காவியத்துளி

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த காணொளியில் நீங்கள் பேசும் கருத்துக்களை கவனித்துக் கொண்டு இருந்தேன். ஒரு மிடறு காவியம் என்ற அந்த வரி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது .என் தாத்தா ஒவ்வொரு நாளும் இராமாயணம் படித்துக் கொண்டிருந்தார் .ஒரே புத்தகத்தை அவர் வாழ்க்கை முழுக்க படித்ததை மிகப் பெரிய அளவிலே நாங்கள் எல்லாம் நிலைமையிலே கேலி செய்திருக்கிறோம். ஆனால் அவ்வாறு ஒரு காவியத்திலே வாழ்நாள் முழுக்க மூழ்கி செலவழிப்பது என்பது எவ்வளவு பெரிய வரம் என்று இப்போது தெரிகிறது. ஒன்றைப் படிப்பது என்பது மட்டுமல்ல, ஒன்றில் மனதை குவிப்பது கூட சாத்தியம் இல்லாத ஒரு காலம் வந்து விட்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் அனைவருமே வெவ்வேறு விஷயங்களில் ஒவ்வொரு நாளும் துளித்துளியாக சிதறிக் கொண்டிருக்கிறோம். இரவிலே நம்மை ஒன்று திரட்டுவதே நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இரவிலே மனது அடங்கி தூங்கிய இளமைக்கால நினைவே இப்போது இல்லை. மனம் அலைந்து அலைந்து களைத்துத் தூங்குவதுதான் இப்போது வழக்கமாக இருக்கிறது. இன்று நான் ஏங்குவது எல்லாமே ஒரு காவியத்திலே வாழ்க்கையே வாழ்ந்து விட வேண்டும் என்பதுதான்.

ஒரு காவியம் அளிக்கும் முழுமையான தித்திப்பிலேயே வாழ்வது என்பது ஒரு பெரிய கொடுப்பினை. அதற்கு தமிழில் நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு. மூல மொழியிலேயே காவியங்களை வாசிக்கும் வாய்ப்பு உள்ள ஒரே மொழி தமிழ்என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். ஆனால் நாம் இன்று நடைமுறையில் உள்ள விஷயங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். பைசா பிரயோஜனம் உண்டா என்பது கேள்வி போல அபத்தமான ஒரு கேள்வி இல்லை. ஆனால் எந்த விஷயத்திலும் அதுதான் நம்மை சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.

 

ஆ.மாரிராஜ்

முந்தைய கட்டுரைபெருஞ்செயலெனும் ஊக்கம்