அன்புள்ள ஜெயமோகன்,
சமூக வலைத்தளங்களில் வெறுப்பு அல்லது காழ்ப்பு தொடர்ச்சியாக கொட்டப்படுகிறது. காழ்ப்பின் ஒரு பகுதியாக தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது தகவல்கள் எதுவுமே தகவல் ஆக நமக்கு வந்து சேர்வதில்லை. முன்பு நாளிதழ்கள் இருந்தபோது எத்தனைதான் செய்திகளில் உள்நோக்கம் இருந்தாலும் கூட அவை செய்திகளாக இருந்தன. இன்று செய்திகளை இல்லை. ஏதேனும் ஒரு வகையில் ஒரு தரப்புக்காக திரிக்கப்பட்ட செய்திகள்தான் வந்து சேர்கின்றன. ஆகவேதான் வெறுப்பு அல்லது காழ்ப்பு இவ்வளவு பெருகுகிறது
அண்மையிலே இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது ஓரு முக்கியமான மக்கள் தொடர்பு மேலாளர் ஒன்று சொன்னார், இன்று அரசியல் கட்சிகள் மிகப்பெரிய சமூக வலைத்தள ஊடக அமைப்புகளை வைத்திருக்கின்றன .திமுக PEN என்கிற அமைப்பை வைத்திருக்கிறது. ROOT என்னும் அமைப்பை தவெக வைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 20க்கும் மேற்பட்ட ஊடக நிர்வாக அமைப்புகளை வைத்திருக்கிறது. ஒவ்வொன்றிலும் சராசரியாக 500 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இவர் அனைவருக்கும் மாதச் சம்பளமாக ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய்கள் அளிக்கப்படுகின்றன. இவர்கள் பொய்யாக ஆயிரக்கணக்கான இணைய கணக்குகளை தொடங்குகிறார்கள். அதன் வழியாக ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.
இந்த தரப்புகளால் சில முகங்கள் அறிவு ஜீவிகள் என முன்வைக்கப்படுகின்றன. அவர்களை இவர்கள் ஊதி பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் ஊதியம் இருக்கிறது. ஒட்டுமொத்தமான இந்த மாபெரும் ஊடக சக்தியால் சிந்தனையாளர்கள் அல்லது சாமானியர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவுமே முன் வைக்கப்பட முடியாமல் ஆகிறது. நீங்கள் இந்த ராட்சதர்களில் ஏதேனும் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அந்த தரப்பின் குரலாக மட்டும் தான் ஒலிக்க முடியும். இல்லை என்றால் இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து உங்களை ஒழித்து கட்டி விடுவார்கள்.
இந்த ஊடக ராட்சதர்கள் சென்ற காலங்களில் கருத்துச் சுதந்திரம், சிந்தனை ஆகியவற்றுக்கு உருவாக்கிய அழிவு என்பது மிக மிகப் பிரமாண்டமானது.இவர்கள் கட்டமைக்கும் பொய்களை மிகச்சிறிய அளவுக்கு கேள்வி கேட்டால் கூட நீங்கள் கடித்து குதறப்படுவீர்கள். இந்தியா ஓளிமிக்க முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா சொல்லும் போது நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்க கூடாது. கேட்டால் நீங்கள் தேசத்துரோகி. தமிழகம் பெரியாராலும் மு கருணாநிதி அவர்களால் மட்டும்தான் கட்டமைக்கப்பட்டது என்றும், காமராஜரிலிருந்து அத்தனை நிர்வாகிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றுமே செய்யவில்லை என்றும் திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப்படும்போது அதில் ஒரு சிறு சந்தேகத்தை கிளப்பினால் கூட நீங்கள் சங்கி என்று முத்திரை குத்தப்பட்டு தார் அடிக்கப்படுவீர்கள்.
இந்த கடுமையான வெறுப்பு மோதல்களின் நடுவே எந்த விஷயமும் பேசப்பட முடியாமல் ஆகிவிட்டது. சமூக வலைத்தளங்களை சீரழித்தது இவர்கள்தான். நமக்கு உரையாடுவதற்கும் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் இருந்த மிகப்பெரிய வாய்ப்புகளை அழித்ததில் இந்த சமூக வலைதள ராட்சசர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு .ஆனால் இந்தியச் சூழலில் இதைப் பற்றி நாம் இனி பேசிப் பயனில்லை என்று தான் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம் இந்த ராட்சசர்களின் பிரம்மாண்டமான அமைப்புக்கு அடியில் சாமானியர்கள் தங்களுடைய சிந்தனைகளை வேறொரு வகையில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இத்தனை ராட்சச பலம் ண்டவர்களும் அடி வாங்கும் போது தான் உண்மை உறங்குவதில்லை என்ற சிறு நம்பிக்கையும் நாம் அடைகிறோம்.
ய.எதிராஜன்











