தியானம்,யோகம்- முதல்வகுப்புக்கே மீண்டும் வரலாமா?

அன்புள்ள ஜெ,

நான் தியானம்- யோகம் ஆகிய பயிற்சிகளின் முதல் வகுப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். மீண்டும் கலந்துகொள்ளலாமா? அல்லது இரண்டாம் நிலையில் மட்டும்தான் கலந்துகொள்ளலாமா?

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்,

முதல் வகுப்பிலேயே மீண்டும் கலந்துகொள்ளலாம். எத்தனைமுறை வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்வது பயனுள்ளது, அவசியமானது.

பொதுவாக தியானம் -யோகம் போன்ற பயிற்சிகளைச் செய்பவர்கள் அதன் பயனை நன்குணர்ந்தாலும் கூட அதை தொடர்ச்சியாச்க செய்வதில்லை. ஆகவே முழுமையான பயனை அடைவதில்லை. சில உடல்நிலைக் கோளாறுகளும் உளச்சிக்கல்களும் அவர்களை இப்பயிற்சி நோக்கிக் கொண்டுவரும். அவை தீரும் வரைக்கும் செய்வார்கள்.  அதன் பிறகு விட்டு விடுவார்கள் .

இதை நானே எண்ண வைத்து சொல்கிறேன். எனக்கு கழுத்து இறுக்கம் ஒரு பிரச்சினையாக இருந்தபோது சௌந்தர் அவர்களிடம் சில யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டேன். மூன்று மாதத்தில் முற்றாக சரியாகி இன்று வரைக்கும் திரும்ப வரவில்லை. ஆகவே நான் திரும்ப யோகப் பயிற்சிகளை செய்யவுமில்லை.  அதுபோல நீலம், காவியம் ஆகியவற்றைத் தீவிரமாக எழுதும்போது மட்டும் தூக்கம் பிரச்சினையாக இருந்தது. அப்போது மட்டும்தான் தியானப் பயிற்சிகளை செய்தேன்.

நம் அன்றாட வாழ்க்கையில் இப்பயிற்சி ஒரு பகுதியாக ஆக வேண்டும். நாளிதழ் வாசிப்பது, காபி சாப்பிடுவதுபோல. இல்லாவிட்டால் நம்மால் தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. நம் அன்றாட வாழ்க்கை என்பது குடும்பம் தொழில் என பலவற்றால்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் அதன்பொருட்டு தொடர்ச்சியாக முயலவேண்டும்.

தியானம் -யோகம் ஆகியவற்றை தொடர்ந்து செய்வதற்கான முக்கியமான வழிகள் சில உண்டு.

  • அந்த ஆசிரியருடனும் அந்த அமைப்புடனும் தொடர்புடன் இருப்பது.
  • அப்பயிற்சிகளைச் செய்யும் பிறருடன் தொடர்புடன் இருப்பது
  • அப்பயிற்சிகளாஇச் செய்வதற்கான இடம் ஒன்று இருந்தால் அங்கே செல்வதை வழக்கமாக்கிக் கொள்வது.
  • ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அப்பயிற்சிகளை கூட்டாகச் செய்யும் நிகழ்வுகளில் பங்கெடுப்பது.

கூட்டான பயிற்சி செய்யப்படும் நிகழ்வுகள் நம் ஊக்கத்தை மீட்டு அளிக்கின்றன. நிறுத்தியிருந்தால் நாம் மீண்டும் தொடங்குவோம். செய்வனவற்றில் பிழை ஏதேனுமிருந்தால் திருத்திக்கொள்வோம். அனைத்துக்கும் மேலாக அவை நிகழும் சூழலும் ஆசிரியரின் அருகமைவும் நம்மை நாமே தூண்டிக்கொள்ள உதவுபவை.

இப்பயிற்சிகளுக்கு இடம் மிக முக்கியமானது. நம் இல்லங்களில் நாம் அன்றாட உலகியல் வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறோம். ஆகவே அந்த இடங்களில் அந்த நினைவலைகள் எஞ்சுகின்றன. அவை நம் ஆழுள்ளத்தை ஆள்கின்றன. அங்குள்ள பிறர் இருக்கும் மனநிலையும் நம்மை பாதிக்கிறது.

யோகம் தியானம் போன்ற பயிற்சிகளுக்கு அதற்கான இடம், இயற்கைச்சூழல் மிக முக்கியமானது. அவை நம்மை இயல்பாக கவனக்குவிப்பு, ஆன்மிகமான ஒருங்கமைவு ஆகியவற்றை நோக்கிச் செலுத்துகின்றன. அத்தகைய இடங்களில் அவற்றைப் பயில்வதென்பது பலமடங்கு தீவிரமானது. அது ஒருவகை ஆன்மக் குளியல்.

ஜெ

முந்தைய கட்டுரைசமூகவலைத்தளங்களில் உண்மை.