இந்திய ஞானம், இன்றையசூழல்.

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் இந்து ஞான மரபு பற்றிய புத்தகங்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் எனக்கு தொடர்ச்சியான பல ஐயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஐயங்களை தனித்தனியாக குறிப்பேடுகளில் குறித்து வைத்துக்கொண்டு தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன்.

அப்போதுதான் ஒன்று தெரிகிறது இந்தியாவில் பொதுச்சூழல் என்னவாக இருந்தாலும் தமிழகத்தில் இந்து மெய்ஞானம் பற்றிய அறிதல் மிக மிக குறைவாகவே உள்ளது. இங்கே இரண்டு தரப்பினர்தான் உள்ளனர் அரசியல்வாதிகள் இந்து மெய்ஞானத்தை இந்து மத நம்பிக்கையுடன் இணைத்துக் கொண்டு, அல்லது இந்து அமைப்புகளுடன் இணைத்துக் கொண்டு அவற்றை மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள் அவற்றை எதிர்ப்பதனால் அவற்றை அறிந்திருப்பதில்லை. அந்த வெறுப்பே அறிய முடியாமல் ஆக்கிவிடுகிறது .இன்னொரு பக்கம் வெறும் பக்தர்கள் பரிகாரம் ஜோதிடம் என்ற அளவிலே மதத்தை அணுகி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து ஞானம் அளவு பற்றி எதுவுமே தெரியாது.

இன்னொரு பக்கம் ஆங்காங்கே உரைகளில் இருந்தோ சில வகுப்புகளில் இருந்தோ மெல்லிய தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்த ஞானிகள் போல பேசும் நபர்கள் நிறைந்திருக்கிறார்கள். எதைக் கேட்டாலும் அவர்கள் மிக மழுங்கலான ஒரு பொன்மொழி போன்ற வரியைத்தான் சொல்வார்கள். குறிப்பாக எந்த தகவலையும் அவர்களால் சொல்ல முடியாது. எந்த விளக்கத்தை அளிக்கவும் முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் அவர்கள் பொத்தாம் பொதுவான ஒரு சொற்றொடரை சொல்லவும் முடியும்.

இந்தச் சூழலில் இந்தப் புத்தகங்களை மேற்கொண்டு எப்படி அணுகுவது என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. இவற்றை பயில்வதற்கு என்ன வழி?

சரவணக்குமார்

அன்புள்ள சரவணக்குமார்.

இந்த நூல்கள் அறிமுக நூல்கள் மட்டுமே. இவற்றிலிருந்து மூல நூல்களுக்கு செல்வதும் அதை ஆழ்ந்து படிக்க முயல்வதும்தான் சரியான வழியாக இருக்க முடியும்.

 உங்களுக்கு எழும் தனிப்பட்ட கேள்விகள் எல்லாமே உங்கள் அகத்தேடலுடன் இனைந்தவை. அந்த கேள்விகளுக்கு அடிப்படை விடைகளை நீங்கள் தான் தனிப்பட்ட முறையில் தேடி கண்டடைய வேண்டும்.

நீங்கள் எங்களுடைய தத்துவ வகுப்புகளுக்கு வருவீர்கள் என்றால் ஒருவேளை மிக எளிதாக இந்த கேள்விகளுக்கான பதில்களை அடைந்து மேலும் முன்னேற முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைநூல்களும் வகுப்புகளும்
அடுத்த கட்டுரைநவீன மருத்துவ அறிமுகம்