அன்புள்ள ஆசிரியர் ஜெ அவர்களுக்கு,
வணக்கம்.
சமயங்களில் நாம் ஒன்றுக்குள் நுழைய நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்வதுண்டு. ஒருவர் பின் ஒருவராக நின்று, முன்னால் இருப்பவரை எப்படியேனும் முந்திவிடும் மும்முரத்துடன், பின் இருப்பவரை விட ஒரு படி முன் இருக்கிறோம் எனும் ஆசுவாசத்துடன்.
அவ்வரிசையின் ஓர் பகுதியாக, அதன் சலனங்களையும், அலைகளையும் அப்படியே பிரபலித்துக் கொண்டு, அதனாலேயே அந்த வரிசையில் சிக்குண்டு, அடிமேல் அடிவைத்து, நாட்கள் வாரமாக, மாதமாக, வருடங்களாக காத்திருந்து, இறுதியில் நுழைவாயிலை அடைந்து உள்ளே செல்ல எத்தனிக்க, வாயிலில் ஒருவர் பக்கத்திலிருக்கும் ஆளரவமற்ற மற்றோரு வரிசையை சுட்டிக்காட்டி அதுதான் நீங்கள் நுழைய வேண்டிய வாயில் என சொன்னால் எப்படி இருக்கும்?
நவீன ஓவியக்கலை வகுப்பில் நான்/நாங்கள் உணர்ந்தது அதையே. இதிலும் என் மனைவி பாக்கியசாலி. என்னை விட ஐந்து வருடங்கள் முன்னரே சரியான வாயிலை அடையாளம் காணும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.
ஆசிரியர் மணிகண்டண் முதலில் எம்முள் இருந்த கலை என்பதன் வரையரையை உடைத்து தும்புகளாக தெரிக்கவிட்டபின், அந்த உடைவிலிருந்து வேறு ஒரு அடித்தளத்தை எழுப்ப உதவினார். முந்தையதற்கும் இதற்குமான வித்தியாசம், இதை யாரும் எமக்குள் எழுப்பவில்லை. மாறாக ஒவ்வொரு கல்லாக இதனை நாங்களே எழுப்பிக்கொண்டிருந்தோம்.
கட்டுமானத்திற்கான கச்சாப்பொருட்களை வழங்குவதில் ஆசிரியர் மணிகண்டன் காட்டிய முனைப்பு எங்களை திகைக்கவைத்தது. ஒரு நாள் மூன்றாக பகுக்கப்பட்டு வகுப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒன்று – வகுப்பரையில், இரண்டு – தேனீர் இடைவேளையில், மூன்று – உணவு இடைவேளையில். தொய்வில்லாத, சோர்வில்லாத விளக்கங்கள், வழிகாட்டல்கள், சந்தேகத்திற்கான தீர்வுகள்.
பலாப்பழத்தை பிளந்து சுளைகளை எடுக்க, எடுக்க எண்ணியிராத திசைகளிலிருந்தெல்லாம் பெருகி வருவதைப்போல் ஒன்றிலிருந்து ஒன்றிலென பெருகி வரும் சிந்தனைத் தொடர்ச்சிகள். சிந்தனையின் பிரதிபலிப்பென கலைப் படைப்புகள், கலைப் படைப்புகளின் பல்வேறு சாத்தியங்கள், சாத்தியங்களின் உச்சத்தில் நிகழும் உடைவு அல்லது நிறைவு, அதிலிருந்து மேலெழும் அடுத்த சிந்தனை, அதன் சங்கிலித் தொடர் நிகழ்வு என மொத்த மேற்கத்திய சிந்தனைப் பரிணமத்தின் சித்திரத்தை எங்களின் முன் நிறுத்தினார்.
இவ்வளவிற்கு பின்னும் ஒழியாத அவர் பாத்திரத்தைப் பார்த்தபடி நேரமின்மையின் பதட்டத்துடன் ஆசிரியர் இருக்க, எப்போதோ நிரம்பி வழிந்த பாத்திரங்களுடன், இன்னும் இயன்றதையேல்லாம் அள்ளி நிரப்பிக்கொள்ளும் வேகத்துடன் நாங்கள் இருந்தோம். அள்ளி அளிக்கும் பெருங்கருணைமுன் கொள்ள வழியற்று எங்கள் எளிமையை உணர்ந்து நின்ற கணம் அது.
இம்மூன்று நாட்களில் கற்றதை தொகுத்துக் கொண்டிருக்கிறோம். ஆசிரியரின் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து முன் செல்ல முனைப்பு கொண்டுள்ளோம்.
எங்களுக்கு கற்பித்த ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கும், இவ்வாய்ப்பினை அளித்த தங்களுக்கும் நன்றி என எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உணர்கிறேன் ‘நன்றி’ எனும் இவ்வரிவடிவம் உருவாக்கும் பொருளின் எல்லைகளை.
ஒருவேளை அளவிலா சாத்தியங்களை அளிக்கும் ஒரு image-ஐ நன்றி எனும் வார்த்தைக்கு பதிலாக எங்களால் கண்டுகொள்ளவோ அல்லது உருவாக்கவோ முடியும் என்றால் அன்று பெருமையுடன் சொல்லிக் கொள்வோம் நாங்கள் உங்கள் மாணவர்கள் என்று.
பணிவன்புடன்,
லக்ஷ்மிகாந்த் – ஜெய்ஶ்ரீ