ஆலயங்களை அறிதல் அவசியமா?

நம்மைச் சுற்றி ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களை நாம் அறிந்திருக்கிறோமா? உலகில் எங்காவது ஒரு சமூகம் தன்னுடைய பண்பாட்டின் மையமாகத் திகழும் இடத்தை அறியாமல் இருக்குமா? தன் வரலாற்றின் சின்னத்தை அறியாமல் வாழுமா? நாம் அப்படி வாழ்கிறோம் இல்லையா?

ஆலயங்களை மூன்று வகைகளில் அறியவேண்டும். ஒன்று, வரலாற்று ரீதியாக. ஆலயம் என்பது நம் கடந்தகால வரலாற்றின் சின்னம். அதை முறையாக அறிவது நம்மை நாம் அறிவது. அத்துடன் அந்த ஆலயத்தைக் கட்டிய நம் முன்னோருக்கு நாம் ஆற்றும் நன்றிக்கடனும்கூட.

இரண்டாவதாக ஆலயத்தின் சிற்பக்கலையை நாம் அறியவேண்டும். ஓர் ஆலயம் என்பது தன்னளவில் ஒரு பெரிய சிற்பம். வாஸ்துபுருஷன் என அதைச் சொல்வார்கள். அதன் அமைப்பே ஓர் உடலைப் போன்றது. நாம் ஆலயத்தின் சிற்ப அமைப்பை அறிந்தவர்தான் உண்மையில் அந்த ஆலயத்தை அறிந்துகொள்கிறார்.  ஓர் ஆலயத்தை அறிந்தால்தான் அங்கே எப்படி நடந்துகொள்வது என நமக்குத் தெரியும். ஆலயவழிபாட்டின் அடிப்படைகளில் ஒன்று ஆலயத்தை அறிந்துகொள்ளுதல்.

அத்துடன் அங்குள்ள ஏராளமான சிற்பங்களையும் நாம் அறியவேண்டும். அச்சிற்பங்கள் ஒரு மொழியின் சொற்கள் போல. அந்த சொற்கள் வழியாக நமக்கு நம் முன்னோர் மெய்ஞானத்தை புகட்டுகிறார்கள். அதை நாம் அறியவேண்டும் என்றால் சிற்பங்களைப் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.

மூன்றாவதாக, நாம் ஆலயத்தின் சடங்குகளை, நெறிமுறைகளை அறியவேண்டும். ஓர் ஆலயம் என்பது அங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கும் வழிபாடுகளால் ஆனது. அந்த வழிபாடுகள் எல்லாமே குறியீட்டுச்செயல்பாடுகள். தெய்வத்திற்குச் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் மறைபொருள் உண்டு. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒரு பெரிய உட்பொருள் உண்டு. அதை அறிந்தாகவேண்டும்.

ஆனால் பக்தர்கள் சிலர் சொல்வதுண்டு, ஆலயத்தைப் பற்றி அறிந்துகொள்வது பக்திக்கு எதிரானதாக ஆகிவிடும் என்று. ஆலயத்தை கலைப்படைப்பாகப் பார்க்கும் மனநிலை வந்துவிடும். அது கள்ளமற்ற பக்தியை இல்லாமலாக்கிவிடும் என்பார்கள் அவர்கள்.

அது பிழையான மனநிலை. இத்தனைபெரிய ஆலயத்தை உருவாக்கிய முன்னோர் அவற்றை நாம் அறியவேகூடாது என்று நினைத்தார்கள் என்பதைப்போல அறிவின்மை வேறுண்டா என்ன? நம் முன்னோர் நம்மிடம் பேசும் மொழிதான் சிற்பங்கள். அவர்களின் பேச்சை நாம் காதுமூடி கண்மூடி அறியாமலிருப்பதுதான் அவர்களுக்குச் செய்யும் மரியாதையா?

உண்மைதான், ஆலயக்கலையை பக்தி இல்லாமல் ரசிக்க முடியும். பல நிபுணர்கள் பக்தி இல்லாதவர்கள். அவர்களுக்கு தெய்வச்சிலைகள் வெறும் கலைப்பொருட்களே. அதில் பிழையும் இல்லை. அது ஒரு கோணம்.

ஆனால் பக்தர்கள் ஆலயங்களையும், ஆலயச்சிற்பங்களையும் தெரிந்துகொள்வது இன்னொரு கோணத்தில். அது தெய்வங்களை தெரிந்துகொள்வதுதான். ஏனென்றால் ஓர் ஆலயச்சிற்பம் ஒரு தெய்வ உருவகத்தின் கண்கூடான வடிவம். அந்த தெய்வ உருவகத்தை அறிய அந்த சிலையை பற்றி அறிந்துகொண்டே ஆகவேண்டும்.

சிலைகள் எப்படி உருவாகின்றன? ஒரு ஞானி ஒரு தெய்வ அனுபவத்தை ஓர் அகநிகழ்வாக அடைகிறார். ஒரு கனவு போல என உதாரணம் சொல்லலாம். அந்த அகநிகழ்வை அவர் பிறருக்குச் சொல்ல ஒரு உருவகத்தை பயன்படுத்துகிறார் (எல்லா உணர்ச்சிகளையும், எல்லா அகநிலைகளையும் நாம் அனைவருமே உருவகங்கள் வழியாகவே பிறருக்குச் சொல்கிறோம். வேறு வழியே இல்லை) அதுதான் தெய்வ உருவம் என்பது.

தெய்வ உருவகம் ஒரு வர்ணனையாக இருக்கலாம், ஒரு ஒப்பீடாக இருக்கலாம். ஒரு துதியாக இருக்கலாம். ஒரு சொல்லாகக்கூட இருக்கலாம். எல்லாமே உருவகங்கள்தான். சொல்லில் எழுவது வாக் விக்ரகம். கல்லில் எழுவது சிலா விக்ரகம். அவ்வளவுதான் வேறுபாடு. விக்ரகம் இல்லாமல் தெய்வத்தை மட்டுமல்ல, அகவுணர்வுகள் எதையுமே சொல்லமுடியாது.

விக்ரகம் என்பது ஒரு மந்திரம். ஒரு சொல். அதை நாம் புரிந்துகொள்ளவேண்டாமா என்ன? அப்படிப் புரிந்துகொள்ளத்தான் நாம் கலைப்பூர்வமாக அவற்றைப்பற்றிக் கற்கவேண்டும் என்கிறோம்.

உண்மையில் நாமனைவருக்குமே நம் பிறப்புச்சூழலிலேயே அந்தக் கல்வி பெரும்பாலும் வந்துவிடுகிறது. நம் பெற்றோரே சொல்லித்தருவார்கள். ஆகவே கொஞ்சம்கூட கலைக்கல்வி இல்லாத நிலையில் எவருமே இல்லை. அதை முழுமையாக, முறையாக ஆக்கிக்கொள்ளவே நமக்கு பயிற்சி தேவையாகிறது.

ஓரளவு தெரிந்தால்கூட, தீவிரமான பக்தியுடன் வழிபாடுகளைச் செய்துவிடலாம். ஆனால் முறையாகத் தெரியாதபோது மிகப்பெரிய பிழைகள் நிகழ்ந்துவிட வாய்ப்புண்டு. அப்பிழையால் நமக்கு பாவமும் சேரக்கூடும்.

உதாரணமாக ஒரு நிகழ்வு. ஒரு நண்பர் வடக்கே சென்றார். அங்கே கிருஷ்ணனும் பலராமனும் இருக்கும் ஆலயத்திற்குச் சென்றவர் அங்கிருந்த வெண்ணிற பலராமனை கிருஷ்ணனாக நினைத்துக்கொண்டார். கரியநிறமான கிருஷ்ணனை ஏதோ தீயதெய்வம் என நினைத்துவிட்டார். அதை என்னிடம் சொன்னார். அதுதான் கிருஷ்ணன் சிலை என்று நான் சொன்னதும் திகைத்துவிட்டார்.

நம் பக்தர்கள் அப்படி அறியாமையால் தெய்வங்களை அவமதிப்பதுண்டு. சிலசமயம் பிழையாக எண்ணிக்கொண்டமையால் பிழையான உணர்வுகளை அடைந்துவிடுவதுமுண்டு. எதையெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவதற்காவது பக்தர்கள் ஆலயக்கலையை முறையாக அறியவேண்டும்.

ஞானம் பக்திக்கு எதிரானது அல்ல. தெய்வத்தை அறிய முயன்றால் தெய்வத்தின் மேல் நம்பிக்கை போய்விடும் என ஒருவர் சொன்னால் அது என்னவகையான நம்பிக்கை? அறிவு நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும் அல்லவா?

ஒரு சைவர் திருமுறைகளை ஓதினால் பக்தி குன்றிவிடுமா என்ன? பக்தி பெருகும் அல்லவா? அப்படியென்றால் அவர் ஆலயத்தைப் பற்றி அறிந்துகொண்டால் மட்டும் எப்படி பக்தி குறையும்? சைவத்திருமுறைகளை இலக்கிய நயம் கருதி மட்டுமே கற்பவர்கள் உண்டு. ஆனால் ஒரு பக்தர் அவற்றை பக்தி இலக்கியமாகத்தானே கற்பார்?

நம் ஆலயங்கள் கலைச்செல்வங்கள். கூடவே நம் முன்னோர் அறிந்த மெய்மையின் கண்கூடான வடிவங்கள். கலையென அணுகுவோர் அவர்களின் கோணத்தில் அணுகலாம். மெய்மையை நோக்கிச் செல்வோர் தங்கள் நோக்கில் கற்கலாம். எல்லா பாதையும் நன்றே

முந்தைய கட்டுரைஆயுர்வேதம் நிகழ்த்திய ரசவாதம்
அடுத்த கட்டுரைமதம் பற்றி…