இசை அறிமுகம் எப்படி நிகழ்கிறது?

அன்புள்ள ஜெ,

நான் என்  நண்பர்கள் பலரும் ஆழமாக இசை கேட்பதை பார்த்திருக்கிறேன். நானும் இசை கேட்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு இசைத்தட்டுகளை வாங்கி கேட்க ஆரம்பித்தேன். ஆனால் சில பகுதிகளில் மட்டும்தான் என்னால் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான நேரங்களில் ஒரு மூடு உருவாகிறதே ஒழிய இசை அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை.

இசையில் எனக்கு தேவையானது உணர்வு. அந்த உணர்வுகள் கர்நாடக இசையிலே இல்லை என்று எண்ணம் ஏற்பட்டது. அத்துடன் கர்நாடக இசையில் அந்த உணர்வுகளை சிதைக்கும் விதமாக நீட்டியும் குறுக்கியும் திரும்பத் திரும்பவும் பாடுகிறார்கள. ஒரே வார்த்தை திரும்ப திரும்ப பலமுறை பாடப்படும் போது எனக்கு ஒரு பொறுமை இழப்பதுதான் ஏற்படுகிறது. அதேபோல வார்த்தைகள் இல்லாமல் வரும் ஓசைகளை வைத்து  இசைப் பகுதிகளை நான் கேட்க முடியவில்லை.

நீங்கள் நடத்தும் இசை அறிமுக வகுப்புகள் வழியாக இந்த இசையை கேட்பதற்கான ஒரு மனநிலையை உருவாக்க முடியுமா? இந்த கேள்விகளுக்கான விளக்கங்கள் அங்கு கிடைக்குமா?

அருவி பாலகிருஷ்ணன்

அன்புள்ள பாலகிருஷ்ணன்,

எந்த இசையை கேட்பதற்கும் அடிப்படையான தேவை என்பது அந்த இசையுடன் நமக்கு ஒரு தொடர்பு ஏற்படுவதுதான். செவி பழகுவது என்பது அதைத்தான். இந்த அறிமுகத்தையே வகுப்பில் செய்வோம். அத்துடன் சில அடிப்படை புரிதல்களையும் அளிக்கிறோம்.

நாம் திரைப்படப் பாடல்களை ரசிப்பது பெரும்பாலும் அந்த பாடலின் வரிகளுடன் இணைந்துள்ள காட்சிகள் மற்றும் கதைச் சந்தர்ப்பங்கள் வழியாகத்தான். அந்த உணர்ச்சிகளே நாம் அடைவன. மரபிசையில் அந்த கதைச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால் ஓர் அறிமுக வகுப்பு அந்தச் சந்தர்ப்பத்தை ஒட்டுமொத்தமாக அளிக்கிறது. அதாவது மரபிசைப் பாடல்களை மரபிசைக்கு உரிய ஒரு பக்தி சார்ந்த அல்லது உணர்வு சார்ந்த இசைச் சந்தர்ப்பமாக எப்படி ஆக்கிக் கொள்வது என்று பயிற்றுவிக்கப்படுகிறது.

இரண்டாவதாக கர்நாடக ச்ங்கீதத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் விதம் சற்று வேறுபட்டது. திரையிசையில் ஒரு கொப்பளிப்பாக ஒரு குமிழியாக அந்த உணர்ச்சி வெளிப்பட்டு முடிந்துவிடுகிறது. மரபிசையில் அதை நீண்ட நேரம் கொண்டு செல்கிறார்கள். நீ தயாராதா என்ற ஒரு பாடல் ஓர் உணர்ச்சியை முன்வைக்கிறது.’நீ கருணை காட்ட மாட்டாயா?’ ஆனால் அந்த உணர்ச்சியை ஒரு மணிநேரம் தக்க வைப்பதற்காகத்தான் அந்த கீர்த்தனை திரும்பத் திரும்ப அதை பாடி அதை நிறுவுகிறது. அந்த வரிகள் வழியாக பாடப்பட்ட அதே உணர்ச்சியை வார்த்தைகள் இல்லாமல் வெறும் சத்தங்கள் வழியாகவும் நீடிக்க வைக்கிறது.

அதற்கு நீங்கள் மனம் பழகிவிட்டால் அதைக்  கேட்க முடியும். அதற்கு தேவையானது முறையான அறிமுகமும் ஆரம்பத்தில் பொறுமையாக சற்று கேட்கும் பழக்கமும் மட்டும்தான். அந்த பழக்கம் வந்துவிட்டால் இசைக்குள செல்ல முடியும். இசைக்குள் செல்வது என்பது தெய்வங்கள் வாழும் ஒரு புதிய உலகத்துக்குள் செல்வது போல.

ஜெ

முந்தைய கட்டுரைபெருதிட்டங்கள் உதவுமா?