே விழத்தான் வேண்டும். அதுதான் நிக்ரஹஸ்தானம்.
பேசுவதற்கும் எழுதுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. எழுதும்போது யோசித்து சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம். திருப்தியாக இல்லையென்றால் மறுபடியும் திருத்தி எழுத வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விவாதத்தில் பேசும்போது அப்படி அல்ல. ஒரே ஒரு வாய்ப்பு தான். அதில் சரியாக சொல்ல வந்த வாதத்தை தெளிவாக கூற வேண்டும். ஒரு வார்த்தை மாறிவிட்டாலும் முடிந்தது. இந்த வகுப்பு விவாதத்தில் பேசுகிறேன் என்று உங்களிடம் வாக்களித்து இருந்தேன். ஆனால் அதை என்னால் காப்பாற்ற முடியவில்லை. மிகுந்த மன உறுத்தலாக இருக்கிறது. வகுப்பு முடிவதற்கு முன் இரண்டரை நாளில் எல்லாம் வந்து விடாது. வந்தால் நீங்கள் இங்கு வந்து வகுப்பெடுக்கலாம். முயற்சி செய்ய செய்ய வரும் என்று நீங்கள் கூறியது சற்றே மனதை ஆறுதல் படுத்துகிறது.
ஓர் உரையாடலின் போது பாணாற்றுப்படை என்பது வள்ளலிடம் சென்று பரிசு பெறுவதற்கான வழியை ஒரு பாணன் மற்றொரு பாணனுக்கு கூறுவது போல் உள்ள சிற்றிலக்கிய வகை என்று கூறினீர்கள். ஒவ்வொரு முறை வெள்ளிமலை வகுப்பிலிருந்து திரும்பும் போதும், நான் உணர்வது அதையே. எங்கு, எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு வரைபடம் கிடைத்துவிட்டது. மேற்கொண்டு பயணத்தை தொடர்வது, என் முயற்சியில் மட்டுமே இருக்கிறது. மிகவும் நன்றி, ஜெ.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.











