கசப்புகளின் உலகம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய அண்மை காணொளி ஒன்றிலே நம்மை சூழ்ந்திருக்கும் கசப்புகளை எதிர்கொள்வது எப்படி என்று எழுதியிருந்தீர்கள் முகநூல் மட்டும் அல்ல whatsapp குழுமங்களில் கூட இதே வகையான ஒரு நெருக்கடிதான் என்னை போன்றவர்களுக்கு உள்ளது. நான் மூன்று whatsapp குழுமங்களிலே இருந்தேன். ஒன்று குடும்பம் ,இன்னொன்று அலுவலக குழுமம், மூன்று பழைய பள்ளி தோழர்களின் குழுமம். மூன்றிலுமே ஒரு சிலர் வேடிக்கைகளை பகிர்ந்து கொள்வார்கள். நானும் வேடிக்கையாக மட்டுமே அங்கே பேச வேண்டும் என்று எண்ணத்துடன் இருந்தேன்.

ஆனால் சிலர் அங்கும் தங்களுடைய அரசியல் காழ்ப்புகளையும் வெறியையும் மட்டும் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு எதுவுமே அவர்களால் பேச முடியாது .அரசியலுக்கு ஏற்ப ஒவ்வொன்றையும் திரிப்பதுதான் அவர்களின் வாழ்க்கையாகவே இருந்தது. அரசியல்கூட மதம், ஜாதி சார்ந்தது மட்டும்தான். காரணம் குடும்ப whatsapp குழுமத்தில் கூட அதே வகையான கசப்புகளை தான் அவர்கள் நிரப்பி கொண்டு இருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் காலையில் அவற்றை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் மூன்று குழுமங்களில் இருந்து வெளியே வந்தேன். அதற்கு உடல்நிலை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டேன். முதல் ஒரு சில நாட்கள் எனக்கு எதையோ இழந்துவிட்டது போல இருந்தது .உலகமே என்னை கைவிட்டது போல இருந்தது .அதன் பிறகு இரண்டு ஆலயக் குழுமங்களில் சேர்ந்து ஆலயங்களை பற்றி செய்திகளை மட்டுமே பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த உலகுக்குள் சென்று விட்டேன். அதை பார்ப்பது மட்டுமல்லாமல் ஆலயக்குறிப்புகளை எழுதவும் ஆரம்பித்தேன். நான் ஆலயம் பற்றிய தகவல்களை போட வேண்டும் என்று முடிவு எடுத்தது எனக்கு பெரிய அளவிலே உதவியது.

இந்த கசப்பை விட்டு வெளியே வராமல் இன்று ஒருவனுக்கு வாழ்க்கையே இல்லை என்பது தான் உண்மை உண்மை.

க.ஜீவரத்தினம்

முந்தைய கட்டுரைமகிழ்ச்சியைக் கண்டடைதல்- கடிதம்.