அன்புள்ள ஜெ,
வேதாந்தத்தின் நோக்கம் சமூக சீர்திருத்தமும் அல்லது அரசியல் சீர்திருத்தமும் ஒன்று அல்ல. அது உலகியல் சார்ந்தது அல்ல. அது ஒரு மெய்யான ஆன்மீக விடுதலையை தான் முன்வைக்கிறது. ஒட்டுமொத்தமாக பிரபஞ்சத்தையும் மனித வாழ்க்கையும் புரிந்து கொள்வதற்கான கருவிகளை தான் அளிக்கிறது. அது ஒரு அருவமான தத்துவமும் கூட. இந்திய ஆன்மீகத்தில் அது ஒரு பெரும் புரட்சியை உருவாக்கியது. உலக அளவில்கூட இன்றும் முதன்மையான மெய்யியல் தரிசனமாக உள்ளது.
நீங்கள் பல உரைகளில் சொல்லியிருப்பது போல இந்து மதம் என்று அமைப்பே வேதாந்தத்தால் உருவாக்கப்பட்டதுதான். ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிக் கொண்டிருந்த வெவ்வேறு மதக் குழுக்களை அல்லது மத நம்பிக்கைகளை எல்லாம் பிரம்மம் என்ற ஒற்றைக் கருத்தை கொண்டு இணைத்து அதன் வழிவாக ஒரு மதக் கட்டமைப்பை உருவாக்கி இந்தியாவில் மதப்போர் என்பதை கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கியது வேதாந்தமே. சைவ வைணவ போர்கள் கூட சங்கரர் வழியாகவேதாந்தத்தின் மறுவருகையுடன் இல்லாமல் ஆனதைத்தான் வரலாற்றில் நான் பார்க்கிறோம். அவ்வாறு பக்திகாலகட்ட இந்தியா உருவாகிகி வந்தது. நாம் இந்தியா என்பதே அதைத்தான். வேதாந்தமே இந்தியாவின் ஆதார தத்துவம். சிமெண்ட் ஆஃப் இந்தியன் ஸ்டிரக்சர் என்று சித்பவானந்த சாமி சொல்வார்.
நவ இந்தியாவில் வேதாந்தம் ச்மூகப் புரட்சிக்கும் அரசியல் புரட்சிக்கும் வழியமைத்தது. அரசியல் மாற்றமும் சமூக சீர்திருத்தமும் எல்லாம் அதன் நோக்கங்கள் அல்ல என்பதனால் அது அதை அவற்றை எல்லாம் தன் வெற்றி என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. வேதாந்த் அறிஞர்கள் எவருமே அவற்றையெல்லாம் வேதாந்த சிந்தனையின் சாதனையை என்று சொல்லவில்லை. அவர்கள் சொல்லிக் கொள்ளாத காரணத்தாலேயே அச்சாதனைகள் வரலாற்றில் எழுதப்படவில்லை.அவற்றை நீங்கள் வலுவாக நினைவுறுத்துவது என்பது மிக முக்கியமான ஒரு பங்களிப்பு.
சிவராமகிருஷ்ணன் மாயூரம்











