எழுத்தாளர்களின் அரசியல்.

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளை பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தபோது உங்களுடைய அரசியலின்மை பற்றிய காணொளிகளை பார்க்க நேர்ந்தது .அந்த காணொளிகளில் தொடர்ச்சியாக நீங்கள் ஒரு எழுத்தாளர் சமகால அரசியலில் இருந்து ஏன் விலகி நின்று இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்ர்கள். ஏன் சொல்கிறீர்கள் என்று என்று அப்போது புரியவில்லை, இப்போது புரிந்தது.

எழுத்தாளர்கள் தங்களுடைய உலகத்தில் இருந்து கொண்டு மக்களின் உணர்வுகளை உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாது. இப்போது விஜய் அடைந்திருக்கும் வெற்றியை எந்த எழுத்தாளரும் முன்னரே ஊகிக்கவில்லை. ஏனெனில் எழுத்தாளர்கள் சாமானிய மக்களுடன் கலந்து பழகுபவர்கள் அல்ல. அவர்கள் வாசிப்பாவர்கள், சிந்திப்பவர்கள். ஆகவே அவர்கள் ஒருபோதும் சாமானியர்கள் அல்ல. சாமானியர்களில் ஒருவர்தான் சாமானியர்களை புரிந்துகொள்ளமுடியும்.

தாங்கள் சாமானிய மக்களுக்காக பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் எவருமே சாமானிய மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் பிரதிபலிப்பவர்கள் அல்ல. அவர்கள் அத்தனை பேருமே அரசியல்வாதிகள்தான். அத்தனை பேருமே தனிச் சிந்தனை கொண்டவர்கள். தனிச்சிந்தனை கொண்டவர்கள் அந்தச் சிந்தனை வழியாகத்தான் சமூகத்தைப் பார்ப்பார்கள். அதை வைத்து சமூகத்தை புரிந்து கொள்ளமுயல்வார்கள். அவர்களால் சாமானிய மனதை புரிந்துகொள்ள முடியாது.

அல்லது வெவ்வேறு அரசியல் கோட்பாடுகளைக் கொண்டும் சமூகவியல் கோட்பாடுகளைக் கொண்டும் விரிவான அளவில் ஆய்வுகளை செய்து சென்சஸ் எடுத்து மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் அறிவியல் ரீதியான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அது எழுத்தாளர்களின் வேலை அல்ல. அவர்கள் அதைச் செய்வதும் இல்லை. அரசியல்வாதிகளும் அதை செய்வதில்லை. அது அறிவியல்வாதிகள் செய்ய வேண்டியது. அதை அவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் .பிறர் செய்வது சரியால்ல.

ஆகவே எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைக் களத்திற்குள் நின்று செயல்படுவதே நல்லது. சொந்தச் சிந்தனையை அவர்கள் சமூகத்திற்கு முன்னால் வைக்க வேண்டும். மக்களில் ஒரு சாரார் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக மக்களின் சிந்தனைகளில் அந்த எழுத்துக்களால் நாள் ஒரு பாதிப்பு உருவாக வாய்ப்புண்டு. அவ்வாறுதான் மனித உள்ளத்தில் சிந்தனை மாறி வந்திருக்கிறது. அதுதான் எழுத்தின் வேலை.

மாறாக நேரடியாகப் பிரச்சாரம் செய்து மக்களை திருப்புவதெல்லாம் தங்களால் இயலும் என்று எழுத்தாளர் நினைத்தால் என்றால் இது போன்ற அடிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே தான் இருக்கும். பல சமயம் அது அவர்களை மக்கள் விரோதிகளாக ஆகவும் வழியமைக்கிறது. இந்த சூழலில் எழுத்தாளர்கள் தங்களுடைய இடத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

தங்க. சிவராமன்

முந்தைய கட்டுரைஆனந்த விகடனில் என் தொடர்