அன்புள்ள ஜெயமோகன்,
நான் உங்கள் படைப்புகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவந். நீங்கள் எழுதிய இந்து மெய்ஞானம் சம்பந்தமான நூல்களை எட்டு ஆண்டுகளுக்கு மேலாக படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றைச் சார்ந்த எனது புரிதல்களை விவாதிப்பதற்கு எனக்கு நண்பர்களே அமையவில்லை. ஏனென்றால் நம் சூழலில் பக்திக்குதான் நண்பர்கள் அமைவார்கள். யோகப் பயிற்சிகளுக்குக்கூட ஓரளவுக்கு நண்பர்கள் அமைவார்கள்.மெய்ஞான நூல்களை பயில்வதற்கு நண்பர்களை அமைவதில்லை.
நண்பர்களை தேடி இங்கு ஆலயங்களில் நடக்கும் திருப்புகழ் திருமந்திரம் போன்றவற்றைப் பற்றிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன். ஆனால் அங்கெல்லாம் தத்துவத்துக்கு பதிலாக பக்தியையே பேசிக் கொண்டிருந்தார்கள்.ஏனென்றால் அங்கு வந்தவர்கள் அனைவருமே 50 60 தாண்டியவர்கள்.அவர்களுக்கு புதிய சிந்தனைகளை புரிந்து கொள்ளவோ அல்லது ஏதேனும் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ளவோ பயிற்சி கிடையாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பக்தி தான். பக்தியை வலியுறுத்து நூலாகவே அவர்கள் திருமந்திரத்தை கூட படித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்த்த போது ஒரு பெரிய சோர்வு ஏற்பட்டது.
உங்கள் தத்துவ வகுப்புகளுக்கு வருவது என்பது அத்தகைய நண்பர்களை சந்திப்பதற்கு உதவும் என்று தோன்றுகிறது. என்னுடைய வாசிப்பை மேலும் கூர்தீட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அடுத்த தத்துவ முதல் வகுப்பு எப்போது நடக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
எஸ்.ஞானசம்பந்தன்

அன்புள்ள ஞான சம்பந்தம்,
இன்றைய சூழலில் நாம் கற்கவும் கற்பிக்கவும் புரிந்து கொள்ளவும் நமக்கு ஒரு நல்ல சூழல் சுற்றம் ஆகியவை தேவைப்படுகின்றன. அதற்காகத்தான் முழுமைஅறிவு வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சேர்ந்து கற்பதும் சரி கற்றவற்றை விவாதிப்பதும் ச்ரி தத்துவத்திற்கு மிக அவசியமானவை.
ஆனால் அதற்கு தத்துவ வகுப்புக்குத்தான் வரவேண்டும் என்ற தேவையில்லை. ஆலயக்கலை வகுப்பு, யோக வகுப்பு, மேலைத்தத்துவ வகுப்பு அனைத்துமே உங்களுக்கு உரிய சுற்றத்தை அளிப்பவைதான்.
ஜெ












