எல்லாவற்றைப்பற்றியும் ஏதாவது சொல்கிறேனா?

அன்புள்ள ஜெயமோகன்,

இணையத்தில் உள்ள யூடியூபர்கள் உலகத்திலுள்ள எல்லா விஷயங்களுக்கும் கருத்துசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் தினமும் ஏதாவது பதிவு போடவேண்டும் என்றால் கண்டெண்ட் பஞ்சம் வந்துவிடும். ஆகவே எல்லாவற்றுக்கும் கருத்து சொல்கிறார்கள். நீங்களும் அப்படி கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் எவற்றுக்கும் ஆதாரங்கள், ஆய்வுமுடிவுகள் இல்லாமல் மனதில் பட்டதையே சொல்கிறீர்கள். அறிவியல்சார்ந்து இந்தவகையான கருத்துக்களுக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?

சந்திரசேகர் மாணிக்கம்

அன்புள்ள சந்திரசேகர்,

நான் இதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளேன். உங்களுடைய கேள்வியே யூடியூபில் மேய்பவர்களிடமிருக்கும் மேலோட்டமான பொதுமைப்படுத்தல் சார்ந்தது. அதற்கு அறிவியல் என்றெல்லாம் அபத்தமாக பெயர் சூட்டிக்கொள்கிறீர்கள். நீங்கள் அறிவியல் மனம் கொண்டவர் என்றால் முதலில் நீங்கள் சொல்வனவற்றுக்கான தரவுகளை தேடுவீர்கள். என் காணொளிகள் எதிலும் ‘எல்லா தலைப்புகளும்’ பேசப்படுவதில்லை. நான் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே ஒரு தளம் மட்டுமே பேசப்படுகிறது என்பதை கொஞ்சம் பார்த்தாலே கவனிக்கமுடியும்.

உங்களுக்கு அறிவியல் தெரியாது என்பதற்கான சான்று, அறிவியல் அல்லாதது என்ன என்று தெரியவில்லை என்பதே. தத்துவம், இலக்கியம், சமூகச்செய்திகள் போன்றவை அறிவியலின் எல்லைக்குள் வருவதில்லை. அவற்றுக்கு அறிவியல்முறைமைகள் ஏதுமில்லை. அவற்றையே நான் முன்வைக்கிறேன். அவற்றிலுள்ள கருத்துக்கள் எல்லாமே அந்த தளங்களில் செயல்படுபவர்களால் முன்வைக்கப்படுபவை. ஓர் இலக்கியக் கருத்தைச் சொல்பவர் அதற்கு அறிவியல் ஆதாரம் காட்டி நிரூபிக்க முடியாது. ஒரு குடிமகனாக நின்று தன் வாழ்க்கையனுபவங்கள் சார்ந்து ஓர் உளப்பதிவைச் சொல்பவனிடம் அதற்கு அறிவியலாதாரம் கேட்கமுடியாது. அந்த கருத்துச்சொல்பவனின் அகவயக் கருத்துத்தான் அது. அகவயக் கருத்துக்கு, தனிநபர் அபிப்பிராயத்துக்கு அறிவியலில் இடமில்லை. ஆனால் அறிவியலல்லாத சிந்தனை, இலக்கியக் களங்கள் முழுக்கவே தனிநபரைச் சார்ந்தவை, அகவயமானவை.

கடைசியாக அறிவியல் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதி அதன் முறைமையை கொஞ்சமேனும் அடைந்து கடைப்பிடிப்பவர்களுக்கே உள்ளது. முதலில் கூகிளில் நான் இதே கேள்விக்கு முன்னர் பதிலேதேனும் சொல்லியிருப்பேனா என்று ஆராய்ந்த பிறகே அறிவியல் பயிற்சி கொண்டவர் இக்கேள்வியை எழுப்புவார்.

ஜெ

 

முந்தைய கட்டுரைவேதகாலப் பெண்கள்
அடுத்த கட்டுரைநாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்