அன்புள்ள ஜெயமோகன்,
ஓஷோ பற்றிய உங்களுடைய நீண்ட உரையை புத்தக வடிவில் இப்போதுதான் படித்து முடித்தேன். அந்த உரையை முன்னரே நான் கேட்டிருந்தேன். அதன் ஒலிப்பதிவு சற்று குறைவாக இருந்ததால் தொடர்ச்சியாக இருந்தால் கேட்க முடியவில்லை. மட்டுமல்ல இத்தகைய ஒரு உரையை நீண்ட நேரம் கேட்கும் போது நடுவே நமது மனம் அங்கு அலை பாய்வதனால் ஒட்டுமொத்தமான ஒரு சித்திரம் கிடைப்பதும் இல்லை.
இந்த புத்தகத்தை வாங்கி படித்த பிறகு மீண்டும் ஒருமுறை அந்த உரையை கேட்டேன். ஏனென்றால் இந்த உரையை உங்கள் குரலில் ஒரு முறை கேட்க விரும்பினேன். அதில் உள்ள உணர்ச்சிகள் எனக்கு தேவைப்பட்டன. அதில் நீங்கள் மிக இலகுவான ஒரு மனநிலையில் நின்று இந்த உரையை ஆற்றுவதை உணர முடிந்தது. மிகத் தீவிரமான தத்துவ தரிசனத்தை அத்தனை எளிதான் முறையில் நீங்கள் ஆற்றுவதற்கான மனநிலையையே ஓஷோ தான் அளித்திருக்கிறார் என்பதுதான் ஓசோவின் முக்கியமான பங்களிப்பு என்று எனக்கு தோன்றுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஓஷோ தொட்டதுமே அது எடை இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஓஷோவை இந்திய மரபில் எங்கு வைத்து புரிந்து கொள்வது என்பது உங்களுடைய முக்கியமான கோணமாக இருக்கிறது. உலக சிந்தனை மரபில் ஓஷோ எந்த இடத்தில் வருகிறார் என்பதையும் சொல்கிறீர்கள். ஓஷோவின் தனித்தன்மை, ஓசோவை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் போது வரும் சிக்கல்கள். ஓஷோவே தன்னளவிலேயே கொண்டிருக்கும் போதாமைகள் ஆகியவற்றை துணிச்சலாக திறந்த மனதுடன் விவாதிக்கும் உரை இது.
ஓஷோ என்ன சொல்கிறார் என்று நீங்கள் சொல்லவில்லை. ஓஷோவை நோக்கி செல்வதற்கான வழி என்ன, ஓசோவை கடந்து செல்வதற்கான வழி என்னவாக இருக்க முடியும் என்பதை பற்றி பேசுகிறீர்கள். உங்கள் வேதாந்த நிலைப்பாட்டிற்கு இறுதியில் வந்து சேரும்போது கூட நீங்கள் ஓஷோவை முக்கியமான ஒரு தரப்பாகக் கருதுகிறீர்கள் என்பது தெரிகிறது.
ஓஷோவுக்கான பயிற்சி வகுப்புகள் பல இந்தியா முழுக்க நடந்து வருகின்றந.அவற்றில் சென்று பார்த்திருக்கிறேன். அவை பெரும்பாலும் மிக எளிமையான கேளிக்கை நிகழ்வுகளாகவோ அல்லது விளையாட்டுகளாகவோ தான் இருக்க்கின்றன. ஓஷோ முன்வைத்த தீவிரமான தத்துவ புரிதல் ங்கு நடப்பதில்லை.
கிருஷ்ணன் பற்றி வேதாந்தத்தை பற்றி அத்தனை விரிவாக ஓஷோ பேசியிருக்கிறார் என்பதை தெரிந்த ஓஷோ பக்தர்களை குறைவாகத்தான் இருப்பார்கள். இந்த நூல் ஓஷோவை முழுமையான கோணத்தில் அணிவதற்கு பலருக்கு உதவியாக இருக்கலாம்.
எம்.நடராஜன்












