ஓவியம் என்னும் தொடக்கம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

ஓவியக்கலை குறித்த உங்களுடைய கானொலிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் உற்சாகமாக தங்களை மறந்து வரைந்து கொண்டிருப்பதை பார்க்கையில் ஒரு ஏக்க் மனநிலை உருவாகியது. முதலில் இது ஒரு தொழில் ரீதியான பயிற்சி  என்றும் நமக்குத் தேவையில்லை என்றும் நினைத்தேன். அல்லது நமக்கு அது சரிவராது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் வந்திருக்கலாமோ என்ற எண்ணத்தை இந்த காட்சி உருவாக்கியது.

ஏனெனில் இனறைய் அரசியல் சூழலில் சமூக வலைத்தளங்கள் நம்மை தொடர்ந்து கொந்தளிப்பு நிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றன. சிந்திக்கவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. நாம் பதற்றம் அடைந்துகொண்டே இருக்கிறோம். அந்த பதற்றத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை. நம்மை பதற்ற நிலையில் வைத்திருப்பது வழியாக அவர்கள் காசு சம்பாதிக்கிறார்கள். நமது உடல்நிலை தான் அதற்கு விலையாக நம்மால் அளிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் அமைதி நிம்மதி கவனக குவிப்பு இதெல்லாம் மிக அரிதாக உள்ளது. ஓவியம் வரைவது என்பது ஒரு கலை மட்டுமல்ல, ஒரு பெரிய தியான நிலை என்ற எண்ணத்தை அந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்தபோது அறிந்து கொண்டேன். இன்றைய சூழலில் மகத்தான கலைகளை தொடர்ந்து ஏதேனும் ஒன்றை பயில வேண்டும் என்றும், அதிலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்றும் என்னுடைய உள்ளம் ஏங்குகிறது.

நானே வரையலாம்தான். ஆனால் அதற்கு ஒரு நல்ல சூழல் தேவையாகிறது. நண்பர்கள் தேவை. ஆசிரியர்களும் தேவை. இந்த அன்றாடச்சூழலை விட்டு விலகி வெளியே சென்று அதற்கென்றே அமர்ந்து அதை வரைந்து படிக்கவேண்டும். ஒரு நல்ல தொடக்கம் இருந்தால் போதும் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற எண்ணம் உருவாகியது.

கைகளால் வரையமுடியாமல் போனால்கூட இணையத்தைப் பயன்படுத்தி கணினிப்படங்களையும் டிசைன்களையும் என்னால் உருவாக்கியிருக்க முடியும். இன்றைய சூழலில் எவராலும் நல்ல படங்களை உருவாக்கமுடியும். ஒரிஜினல் கலையை உருவாக்குவது பெரிய சவால். அது என் இடம் அல்ல. நான் மனநிறைவுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மட்டும்தான் வரைய விரும்புகிறேன்.

நான் வர முடியாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன் தொடர்ந்து இந்த வகையான வகுப்புகளை அடுத்தடுத்த விடுமுறை காலங்களில் ஆவது வைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்

ரங்கராஜன் பார்த்தசாரதி.

முந்தைய கட்டுரைகலையில் வாழ்தல்.