
மேலையிசை அறிமுகப்பயிற்சி
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்
நவீன தியானம் மற்றும் உளக்குவிப்பு
தொடர்புக்கு [email protected]

பறவை பார்த்தல் வகுப்புகள்
விஷ்ணுபுரம் பறவைபார்த்தல் குழுமம் இன்று ஒரு பெரிய அமைப்பாகத் திரண்டு அனேகமாக ஆண்டு முழுக்க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பறவைபார்த்தல் வகுப்புகள் அதன் பகுதியாக தொடர்ந்து நிகழ்கின்றன. மீண்டும் வரும் அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நிகழவுள்ளன. (அக்டோபர் 2 விடுமுறை என்பதனால் மாணவர்களை கருத்தில்கொண்டு இந்த வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன)
பறவை பார்த்தல் என்பது இன்று உலகளவில் ஊக்குவிக்கப்படும் ஒரு செயல்பாடு. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு, தொடக்க நிலையிலிருந்தே அது பரிந்துரைக்கப்படுகிறது. மொழி சார்ந்த, மனப்பாடக் கல்வி சார்ந்த, கணிப்பொறி போன்ற நுண்செயல்பாடுகளால் உருவாகும் மூளைச் சோர்விலிருந்து வெளியே கொண்டு செல்லும் ஒரு வழியாக அது கருதப்படுகிறது.
பறவை பார்த்தல் இயற்கையுடனான ஓர் ஆழ்ந்த உறவை உருவாக்குகிறது. இன்று இயற்கையை ரசிப்பது பற்றி பேசப்படுகிறது. ஆனால் எவராலும் இயற்கையுடன் சும்மா அமர்ந்திருக்க முடியாது. அதிகபட்சம் சில நிமிடங்களுக்குப் பிறகு இயற்கையைக் கூட சலிப்புடன் பார்க்கத் தொடங்குவார்கள். பெரும்பாலானோர் இயற்கை அழகுள்ள இடங்களுக்குச் சென்று, அங்கு உடனடியாக செல்ஃபோனை எடுத்து, வலைத்தளங்களைப் பார்க்க ஆரம்பிப்பதை நீங்கள் காணலாம்.பறவை பார்த்தல், இயற்கையை ஓவியமாக வரைவது, தாவரங்களை அவதானிப்பது போன்ற செயல்பாடுகளின் வழியாகத்தான் நாம் நம்மை இயற்கையுடன் இணைத்துக்கொள்ள முடியும்.
நம்மை இயற்கையுடன் இணைத்துக்கொள்ளும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்மை அறியாமலேயே, நமது உள்ளம் எப்போதும் நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் மொழி ஓட்டத்திலிருந்து வெளியேறுகிறது. நாம் வெளியே நோக்கத் தொடங்குகிறோம். இயற்கையின் ஒரு பகுதியாக மெல்ல மெல்ல ஆகத் தொடங்குகிறோம்.
இது நமது அக இறுக்கத்தைத் தளர்த்தி, ஓய்வுக்குக் கொண்டு செல்கிறது. இந்த அக ஓய்வு அல்லது ஆன்மிக இளைப்பாறுதலுக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மிக அவசியமான ஒன்று. இதை ‘மூளைக்குளியல்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே இதற்குப் பயிற்சி அளிப்பது மிக முக்கியமானது. குறிப்பாக, கடுமையான மூளை உழைப்பினால் உருவாகும் சோர்வை வெல்வதற் குழந்தைகள் கணிப்பொறி விளையாட்டிலோ அல்லது அதுபோன்ற சூதாட்ட விளையாட்டுகளிலோ செல்கிறார்கள். அது அவர்களுக்கு மேலும் இறுக்கத்தையும் சோர்வையுமே அளிக்கிறது. மூளை உழைப்பிலிருந்து காணொளிகளுக்குச் செல்வதென்பது வாணலியில் இருந்து அடுப்புக்குள் விழுவது போன்றதுதான்.
அதற்காகவே இயற்கையுடன் தொடர்புடைய பறவை பார்த்தல் போன்ற செயல்பாடுகள் உலகெங்கும் ஊக்குவிக்கப்படுகின்றன. தொடர்ந்து விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுவரும் பறவை பார்த்தல் நிகழ்வுகளில் இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்போது, பெற்றோருக்கும் இயற்கையுடனான ஓர் உரையாடல் திறக்கிறது.
பறவை பார்த்தல் என்பது மூன்று நாட்களில் முடிவதில்லை. அது ஒரு தொடக்கம். அது எல்லா ஓய்வு நேரங்களையும் எடுத்துக்கொள்ளும் ஒரு செயல்பாடு. ஒரு நகரத்திலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்து சென்றால்கூட, பறவை பார்த்தலை அறிந்த ஒருவரால் இயற்கையை உணரவும், அதில் லயிக்கவும் முடியும்.
ஆர்வம் உடையவர்கள் கலந்துகொள்ளலாம்.
நாட்கள் அக்டோபர் 2, 3 மற்றும் 4
தொடர்புக்கு [email protected]

யோக வகுப்புகள்
குருஜி சௌந்தர் சத்தியானந்த யோக மரபைச் சார்ந்தவர். முறையான யோகப் பயிற்சிகளை வழங்கும் உலகப் புகழ்பெற்ற அமைப்பில், ‘முதுநிலை குரு’ எனும் பட்டம் பெற்றவர் சௌந்தர்.
இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்படும் யோகப் பயிற்சி என்பது வெறுமே யோகாசனங்களைச் செய்வது அல்ல. நூறாண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட யோகப் பயிற்சி என்பது, உள்ளத்தைக் குவித்தல் மற்றும் அதற்கேற்ப உடலைப் பயிற்சி அடையச் செய்தல் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தது. இன்று, அதற்கு இணையாகவே உள்ளத்தை அமைதிப்படுத்துதல், உடலின் தசைகளைச் சீரமைத்தல், அதன் பிறகு உள்ளத்தைக் குவித்தல், உடலைப் பயிற்றுவித்தல் ஆகிய அம்சங்களையும் கொண்டதாக யோகப் பயிற்சிகள் அமைகின்றன.
இந்த மாற்றத்துடன் கற்பிக்கப்படும் சௌந்தரின் யோகப் பயிற்சி மிகப்பெரிய பயனை அளிப்பதாக ஏராளமான நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். ஏறத்தாழ ஆயிரம் பேர் இந்தப் பயிற்சிகளின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இந்தப் பயிற்சிகள் முறையான ஆசிரியர் கண்காணிப்புடன் நடைபெறுகின்றன. தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள் ஆசிரியருடன் தொடர்ச்சியான தொடர்பிலும் இருக்க முடியும். முறையான ஆசிரியரின் கண்காணிப்புடன் தொடர்ந்து செய்யப்படும் பயிற்சிகள், தனியாகச் செய்யப்படும் பயிற்சிகளைவிடப் பெரிய அளவிலான நம்பகத்தன்மையை அளிப்பவை.
யோகப் பயிற்சிகளின் மூலம் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களை வெல்ல முடியும். உளப் பதற்றம் மற்றும் சலிப்பு ஆகியவற்றைக் கடந்து செல்லவும் முடியும். இன்று பலருக்கு இருக்கும் சோரியாசிஸ் போன்ற தோல் நோய்கள்கூட, கடுமையான மன அழுத்தத்தின் விளைவாக உருவாகலாம். அவற்றுக்கெல்லாம் தீர்வாக உலகெங்கும் யோகப் பயிற்சிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சொல்லப்போனால், உலகிலேயே சதவீத அளவில் மிகவும் குறைவானவர்கள் யோகப் பயிற்சிகளைச் செய்யும் நாடு இந்தியாதான் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் பயிற்சிகள், நவீன வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிப்பதற்கும், அவற்றை வென்று செல்வதற்கும் மிகவும் அவசியமானவை.
அக்டோபர் 9 10 மற்றும் 11
தொடர்புக்கு [email protected]
அடிப்படை ஓவியப் பயிற்சி வகுப்புகள்
(19 ஆம் தேதியும் 20 ஆம் தேதியும் பூஜை விடுமுறை. அதையொட்டி இந்த வகுப்பு சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஒருங்கிணைக்கப்படுகிறது)
அக்டோபர் 17 (சனி) ,18(ஞாயிறு) 19 திங்கள்











