அன்பின் ஜெ,
வழக்கமானதொரு அதிகாலை நடையில், நமது கல்வியும் – வாசிப்பும் என்ற தலைப்பிலான தங்களின் காணொளியை கேட்டிருந்தேன். தொடர்ச்சியாக மரீஃபா-9 ஆம் பகுதியையும் வாசித்திருந்தேன். கடந்த ஓரிரு மாதங்களாக, அலுவல் சார்ந்த பிரச்சினையொன்றில் உழன்றிருந்தேன். அந்த பிரச்சினை, தனிப்பட்ட முறையில் பொருளாதார சூழலையும் பாதிக்கக்கூடியதென்பதால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருந்தேன்.
மரீஃபா 9 ஆம் பகுதியில் வந்த ஒரு சிறு வாக்கியம், அந்தப் பிரச்சினையின் மொத்தப் பரிமாணத்தையும் மாற்றி யோசிக்க செய்தது. அதன் பின் அது சார்ந்த மேல் வாசிப்பைத் தேடித் தேடி வாசித்தேன். சில மணி நேரங்களில், அந்த பிரச்சினை சார்ந்த முடிவை எடுக்க முடியக்கூடிய தன்னம்பிக்கையை அளித்தது. அந்த வரிகள்,’சஹாபா ஆகிய ஸஹ்ல் இப்னு ஸஃத் அவரது ஹதீஸில் ‘பொறுமை அல்லாவிடமிருந்தும் அவசரம் சாத்தானிடமிருந்தும் வருகிறது’ என்று ஒரு நபி வாக்கியத்தைச் சொல்கிறார்.’ ஹதீஸ் எண்:2594 இல்.'”மென்மையும் நிதானமும் எந்தச் செயலில் இருந்தாலும் அதை அழகுபடுத்தும்; அவை இல்லாத எந்தச் செயலும் குறையுடையதாகிவிடும்.” என்னும் வரிகளில் கொண்டு சேர்த்தது.
இதை அடிப்படையாக வைத்து, நான் உருவாக்கிய தகவல்கள் அடங்கிய கோப்பு, அந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தது.
சூரியனைக் கண்ட பனி போல், எப்படி விலகியதென்று, விலகி நின்று சற்று நேரம் யோசித்தேன். ஒரு நாள் வாசிப்பில் வருவதல்ல. தொடர்ச்சியானதொன்று.
அடிப்படையில், என் தந்தை எங்களுக்களித்த சுதந்திரம். சோவியத் நாடு முதற்கொண்டு, அவர் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த புத்தகங்கள். வாரப்பத்திரிகைகள், காமிக்ஸ்கள், நாவல்கள். இதையெல்லாம் ஏன் படிக்கிற என, எங்களை விரட்டாத தன்மை. மேற்கொண்டு நாங்கள் வாங்கும் புத்தகங்களுக்கு தடை போடாத மனம். அந்த நேரத்தில், விலை மிகுந்த பட்டாம்பூச்சி புத்த்தகதை வாங்கி வந்த போது, சற்று கண்ணை மேல் நோக்கிய பார்வையாக பார்த்து, விலகிய தருணங்கள் அளித்த அனுபவம், மேலும் மேலும் புத்தகங்கள் வாங்கும் தைரியத்தை அளித்தது.
இது போன்ற பல தருணங்கள் உண்டு. ஏன் நான் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியை, புன்னகையுடன் கடந்து விடுவேன், வழக்கமாக. மீண்டும் கேட்பவர்களுக்கு அளிப்பதற்கு சில சிறு புத்தகங்கள் வரிசை வைத்துள்ளேன், வாங்கி படியுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்து விடுவேன். அவர்களுடன் விவாதிப்பது எந்த வகையிலும் பயனளித்ததில்லை.
என்றென்றும் அன்புடன்,
சிவக்குமரன் ராமலிங்கம்.












