அன்புநிறை ஜெ,
குரு தில்லை செந்தில் பிரபு அவர்களின் உளக்குவிப்பு தியான வகுப்புகளில் கடந்த வருடம் முதல்நிலை, இரண்டாம் நிலை வகுப்புகளில் கலந்து கொண்டேன். அதிலிருந்து நான் கற்றதும், பெற்றதும், அடைந்ததுமான தியான அனுபவங்களைப் பகிர்கிறேன்.
கற்றதும் பெற்றதும்
சரியான துாக்கமின்மை, ஓயாத எண்ண அலைகள், பசியின்மை, இரவு நேரத் தலைவலி, மூட்டுவலி, நடப்பதில் தடுமாற்றம் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன். வெள்ளிமலையில் குரு தில்லை அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் பிரணாயாம, தியானப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் (தொடர்ச்சியாக செய்திருந்தால் மட்டும்) பலன் அடைந்திருந்தார்கள் என்பதை இரண்டாம்நிலை வகுப்புக்கு வந்தபோது கூறினார்கள். நேரடி வகுப்பில் தியானத்தின்போது கைகூடிய stillness வீட்டுக்கு வந்தபோது இல்லை. இனிமேல் துாக்கப் பிரச்சனை, அலையடிக்கும் எண்ணம், தலைவலி இதெல்லாம் போயே போச்சு என்று நினைத்தால் அதுதான் இல்லை. வெள்ளிமலையில் அமைதியான இயற்கைச் சூழலில் நிகழ்ந்த ஒன்று வீட்டிற்கு வந்ததும் இல்லாமலானது. வீட்டின் அச்சாணி பெண்கள்தான் தன் உடல், மனநிலை தொடர்பான விழிப்புணர்வும், அக்கறையும் கொண்டவர்கள் விடாப்பிடியாக இதைத் தொடர்ந்து பயின்று முன்னேறுகிறார்கள். ‘நான் நன்றாக இருந்தால்தான் உங்களையெல்லாம் பார்த்துக் கொள்ளமுடியும்’ என்பதே ஒரு பெண் சொல்ல வருகிற செய்தி. விடாமுயற்சி, சரியாகத் திட்டமிடல், குடும்பத்தினர்க்குப் புரியவைத்தல் மூலமாகவே அறுபது வயதைக் கடந்த பெண்கள், இதைப் பயின்று தன்நலம் மட்டுமன்றி பிறர்நலமும் காக்க முடியும். குடும்பம் ஒருபக்கம் என்றால் மனம் அதைவிட தந்திரசாலியாக இருக்கிறது. ஏதேனும் ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு, சாக்குப்போக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளச் சொல்கிறது. இத்தடைகளையெல்லாம் தாண்டி உளக்குவிப்பு, தியானத்தில் அமர்ந்தாலொழிய உளநலமும், மனநலமும் தேறுவது சிரமம். இதனைப் புறந்தள்ளி பிரணாயாமத்திலும், தியானத்திலும் அமர்ந்தாலும் உடலும், மனமும் அமர மறுக்கிறது. இடைவிடாத இரண்டு மாத பயிற்சிக்குப் பின் தியானம் அதுவாகவே ‘நிகழ்ந்தது’. ஆமாம்! குரு சொல்வதுபோல் தியானம் என்பது ‘செய்வது’ அல்ல. ‘நிகழ்தல்’ என்பதும், ஆற்றல் மையங்கள் சமநிலையில் இல்லாதபோது உடல்ரீதியான மனரீதியான சிக்கல்கள் ஏற்படுவதையும் அதைச் சமன் செய்யவே பிரணாயாம, தியானப் பயிற்சிகள் என்பதும் புரிந்தது. இரண்டாம்நிலை வகுப்பில் அடிப்படை நிலையிலிருந்து மேம்பட்ட பிராணாயாமங்களையும், ஆழ்நிலைத் தியானங்களையும் கற்றோம். மூச்சு என்ற ஒருபுள்ளியில் இருந்து துவங்குகின்ற இவைகள் உடல் நிலையிலும், உணர்வு நிலையிலும், சக்தி நிலையிலும் வழங்குகின்ற ஆற்றல் அளப்பரியது. உடற்பயிற்சி, யோகப்பயிற்சி, தியானப்பயிற்சி என்ற அதன் படிநிலைகள் எவ்வாறு அடுத்தடுத்தக் கட்டத்திற்கு நம்மை உயர்த்துகின்றன என்பதை இதனைப் பயில்பவர்களால் உணரமுடியும்.
அடைந்ததும்
ஒரு வருடத்திற்கும் மேலான பயிற்சியில் நான் அடைந்ததென்ன? என்று எண்ணிப்பார்க்கிறேன். பசியின்மைக்கான தீர்வு கிடைத்தது. நடக்கும்போது இருந்த தடுமாற்றம் நீங்கியது. கவனக்குவிப்பின் காரணமாக நீண்ட நேரம் வாசிக்கவும், எழுதவும் மேம்பட்டிருக்கிறது. எச்செய்தியை எவர் கூறக்கேட்டாலும் எதை அனுமதிப்பது, எதை விட்டுவிடுவது என்று விலகி நின்று பார்க்கும் தெளிவும், துாக்கத்தின் தரமும் வாய்த்திருக்கிறது. சில நாட்களில் துாக்கம் தடைப்பட்டாலும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் தன்மை வந்துவிட்டது. காலை, மாலை இருவேளைகளிலும் தியானம் செய்வதால் மனம் எண்ண அலைகளின்றி இருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?
வெள்ளிமலையில் நடக்கும் வகுப்புகள் மட்டுமன்றி இரண்டு மாதங்களுக்கொருமுறை குரு தில்லை செந்தில் பிரபு நடத்தும் சத்சங்கத்தில் கலந்துரையாடல்கள், கேள்வி பதில்கள், அதில் கற்றுத்தரப்படும் புதிய தியான உத்திகளும் எங்களுக்குப் புத்துணர்வு தந்து, ஆத்ம சக்தியை நிறைத்துக் கொள்வதற்கானவை. கடந்த பிப்ரவரி மாத பிரணவ நாத தியானமும், இந்த மாத அகத்துாய்மை தியானமும் உயிரெனும் பூ மலர்வதற்கானவை. பிரணவ நாத தியானத்தில் அ, உ, ம் (ஓம்) ஒலிகள் மூலாதாரத்திலிருந்து மேலெழும்பி, அடிவயிறு, தொப்புள், நெஞ்சுப்பகுதி, நெற்றிப்பொட்டு, உச்சந்தலையில் எதிரொலிப்பதையும், தசைகளில், நாண்களில் மோதும் ஒலி உடலையும் மனதையும் அதிர்வுகளால் இணைப்பதையும் உணரமுடிந்தது. தியானம் முடிந்தவுடன் , வெளியே கேட்கும் ஒலியைவிட உள்ளே இருக்கும் நிசப்தமும், எண்ணங்களற்ற மனமும், அமைதியும், நிதானமான மூச்சும் அகத்தால் உணரக்கூடியனவாக இருந்தது. ‘எண்ணங்களற்ற மனநிலையே தியானம்’ என்பதும் புரிந்தது. மற்றவர் மீதான கோபம், காம, குரோத எண்ணங்களை நீக்குவதும், மற்றவர்களை மன்னிப்பதும், அன்பு, தயை, கருணை போன்ற நேர்மறை எண்ணங்களால் நிரப்புவதும் அகத்துாய்மை தியானத்தின் பலனாக நாம் அடைவன. ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டால் வாழ்வு வளமாகும்.
குருவுக்கும், தங்களுக்கும் அன்பும் நன்றியும்!
இராச. மணிமேகலை.










