அன்புள்ள ஜெயமோகன்,
செயலாற்றுவதற்கான மூன்று பொன் விதிகளை பற்றிய உங்களுடைய காணொளியை விரும்பி பார்த்தேன். என் மாணவர்களுக்கு அந்த காணொளியை நான் பரிந்துரை செய்தேன். வெவ்வேறு வகையான தன்முன்னேற்ற நூல்கள் மற்றும் செயலாற்றுவதற்கான வழிகாட்டு நூல்கள் இன்றைக்கு எழுதப்படுகின்றன என்றாலும் உண்மையிலேயே செயலாற்றிக் கொண்டிருக்கும் ஒருவர், செயல் வழியாக சாதித்த ஒருவர் சொல்லும் வரிகளுக்கு தான் உண்மையான மதிப்பு இருக்கிறது என்பது என்னுடைய எண்ணம். ஆகவே உங்களுடைய கருத்துக்களை நான் என்னுடைய மாணவர்களுக்கு மிக முக்கியமாக பரிந்துரைக்கிறேன். உங்களுடைய செயல் தளத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட இந்த வழிகள் இளைய தலைமுறைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இன்று செயல்பாட்டுதளத்தில் மிகப்பெரிய தடையாக இருப்பது பல கூறுகள். அவற்றில் மூன்றை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
ஒன்று இன்று நம்மை சூழ்ந்திருக்கும் கேளிக்கை. இந்த கேளிக்கைப் பெருக்கம் என்பது இளைஞர்களை சும்மா இருக்க தூண்டுகிறது. இணையக் கேளிக்கை வெறும் பார்வையாளராக இருக்கும்படி செய்கிறது. புத்தகம் வாசிக்கும் காலகட்டத்தில் புத்தகம் வாசிப்பவர் தானும் எதையோ செய்கிறார். கற்பனை செய்கிறார், சிந்தனைசெய்து புரிந்து கொள்கிறார். ஆனால் காணொளிகளைப் பார்ப்பவர்கள் எதுவுமே செய்வதில்லை. எதுவுமே உள்வாங்குவதும் இல்லை. வெறுமை நேரத்தை மட்டும் போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது இணையதளத்திலே கிடைக்கும் பல வகையான இணையவிளயாட்டுக்கள், சூதாட்டச் செயலிக்ள் மற்றும் கடன் செயலிகள். பங்குச்சந்தை என்பதும் ஒரு வகையான சூதாட்டமாகவே இன்றைக்கு மாறி இருக்கிறது. சூதாட்டம் என்பது செயலுக்கு இணையான ஒரு மூளை விறுவிறுப்பை அளிக்கும். ஆனால் அதில் திறன் மேம்படுவதே இல்லை. மாறாக் மூளை மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .எதையுமே கற்றுக் கொள்வதில்லை .மிகப்பெரிய சூதாடிகள் கூட மிகப் பெரிய இழப்பை சந்திக்கிறார்கள். ஏன் எனில் அதில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அது முழுக்க முழுக்க தற்செயலை நம்பி இருக்கிறது. இதுவும் ஒரு வகையான செயலின்மையே
மூன்றாவது, செயலுக்கு எதிராக இருப்பது கனவு. மிகப்பெரிய கனவுகளை இன்றைய தலைமுறைக்கு ஊடகம் அளிக்கிறது. ஒவ்வொருவரும் சுந்தர் பிச்சையோ சிவகார்த்திகேயனோ ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய எல்லை என்ன என்பதை தெரிந்து கொள்வதில்லை. செய்து பார்ப்பதுமில்லை. அவ்வளவு பெரிய கனவு இருந்தால் மட்டும்தான் செயல்பட முடியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய கனவு இருக்கலாம். ஆனால் அதற்கு தொடக்கம் என்பது நாம் செய்ய வேண்டிய மிக சாதாரண தொடக்க வேலையாக தான் இருக்க முடியும். ஒரு சரவணா பவன் அண்ணாச்சியாக ஆக விரும்புகிறவர் ஒரு ஹோட்டலில் சர்வராகத்தான் தொடங்க முடியும். இந்த உண்மை அவளுக்கு தெரிவதில்லை. ஆகவே கனவுகளை வைத்துக்கொண்டு அதிலே திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்றில் இருந்து இவர்கள் என்றைக்கு விடுதலை ஆகிறார்களோ அன்றுதான் இவர்கள் உண்மையாக செயல்பட முடியும்.
கருணா ராஜமாணிக்கம்










