பிரபந்தம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

முறையாக  நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் சில அமுதத் துளிகளைப் பாடம் கேட்க வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்உங்களுக்கும், விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும், பயிற்சி வகுப்பை திறம்பட நடத்திய ஜா ராஜகோபாலனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். “. பிரபந்த முகூர்த்தம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

தொண்டரப்பொடி ஆழ்வார்

வேத நூல் பிராயம் நூறு  மனிசர் தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும்  நின்றதில் பதினையாண்டு,

பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன்  அரங்கமா நகர் உளானே.”

என்று இந்தப் பிறவியை வெறுத்தாலும், பிரபந்தம் கேட்டு, ஆழ்ந்து அனுபவிப்பதற்கு இந்த ஒரு பிறவி போதாது என்று தோன்றுகிறது.

சிறுவயதில் மார்கழிப் பொங்கலுக்காக திருப்பாவைதான் முதல் அறிமுகம்.   திருப்பாவையிலும் வாரணமாயிரத்திலும் ‘பச்சை மா மலைபோல்என்பது போன்ற சில பாசுரங்களுடன் இசையுடன் ஆழ்ந்த அனுபவம் இருக்கிறதுசொல் மற்றும் பொருள் வளத்தால் ஈர்க்கப்பட்டு பிறகு இன்னும் சில பாடல்கள் ஆங்காங்கே படித்தவைஆனால் முறையாகக் கற்றுக் கொண்டதில்லை.

ராஜகோபாலன் அருமையாக பக்தி இலக்கியத்தின் வரலாற்றுப் பார்வை என்ற பின்புலமும், ஸ்ரீ வைஷ்ணவ தத்துவம்/ சித்தாந்தம் என்று ஒரு அடித்தளமும் அமைத்துக் கொடுத்தார். பிறகு எப்படி சொல்லழகு, நாடகீயம், தத்துவப் பொருள் என்று மூன்று வேறு தளங்களில் பாசுரங்களை வாசிக்கும் முறையை விளக்கினார்.

பாசுரங்களின் சொல்லழகு சொல்லி முடியாது. அழகான சொற்சேர்க்கைகளும், உவமைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஒளி வீசுகின்றன. நான் சேகரித்த சில முத்துகள்..

ஒருங்கு ஒத்த இணை ( identical pair  ), ஒத்து இலக ( in harmony) ,

கறவைகள் பின் சென்று ( மாடு மேய்ப்பவர்கள் அவற்றின் பின்னே செல்வார்கள், ஆடு மேய்ப்பவர்கள் முன்னே செல்வார்கள் )

மழை பட்டதும் விழும் காய்ந்த எருக்கம் இலை

புண்ணில் புளி

அறியும் செந்தீயைத் தழுவி ( தீக்குள் விரலை வைத்தால்…)

வாள்கள் ஆகி நாள்கள் செல்ல ( வாள்கள் வேகமாக வீசுவது போல நாட்கள் பறக்கின்றன)

உழைக்கு ஒர் புள்ளி மிக அன்று (புள்ளிமானுக்கு உடம்பில் இன்னும் ஒரு புள்ளி ஏறினால் என்? அத்தனை பாவங்களை செய்திருக்கும் நான் இன்னொன்று செய்தால் பொறுத்து ஆள மாட்டாயா ?”)

இருகண் இள மூங்கில் ( ஆண் யானை மூங்கிலின் கோப்பையில் தேன் எடுத்து பெண் யானைக்கு அன்புடன் கொடுக்குமாம் )

பெரியாழ்வார் கண்ணனுக்கு பாலூட்டும் தருணம், குழல் கேட்கும் தருணம், தவழ்ந்து வரும் குழந்தையை எடுத்து அணைப்பது என்று உச்ச உணர்வுகளை யசோதயாக மாறி அருளி இருக்கிறார்.

மாலோலன் ஒரு அதிசயப்பிறவி, நாலாயிரம் பாடல்களிலும் எந்த அடியைக் கொடுத்தாலும் முழுப் பாடலைச் சொல்லுகிறார், எந்த வரிசை என்று கணப் பொழுத்தில் அடையாளம் சொல்லுகிறார், எத்தனை வருடப் பயிற்சி ! அவர் மரபுப் படி பிரபந்தங்களைச் சேவித்தது நிறைவாக இருந்தது.

பிரபந்தம் சேவிக்கும்போது வல்லினவை அழுத்தினால், பெருமாளுக்கு காதில் இனிமையாக விழாது என்று மென்மைப் படுத்திஎன்றுஎன்பதற்கு பதில்என்னு’, ‘ஏற்றம்என்பதற்குஏத்தம்’, இப்படியாக பெருமாளை பாவிப்பது என்ன அழகு !

ராஜகோபாலன் இப்படியாக சொற்சுவை, பொருள்சுவை, உட்பொருள் சுவை, தத்துவ விளக்கம் என்று எல்லாவற்றையும் அளந்து நிரவிக் கொடுத்தார். தத்துவத்தில் சிக்கலான  சேஷ சேஷித்வம், சௌசீல்யம், ப்ரபத்தி என்பது போன்றவற்றையும் எளிதாக பாடலுடன் விளக்கி எங்களுக்கு தேனுடன் மருந்தாக அளித்தார். வந்திருந்தவர்களில் சிலர் ப்ரபந்தங்களில் புத்தகம் எழுதியவர்கள், ஆழ்ந்தவர்கள், சிலர் ஆரம்ப அறிமுகமும் இல்லாதவர்கள். அப்படிப் பட்ட ஒரு குழுவுக்கு, எல்லோருக்கும் மனம் நிறையும்படி ஒரு நிகழ்ச்சி நடத்துவது முடியாத காரியம். ஆனால் அதை ராஜகோபாலன் பாராட்டும்படி அழகாகச் செய்தார்.

அந்தியூர் மணி எல்லா ஏற்பாடுகளை செய்து, அவ்வப்போது சைவ சித்தாந்த விளக்கங்களும், ஓய்வு வேளையில் நட்பு வாதங்களுமாக நேரம் செல்வதே தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

அன்னபூரணியாக மூன்று வேளையும் பரிவுடன் பார்த்துக் கொண்ட திருமதி சரசுவதிக்கு எங்கள் நன்றிகள்.

நூறு தடா அக்கார அடிசில் என்று விளக்கம் கேட்டு, சிலர் அக்கார அடிசில் சுவைத்ததில்லை என்று பேசிக் கொண்டிருக்க, ஈரோடு பாலாஜி மறு நாள் காலை வீட்டிலிருந்து வரவழைத்து விட்டார் ! அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நன்றிகள்.

பிரபந்தமும், நண்பர்கள் குழுவும், மலைத் தங்குமிடமாக  இனிமையான நினைவுகளுடன், பிரபந்த வாயில் திறந்தது, இன்னும் திளைக்க ஆசை, அவன் அருளால் ஆகட்டும் !

 நன்றி,

தருணாதித்தன்

முந்தைய கட்டுரைநவீன ஓவியக்கலையை அறிய
அடுத்த கட்டுரைபிரபந்தக் கல்வி, கடிதம்