
அன்புள்ள ஜெயமோகன்
உங்களுடைய நியூயார்க் பெருவிழா பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு தனிமனிதராக நீங்க எடுக்கும் இந்த முயற்சியில் எத்தனை உலக ஆளுமைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரும் திகைப்பை உருவாக்குகிறது.
ஆக்கபூர்வமாகக் கனவு கண்டால் மட்டும் போதும், அந்த உண்மையாக இருந்தால் மட்டும் போதும், அது எந்த வகையிலாவது நடைபெற்றுவிடும் என்ற ஒரு ஊக்க உணர்வை இந்த செயல்பாடுகள் உருவாக்குகின்றன. இத்தனை பேருடன் உங்களுடைய கனவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவர்கள் உங்களுடன் முழுமையாக உடன் இருக்கிறார்கள் என்பது மிக ஆச்சரியமான ஒன்று.
இங்கு குறைவாகத்தான் இத்தகைய பாஸிட்டிவ் செயல்பாடுகள் நிகழ்கின்றன. சுயலாபம சார்ந்து பெரும் கூட்டம் கூடுவது எங்கும் உள்ளது. அதுதான் அரசியல் கட்சிகளிலும் வணிகக்கூட்டங்களிலும் காண்பபடுகிறது ஏனெனில் அங்கே சேர்ந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அதற்கான லாபம் உள்ளது. அந்த லாபக கணக்கை அவர்களுக்கு காட்டினால் அவர்களை உள்ளே வைத்துக் கொள்ள முடியும். ஆனால் எந்த லாபமும் இல்லாத ஒரு கனவுச் செயல்பாட்டுக்கு இத்தனை பேரை ஒருங்கிணைப்பது என்பது ஒரு எளிய விஷயம் அல்ல. என் கண்கள் முன் இத்தகைய செயல்பாடு ஒன்றை முதல் முறையாக நான் பார்க்கிறேன்.
எதிர்ப்புகளைப் பற்றி நீங்கள் பேசி இருந்தீர்கள் அந்த எதிர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன என்றால் இதை தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஏதேனும் அரசியல் கணக்கு, அதிகார கணக்கு இருக்கும் என்பதனால்தான். இச்செயல்பாட்டுக்கு மறுபக்கம் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் அப்படித்தான் நினைப்பார்க்ள். அப்படித்தான் அவர்கள இணைந்து கொள்ள முடியும். அப்படித்தான் பிறரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள் என்பவர் நம்புகிறார்கள். ஏதோ ஒரு வகையில் தங்களுடைய அதிகாரத்திற்கு வெளியே ஒரு குழு சேர்கிறது என்பதுதான் அவர்களுக்கு தோன்றுகிறது. அந்த கசப்புதான் நீங்கள் ர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த வகையான செயல்பாடுகள் எப்போதும் ஒரு வகையான ஊக்கத்துடன் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் மனிதனின் இலட்சிய வாதம் என்பது ஒருபோதும் முனை மழுங்காது. எப்போதும் அது இருந்து கொண்டு தான் இருக்கும்
இந்த செய்தியை இன்று காலை உங்கள் தளம் வழியாக நானே உணர்ந்து கொண்ட போது மிகுந்த நம்பிக்கை என் செயல்பாடுகளில் எனக்கு ஒரு தீவிரமும் உருவாகியது நன்றி.
சாமுவேல் அற்புதம்











