அன்புள்ள ஜெ
இன்றைக்கு மதத்தைப் பற்றி ஏராளமான கேள்விகள் நம் சூழலில் உள்ளன. அதையெல்லாம் நாமும் ஏதோ அரசியல்வாதிகளின் வாயிலிருந்து கேட்டு அப்படியே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மதநம்பிக்கை உடையவர்கள் கூட மதத்தை இழித்தும் பழித்தும் பொதுவெளியில் பேசினால்தான் மதிப்பு என்னும் நிலைமை இன்றைக்கு இருக்கிறது. உங்கள் காணொளிகளில் மதத்தின் மீதான நவீனப்பார்வை வெளிப்படுகிறது. மிகத்தீவிரமாகவும் சுருக்கமாகவும் தர்க்கபூர்வமாகவும் மதத்தின் இடம் பற்றிய நோக்கை வெளிப்படுத்துகிறீர்கள். மதம் இன்று ஏன் தேவை, அதில் எவையெல்லாம் தேவை என்று விளக்கும்போது எவையெல்லாம் தேவையில்லை என்று சொல்லவும் உங்களால் முடிகிறது.
மதம் மூடநம்பிக்கையை வளர்க்கிறது என்கிறார்கள். ஆனால் எந்த மதத்தை விடவும் அரசியல்வாதிகள் உருவாக்கும் மூர்க்கமான கருத்தியல் நம்பிக்கையே தீவிரமானது. மனிதர்களை கண்மூடித்தனமான வெறியை நோக்கிக் கொண்டுசெல்வது. மதம் உலகில் அழிவை உருவாக்கியது என்பார்கள். ஆனால் இரண்டு உலகப்போர்களும் மதத்தால் நடைபெறவில்லை, அரசியலால்தான் நடைபெற்றன. ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட், முஸோலினி, மாவோ போன்ற மாபெரும் கொலைகாரர்கள் எல்லாம் மதநம்பிக்கையை மறுத்தவர்கள்தான்.
மதம் தொன்மையானது. தொன்மையான ஒன்றை அதன் சாராம்சத்தை உள்வாங்கி நவீனப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அதைத்தான் ஞானிகளெல்லாம் செய்தார்கள்.
சரவணன் குமரவேல்