பொழுதுபோக்கு என்பதுதான் இந்த நூற்றாண்டின் ஒட்டுமொத்தமான பெரிய வணிகம் என்று அண்மையில் ஒரு செய்தி படித்தேன். உலக அளவில் உணவு உற்பத்தி, ஆடை உற்பத்தியை விட அதுவே மிகப்பெரிய தொழில். நம்புவது எளிது. ஏனென்றால் நாம் சராசரியாக உணவு, உடைக்குச் செலவழிப்பதை விட அதிகமாக இன்றைக்கு கேளிக்கைகளுக்குச் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்தச் சூழல் மிக மிக ஆபத்தானது. உலக வரலாற்றிலும் சரி, மானுடப்பரிணாம வரலாற்றிலும் சரி இப்படி ஒரு சூழல் இதற்கு முன் வந்திருக்கவில்லை. உலகின் மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான நேரத்தை எந்த அர்த்தமும் இல்லாமல் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
பொழுதுபோக்கு என்றால் என்ன? எதையாவது ஒன்றை நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் எந்த கல்வியும் அதில் நிகழவில்லை. எந்த உற்பத்தியும் நிகழவில்லை. அப்படியென்றால் அது பொழுதுபோக்கு. அதுல் ஒரு காலகட்டத்தின் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய ஒரு அழிவு.
ஜெ