தியானமுகாம் – கண்டடைதல், நலமடைதல்.

அன்புள்ள திரு. ஜெ அவர்களுக்கு வணக்கம்.

நானும் என் மனைவியும் ஆகஸ்ட் 1 – 3 , 2025, நடந்த, இந்த வகுப்பில் கலந்து கொண்டோம். என் மனைவி இதற்கு முன்னால் எந்த தியான வகுப்பையும் சந்தித்தது இல்லை. மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு இருந்த சிறு சிறு உபாதைகள் விட்டுப் போயின. மூச்சுக் காற்று சீராக ஓடுவதை பார்க்க முடிந்தது. அரை மனதுடன் வந்தவர், முழு நிறைவுடன் திரும்பி , சென்னை வந்த பிறகு, இந்த பயிற்சியை விடாது செய்ய , இருவரும், ஒருத்தருக்கு ஒருத்தர் உற்சாகப்படுத்தி செய்து வருகிறோம்.

ஆங்கிலத்தில் ” The Power of your Subconscious Mind ” என்று, ஜோசப் மர்பி எழுதிய புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். மனம் எவ்வளவு பெரிய பொக்கிஷம், அதை எப்படி கையாள வேண்டும் எல்லாம் எனக்கு அது உணர்த்தியது. ஆனால் எனக்கு, அந்த புத்தகம் கொஞ்சம் அந்நியமாகவே இருந்தது.

இந்த வகுப்பில், திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள், தனது சாந்தமான, கணீர் குரலுடன், எங்களுக்கு நாள் முழுக்க உத்தரவுகளை கொடுத்து, த்யானம், பிராணயாமா கற்றுக் கொடுத்து, ஒவ்வொருவரும் சரியாக செய்கிறார்களா என்று சரி பார்த்துக் கொண்டே இருந்தார். ஒருபுறம் எனக்கு, கண்ணதாசன் அவர்களின்  “ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். யாரோ வருவார் யாரோ இருப்பார், வருவதும் போவதும் தெரியாது.”  என்ற பாடல் மனத் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.  

எண்ணங்களின் ஆற்றல், வலிமை, தாக்கம் ஆகியவற்றிற்கு இவ்வளவு அர்த்தங்கள் இருப்பதை இங்கு வந்து தான் உணர்ந்தேன். முதல் நாள் எங்கள் எல்லோருக்கும், கழட்டிய எல்லோரது காலணிகளை கூட ஒழுங்காக வைக்காமல் இருப்பதை உணர்த்தி, எந்தச் செயல் செய்தாலும் மனம் ஒன்று பட்டு செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார். அடுத்த நாள், அலங்கோலமாக இருந்த காலணிகள் , அலங்காரமாக அடுக்கி வைத்திருப்பதை பார்க்க முடிந்தது.

புருவத்தில் இருந்து கால் நுனி வரை எங்களை பரவசப்படுத்தி, எங்கள் மனத் திரையை விலக்கி, மனதிற்கு பல அறைகள் இருப்பதை விளக்கி வைத்தார். நாம் எல்லோரும் பல பயிற்சிகள், பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவசியம் பயில வேண்டியது இந்த உளக்குவிப்பு பயிற்சி.

இந்த மேடையை வழங்கிய திரு.ஜெ அவர்களுக்கும், திரு.செந்தில்பிரபு அவர்களுக்கும் , இதை ஓருங்கிணைக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், வந்திருந்த நண்பர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,

ப ராமநாதன் 

முந்தைய கட்டுரைஇசை, வகுப்புகள்- கடிதம்